Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

குண்டான் மலை நிச்சயம் வெற்றி கொண்டான் மலை - தயாரிப்பாளர் கே.ராஜன் பாராட்டு

குண்டான் மலை நிச்சயம் வெற்றி கொண்டான் மலை – தயாரிப்பாளர் கே.ராஜன் பாராட்டு

Posted on August 23, 2022 By admin

ராஜீவ் காந்தி தயாரிக்க, திருப்பூர் குமரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் குண்டான் மலை படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று (19.08.2022) நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படக்குழுவினர்கள் பேசியதாவது :

தயாரிப்பாளர் ராஜீவ் காந்தி பேசும்போது,

எங்கள் பயணம் கொரோனா காலத்தில் இருந்து ஆரம்பமானது. குறும்படமாக ஆரம்பித்து பெரிய திரைப்படமாக உருவாகிவிட்டது. மன்மதராசா பாடலுக்கு நடனமாடினேன். அப்போதுதான் தீனா சார் அறிமுகம். இந்த படத்தின் பட்ஜெட் சிறிது சிறிதாக ஆரம்பித்து பல லட்சங்களைத் தாண்டி விட்டது. இருப்பினும் அனைவரின் உழைப்பினால் படம் நன்றாக வந்துள்ளது. எங்கள் குழுவின் சார்பாக அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

ஒளிப்பதிவாளர் அன்னை செல்வா பேசும்போது,

இப்படம் சிறிது சிறிதாக ஆரம்பித்து 32 நாட்களில் உருவாகியிருக்கிறது. கோபிச்செட்டி பாளையம், உடுமலைபேட்டை, தேனி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம் என்றார்.

கவிஞர் ஆபா பேசும்போது,

நான் கவிஞர் ஆபா, என்னை நான் தான் அறிமுகப்படுத்த வேண்டும். இப்படத்தில் பாடலாசிரியர் மற்றும் வசனகர்த்தாவாக பணிபுரிந்திருக்கிறேன். அந்த திருப்பூர் குமரன் தாய்நாட்டுக் கொடியை கீழே விழாமல் பிடித்திருந்தார். இந்த திருப்பூர் குமரன் சினிமாவில் தன் கொடியை நிலைநாட்ட குண்டான் மலை மூலம் முயற்சி எடுத்திருக்கிறார்.

இந்த படத்தின் கதாபாத்திரத்தை ஒவ்வொன்றாக பிரித்து மேய்ந்து கொண்டிருந்தோம். ஆனால், வில்லன் கதாபாத்திரத்திற்கு நீங்கள் நடியுங்கள் என்று இயக்குனர் கூறினார். நான் வெறும் பேச்சுக்குத் தான் என்று நினைத்தேன். ஆனால், 20 நாட்கள் கழித்து படப்பிடிப்பிற்கு வாருங்கள் என்று அழைத்தபோது தான் நம்பிக்கை வந்தது.

திருப்பூர் குமரன் இப்படத்தில் எனது நடிப்பைப் பார்த்துவிட்டு கலை நாயகன் என்ற பட்டம் கொடுத்திருக்கிறார். ஓடு ஓடு என்ற பாடல் நன்றாக வந்திருக்கிறது. நானும் இசையமைப்பாளரும் இன்னும் நிறைய பயணிக்க வேண்டும். எனது அம்மாவின் ஒத்துழைப்பில்லாமல் என்னால் இயங்க முடியாது. இந்த நேரத்தில் அவருக்கு நன்றி கூறிக் கொள்கிறேன்.

திரைப்படத்தில் இதுவரைக்கும் நன்றாக இருப்பவரை மாற்றுத் திறனாளியாக காட்டியிருக்கிறார்கள். மாற்றுத் திறனாளிகளை மாற்றுத் திறனாளிகளாகவே காட்டியிருக்கிறார்கள். ஆனால், இந்த படத்தில் மாற்றுத் திறனாளியான என்னை இயக்குனர் சவாலாக எடுத்துக்கொண்டு நடப்பது போன்றும், ஓடுவது போன்றும் காட்டியிருக்கிறார் இயக்குனர் என்றார்.

நடிகர் மகேந்திரன் பேசும்போது,

இந்த வாய்ப்பு கொடுத்தது திருப்பூர் குமரன். அவர் எனக்கு அண்ணன் அல்ல, அப்பாவிற்கும் மேலானவர். என்னைப் போன்ற பலருக்கு வாய்ப்புக் கொடுத்து நடிக்க வைத்திருக்கிறார். எல்லோரையும் பாகுபாடு பாராமல் ஒரே மாதிரி நடத்துவார். இப்படம் உருவாக முக்கிய காரணம் ஆபா சார் தான். நான் சாதாரண செங்கல் சூலை டிரைவர் தான். என்னிடம் இருக்கும் நடிப்புத் திறமையை வெளியே கொண்டு வந்தவர் திருப்பூர் குமரன் தான் என்றார்.

