தனது தம்பியை கொன்றவனை பழி வாங்க போகும் சசிகுமார் அங்கே எதிரிகளின் கூலிப்படை கும்பலில் சிக்கிக் கொள்கிறார். பிறகு என்னவானது சசிகுமார் தனது தம்பியை கொன்றவனை பழி வாங்கினாரா? அவர்களிடமிருந்து எப்படி தப்பித்தார் என்பது படத்தின் கதைக்களம்.
சவுண்ட் இன்ஜினியராக வரும் “சசிகுமார்” தனக்கு கொடுக்கப்பட்டுள்ள வேடத்தை சிறப்பாக செய்துள்ளார். அனல் பறக்கும் சண்டை காட்சிகளில் தனது ஆக்ரோஷமான நடிப்பால் மிரட்டியிருக்கிறார். இதை தவிர ரசிக்கும் படியான காட்சிகள் எதுவும் அமையவில்லை. விக்ராந்திற்கு ஒரு நல்ல வேடம் அதை நன்றாக செய்திருக்கிறார். மற்றபடி அவருடைய கதாபாத்திரம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
ரத்தம்,கத்தி,கொலை என படம் முழுக்க பயங்கர வன்முறை காட்சிகள். பொதுவாக ஒரு படத்தில் வன்முறை காட்சிகள் இடம் பெறுவதை நாம் பார்த்திருப்போம், ஆனால் இதில் வன்முறைக்குள் ஒரு சின்ன கதையை சொல்லி இருக்கிறார்கள், அந்த அளவிற்கு ரத்தம் சொட்ட சொட்ட வெறி கொண்டு பழிவாங்கும் ஒரு கதைக்களம்.
ஜிப்ரானின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. பாடல்கள் எதுவும் இடம்பெறவில்லை. இரவு நேர காட்சிகளுக்கு இசைதான் உயிர் கொடுத்துள்ளது.
