
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பாபா’ திரைப்படம் மீண்டும் வெளியாகவிருக்கிறது என்ற தகவல் சமீபத்தில் வெளியானது. அதையடுத்து ரசிகர்கள், ஊடகங்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் என எல்லா தரப்பிலும் எதிர்பார்ப்பு அதிகரித்தது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளன்று ஒரே ஒரு காட்சியாக திரையிட திட்டமிட்ட குழுவினர், படத்திற்கு ஏற்பட்டிருக்கும் பெரும் எதிர்பார்ப்பினை கண்டு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் பல திரையரங்குகளில் வெளியிட தீவிரமாக யோசித்து வருகின்றனர்.
DI, மிக்ஸிங் போன்ற தொழில்நுட்ப மாற்றங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. இதுதவிர, படத்தின் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான், படத்தின் முன்னோட்டத்தை தான் முதலில் பார்வையிடுவதற்கு கோரிக்கை வைத்துள்ளார். இதன் மூலம், தன்னால் படத்தின் இசையினை மேலும் மேம்படுத்த இயலுமா? என்பதனை அவர் பார்வையிட உள்ளார்.
சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புதிய காட்சிகளுக்கு டப்பிங் பேசியிருந்தார். சூப்பர் ஸ்டார் மற்றும் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா ஆகிய இருவரும் பாபாவின் மறுவெளியீட்டுக்கான எதிர்பார்ப்பு மற்றும் அபரிமிதமான வரவேற்பினை கண்டு மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் வெளிப்படுத்தினர்.