நடிகை சோனியா பேசும்போது,

சித்த மருத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட படம் குண்டான் மலை. இப்படத்தை அனைவரும் குடும்பமாக சேர்த்து தன் உருவாக்கியிருக்கிறார்கள் என்றார்.

நடிகர் அங்கமுத்து பேசும்போது,

திருப்பூர் குமரன் அதிகம் பேசமாட்டார். ஆனால், நினைத்ததை சாதித்துக் காட்டி விடுவார். அப்படி குறுகிய காலத்தில் உருவான படம் தான் குண்டான் மலை. முன்பெல்லாம் வெற்றிகரமான 6வது வாரம் என்று வரும். இப்போது வெற்றிகரமான 6வது நாள் என்று மாறியிருக்கிறது. ஆனால், வெற்றிகரமான 6வது மணி நேரம் என்றாகிவிடக் கூடாது என்று வேண்டிக் கொள்கிறேன்.

இப்படத்தில் வயதான புரபசர் கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார். அவரின் வழிகாட்டுதலோடு சிறப்பாக நடித்திருக்கிறேன். கோபிசெட்டி பாளையம் போன்ற இடங்களில் படப்பிடிப்பி நடந்தது. எல்லா இடங்களிலும் எங்களுக்கு என்ன தேவையோ அதை சிறப்பாக செய்தார்கள். மலை மீது 2 கிலோமீட்டர் ஒரே ஆளாக அத்தனை பேருக்கும் சாப்பாடும், தண்ணீரும் சுமந்து வந்த மகேந்திரனுக்கு நன்றி. சாப்பாடு செய்தது கொடுத்தது இப்படத்தின் கதாநாயகி வெண்மதியின் அம்மா தான், இந்த நேரத்தில் அவருக்கு நன்றி. சிறுசிறு பொருளாதார தடை வந்தாலும், ஒரு வாரம் கழித்து மீண்டும் தொடங்குவோம்.

இப்படத்தில் இணை இயக்குனராக பெயர் போட்டு வாய்ப்புக் கொடுத்த திருப்பூர் குமரன் அண்ணனுக்கு நன்றி. கவிஞர் ஆபா கூற நான் எழுதினேன். அதேபோல், அனைவருக்கும் வசனங்கள் சொல்லிக் கொடுக்கும் வாய்ப்பும் இயக்குனர் கொடுத்தார் என்றார்.

இணை தயாரிப்பாளர் அஜய் அருண் பேசும்போது,

இப்படத்தில் நான் கதாநாயகனாக நடித்திருக்கிறேன். எனக்கு பொறுமையாக வசனம் சொல்லிக் கொடுத்த கவிஞர் ஆபா சாருக்கு நன்றி என்றார்.

சொற்கோ கருணாநிதி பேசும்போது,

திருப்பூர் குமரன் இன்னும் பல உயரங்களுக்கு செல்வார். தயாரிப்பாளர் ராஜன் கொடை வள்ளல், அவர் ராஜன் அல்ல தெய்வம். பல கோடி சம்பாரிப்பவர்களுக்கு பிறருக்கு கொடுக்கும் மனது இருக்காது, ஆனால், தன்னிடம் இருப்பதை பிறருக்கு கொடுத்து உதவுவதில் சிறந்தவர். இப்படம் மாபெரும் வெற்றியடைய வேண்டும் என்றார்.

தயாரிப்பாளர் இஸ்மாயில் பேசும்போது,

சிறிய படங்களைப் பார்க்கக் கூடிய நேரங்களில் ஒளிபரப்பினால் தான் அனைவரிடமும் சென்று சேரும். ஆகையால், எங்களைப் போன்ற சிறிய தயாரிப்பாளர்களுக்கு நீங்கள் தான் உதவிபுரிய வேண்டும். ஒரு வருடத்திற்கு சுமார் 300 படங்களில் 200 படங்கள் தான் தணிக்கைச் சான்று பெற்று வெளியாகிறது. அப்படி வெளியாகும் படங்களின் தயாரிப்பாளர்கள் அடுத்து எத்தனை படம் தயாரிக்கிறார்கள்? ஆகையால், காலை 10 மணி, இரவு 10 மணி நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில் திரையரங்கில் வெளியாக அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

சினிமா நம்மோடு உயிராக இருக்கிறது. அப்படிப்பட்ட சினிமா வளருவதற்கு எங்களைப் போன்ற சிறியவர்களுக்கு உதவி செய்யுங்கள். புதுமுகங்ளை அனைவரும் வரவேற்க வேண்டும் என்றார்.

இயக்குநர் பாரதிகணேசன் பேசும்போது,

1 வருடம் ஓடிய சினிமா இன்னிக்கு 1 மணி நேரம் அல்லது வெளியாவதே பெரிய விஷயமாக இருக்கிறது. மாற்றுத் திறனாளியை நடக்க வைத்து, ஓட வைத்து மூன்றாவது கோணத்தில் சிந்தித்த இயக்குனர் திருப்பூர் குமரனுக்கு வாழ்த்துகள்.

