பனாரஸ் கன்னடத்தில் தயாராகி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு பான் இந்தியா படமாக வெளிவந்துள்ள படம்.
காதலையும், அறிவியலையும் கலந்து ஒரு ‘சயின்ஸ் லவ்’ படமாகக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஜெயதீர்த்தா ‘டைம் லூப்’ விஷயத்தை பனாரஸ் படத்தில் காதலுக்காகப் பயன்படுத்தி இருக்கிறார் இயக்குனர்.
ஜயித் கான் ஒரு பணக்கார வீட்டுப் பையன். கல்லூரியில் படித்து வருகிறார். நண்பர்களுடன் சவால் விட்டு டிவி ஷோக்களில் பிரபலமான சோனல் மோன்டிரோ-விடம் ‘டைம் மிஷின்’ மூலமாக எதிர்காலத்திலிருந்து வருகிறேன் என நம்பும்படி பொய் சொல்கிறார். சோனல் வீட்டு பெட் ரூமிற்குச் சென்று ஒரு செல்பி எடுத்து நண்பர்களுடன் போட்ட சவாலில் வெல்கிறார். அந்த செல்பி வைரலானதால் சோனல் அவமானத்தை சந்திக்கிறார். பெற்றோர் இல்லாத சோனல், பனாரஸில் இருக்கும் சித்தப்பா வீட்டிற்குச் செல்கிறார். அவரைத் தேடி பனாரஸ் சென்று மன்னிப்பு கேட்க அலைகிறார் ஜயித் கான். ஜயித்தின் மன்னிப்பை சோனல் ஏற்றாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
ஹீரோ ஜையீத்கான் முதல்படம் என்ற சுவடு தெரியாமல் நடிக்க முயற்சித்துள்ளார். ஹீரோயின் சோனல் மோண்டோரியோ அழகிலும் நடிப்பிலும் கவர்கிறார். .பனாரஸ் படத்தின் முதல் ப்ளஸ் ஒளிப்பதிவு. காசியின் பேரழகை அழகியலோடு படம் பிடித்திருக்கிறது அத்வைதா குருமூர்த்தியின் கேமரா. அடுத்ததாக படத்தின் பாடல்களில் அம்மா செண்டிமெண்ட் பாடல் ஒன்று கதையோடு ஒட்டி வருவதால் மனதில் ஒட்டிக்கொள்கிறது. பின்னணி இசையிலும் ஓரளவு கவனம் ஈர்க்கிறார் இசை அமைப்பாளர் பி.அஜனீஸ் லோக்நாத்
காதல் கதையைச் சொல்வதா..டைம்லூப் மேட்டரில் பயணிப்பதா என்ற குழப்பம் படமெங்கும் இருப்பது சின்ன மைனஸ். எந்த எதிர்பார்ப்புமில்லாமல் சென்றால் ஓரளவு பனாரஸை ரசிக்கலாம்