சென்னையில் இளம்பெண் சத்யா கொலை செய்யப்பட்ட நிலையில் அவரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் பலரும் கண்ணீர்விட்டு அழுதனர்.
விஷயம் அறிந்து அப்பகுதி மக்கள் பலர் மாணவியின் உடலுக்கு வந்து அஞ்சலி செலுத்தினர். மாணவியின் கல்லூரி தோழிகள் வீட்டிற்கு வந்து கண்ணீர்விட்டு கதறி அழுதனர்.
நேற்று பரங்கிமலை ரயில் நிலையத்தில் சத்யா என்ற பெண் அவரை ஒருதலையாக காதலித்து வந்த சதீஷ் என்ற இளைஞரால் கொலை செய்யப்பட்டார்.இந்த சம்பவம் தமிழ் நாட்டையே உலுக்கி உள்ளது. ஒரு தலை காதலுக்கு ஒப்புக்கொள்ளவில்லை என்று கூறி சத்யாவை சதீஷ் கொன்றுள்ளார். இந்த சதீஷ் போதை பழக்கத்திற்கு அடிமையானதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சத்யாவின் அப்பா மாணிக்கம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தார். சதீஷின் அப்பா தயாளன் முன்னாள் எஸ்.ஐ. இவர்கள் ஆதம்பாக்கம் இருவரும் போலீஸ் குடியிருப்பில்தான் வசித்து வந்துள்ளனர். போலீஸ் குடியிருப்பில் சத்யாவை பார்த்த சதீஷ் பல வருடங்களாக அவரை காதலித்து வந்துள்ளார். ஒரே குடியிருப்பு என்பதால் இவர்கள் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
சத்யா தனியார் கல்லூரியில் படித்து வந்த நிலையில், கடந்த பல வருடங்களாக அவரை சதீஷ் ஒரு தலையாக காதலித்து உள்ளார். சத்யா செல்லும் வழியில் எல்லாம் சதீஷ் சென்று, அவரை அடிக்கடி தொந்தரவு செய்துள்ளார். குடியிருப்பில் அடிக்கடி பார்த்து காதலை சொல்லி இருக்கிறார்.
ஒரு தலைக் காதல் என்பது ஒரு கட்டத்தில் டார்ச்சராக மாறி உள்ளது. ஆங்காங்கே ஈவ் டீசிங் செய்வது போல ஒருதலைக்காதல் மோசமாக மாறி உள்ளது. கல்லூரிக்கு தனியாக செல்லும் போது, திரும்பி வரும் போதெல்லாம் காதலை சொல்லி இருக்கிறார். இந்த ஒருதலைக் காதல் காரணமாக மது உள்ளிட்ட போதை பொருள் பழக்கத்திற்கு சதீஷ் ஆளாகி இருக்கிறார்.
இந்த விஷயம் இரண்டு குடும்பங்களுக்கும் தெரிந்து பிரச்சனை ஆனது. இதனால் கோபத்தில் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கிறார் சதீஷ். இந்த நிலையில்தான் சத்யா காதலை ஏற்றுக்கொள்ளாத கோபத்தில் நேற்று சதீஷ் அவரை கொலை செய்தார். பரங்கிமலை ரயில்நிலையத்தில்ரயிலுக்காக சத்யா காத்திருந்த போது, சதீஷ் அவரை ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்தார். இதில் உடல் இரண்டாகி சத்யா சம்பவ இடத்திலேயே பலியானார்.
இன்னொரு பக்கம் சத்யாவின் தந்தை மாணிக்கம் திடீரென இன்று அதிகாலை மரணம் அடைந்தார். அவருக்கு ஏற்கனவே ஒருமுறை மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் இன்று காலை அவர் அதிர்ச்சியில் மாரடைப்பு காரணமாக பலியானதாக கூறப்பட்டது.ஆனால் சத்யாவின் அப்பா மாணிக்கம் மதுவில் விஷம் கலந்து தற்கொலை செய்து கொண்டது பிரேத பரிசோதனையில்தான் தெரிய வந்தது.
இந்த நிலையில் பிரேத பரிசோதனை முடிந்து இருவரின் உடலும் ஒன்றாக ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இருந்து அவர்களின் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு உறவினர்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டு இருந்தது. சத்யாவின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரால் எழுந்து கூட நடக்க முடியவில்லை. இந்த நிலையில் இரண்டு உயிர்களை இழந்துவிட்ட துக்கத்தில் அவர் ஒரு ஓரமாக படுத்துக்கிடந்தார்.
இந்த நிலையில் இன்று சத்யாவின் உடலை பார்க்க அவரின் குடியிருப்பு பகுதிக்கு மாணவிகள் பலரும் வந்து இருந்தனர். அவருடன் சேர்ந்து கல்லூரியில் படிக்கும் மாணவிகள் பலர் குடியிருப்பு பகுதிக்கு வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
சத்யா எங்களை விட்டு போகாத என்று கதறியபடி அவரின் உடல் அருகே நின்று கண்ணீரிட்டனர். மாணவிகள் பலர் சத்யாவின் இறுதிச்சடங்கில் கூடவே நடந்து சென்றனர். அப்பா – மகள் இருவரின் உடல்களும் ஒரே வண்டியில் வைத்து எடுத்து செல்லப்பட்டது அங்கு இருந்த பலரின் இதயங்களை நொருங்கியது.
உறவினர்கள், நண்பர்கள் மட்டுமின்றி விஷயம் அறிந்த அப்பகுதி மக்கள் பலர் மாணவியின் உடலுக்கு வந்து அஞ்சலி செலுத்தினர்.