ஷூ படத்தில் யோகி பாபு, திலீபன், ரெடின் கிங்சிலே, ஜார்ஜ் விஜய், விஜய் டிவி பாலா போன்றோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவ்வளவு பேர் இருப்பினும் குழந்தைகளை சுற்றியே இக்கதை நகர்கிறது.
ஷூ வடிவில் டைம் மெஷின் ஒன்றை கண்டுபிடிக்கிறார் திலீபன், அதனை சோதனை செய்யும் போது எதிர்பாராத விதமாக போலீசில் மாட்டிக் கொள்கிறார். மறுபுறம் ஒரு கும்பல் குழந்தைகளை விலைக்கு வாங்கி அவர்களை விபச்சாரத்திற்கு உட்படுத்துகிறது, மறுபுறம் தாய் இல்லாத குழந்தை குடிகார அப்பாவிடம் இருந்து கஷ்டப்படுகிறது. இவர்கள் மூன்று பேரையும் அந்த ஷூ ஒரு கட்டத்தில் இணைக்கிறது, பிறகு என்ன ஆனது என்பதே இப்படத்தின் கதை.
கல்யாண் இயக்கியுள்ள இப்படம் டெக்னிக்கலாக சிறப்பாக உள்ளது. படத்தில் உள்ள நடிகர்களைப் போலவே டெக்னீசியன்களும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று ஒவ்வொருவராக பார்த்து பார்த்து அமைத்துள்ளார். இசையமைப்பாளர் சாம் சி எஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். யோகி பாபு, ரெடின், பாலா ஆகியோர் இணைந்து வரும் காட்சிகள் நன்றாக இருந்தது. இருப்பினும் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு காட்சிகளை புதுமைப்படுத்தி இருக்கலாம்.
தன் அம்மாவின் புகைப்படத்தை காண காலையிலிருந்து மாலை வரை காத்திருந்து கடைசியில் ஏமாற்றம் அடையும்போது அந்த குழந்தையின் நடிப்பு மிகவும் நன்றாக இருந்தது, படம் முழுவதும் எதார்த்தமான நடிப்பையே கொடுத்திருந்தார். ஷூ தான் படத்தில் முதன்மை கதாபாத்திரமாக இருந்தாலும் அதனை இன்னும் சில காட்சிகளில் பயன்படுத்தி இருக்கலாம். சாம் சிஎஸ் இசையில் பின்னணி இசையும் அம்மா பாடலும் ரசிக்கும்படியாக இருந்தது. 1 மணி நேரம் 52 நிமிடம் மட்டுமே ஒடும் இந்த கதை பெரிதாக போர் அடிக்காமல் நகர்வது படத்திற்கு கிடைத்த வெற்றி.