சிறிய படங்களுக்கு கில்ட் மூலம் ஆதரவு தருவது ஜாகுவார் தங்கம், அவருக்கு நன்றி என்றார்.

வழக்கறிஞர் யாதவ் பேசும்போது,

திருப்பூர் குமரனை முதலில் பார்த்தபோது, மிகவும் சாதாரண மனிதர் என்று நினைத்தேன். இப்படத்தைப் பார்க்கும்போது பெரிய சாதனை படைத்திருக்கிறார் என்று தெரிகிறது. இப்படத்திற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்றார்.

இசையமைப்பாளர் ராஜேஷ் சாமிநாதன் பேசும்போது,

இங்கு நிற்க காரணமான எனது குருநாதன் சங்கர் கணேஷ் அவர்களுக்கு நன்றி. இன்று இசையமைப்பாளராகவும், தயாரிப்பாளராகவும் இருப்பதற்கு காரணமாக இருந்த எனது குடும்பத்திற்கு நன்றி. அவ்வப்போது ராஜன் சார் அனுப்பும் குறுஞ்செய்தி தான் தயாரிப்பாளராக ஒரு கை பார்த்து விடலாம் என்ற நம்பிக்கையை வளர்த்தது. இன்று தான் நான் தயாரிக்கும் முதல் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. சங்கர் கணேஷ் அவர்களை அப்பா என்று தான் அழைப்பேன். சிறு வயது முதல் அவர் வீட்டில் தான் வளர்ந்தேன். அவர் வீட்டில் ராஜேஷ் இல்லாமல் எந்த விழாவும் நடக்காது.

என்னுடைய இசைப்பயணத்திற்கு பக்கபலமாக இருந்தது தீனா அண்ணா தான். அழைத்ததும் உடனே வந்த சங்கர் கணேஷ் அப்பாவிற்கு நன்றி என்றார்.

இசையமைப்பாளர் தீனா பேசும்போது,

பான் இந்தியா படங்கள் நிறைய பார்த்திருக்கிறோம். ஆனால், இப்படம் பான் தமிழ்நாடு படம் போல் இருக்கிறது. சேலம், கோயமுத்தூர், ஆத்தூர் என்று அனைத்து மாவட்டங்களில் இருந்தும் நடித்திருக்கிறார்கள். நான் திருடா திருடி படத்தில் பணியாற்றிய குழு போல் இருக்கிறது.

ராஜன் ஏன் உதவி செய்கிறார் என்றால், அவர் பசியை நன்றாக அறிந்தவர் என்பதால் தான். படங்களின் பட்ஜெட்டிற்கு ஏற்றாற்போல் டிக்கெட் விலையில் 120 ரூபாய் என்றில்லாமல், 60 ரூபாய் என்று ஸ்லேப் சிஸ்டம் செய்து கொடுத்தால் அனைவரும் சென்று பார்ப்பார்கள்.

எந்த படமாக இருந்தாலும், முதல் நாளிலேயே வியாபாரம் செய்ய முடியும். அந்த சூட்சுமத்தை சிறிய படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

சொற்கோவும் உதவி கேட்டால் உடனே செய்யக் கூடிய மனிதர். ராஜேஷ் கொரோனா காலகட்டத்தில் ஊர் ஊராக சென்று சுமார் 1 லட்சம் பேருக்கு அரிசி மூட்டை கொடுத்தார்.

இப்படம் மாபெரும் வெற்றிபெற வாழ்த்துகள் என்றார்.

நடிகர் ரஞ்சன் குமார் பேசும்போது,

சிறிய படமாக இருந்தாலும், சிறப்பாக வருவதற்கு போராடியவர் இயக்குனர் திருப்பூர் குமரன். அதை நான் கண்ணால் கண்டிருக்கிறேன். அவரின் போராட்டத்திற்கு இப்படம் மாபெரும் வெற்றிபெற வாழ்த்துகள் என்றார்.

இயக்குனர் பாலி ஸ்ரீரங்கம் பேசும்போது,

தலைவர் கலைஞர் திரைப்பட உலகில் இயக்குனராக அறிமுகப்படுத்தினார். அதேபோல், சொற்கோ கருணாநிதி டாக்டர் பட்டம் கொடுத்து அழகு பார்த்தார். தயாரிப்பாளர் கே.ராஜன் ஏழை மாணவன் கல்விக்காக 5 ஆயிரம் உதவி செய்தார். இவரைப் போன்ற கருணை குணம் இருந்தால் தான் நாடு வல்லரசாகும்.

ஒரு குழுவாக சென்று முதல்வரிடம் கடிதம் கொடுத்தால் திரையரங்கின் கட்டணம் மாறும். சிறிய படம், பெரிய படம் என்றில்லாமல் அனைத்து படங்களும் வெற்றியடையும்.

சிறிய படம் எழுதுவதற்கும், இயக்குவதற்கும் தைரியம் வேண்டும். அதேபோல், இசையமைப்பாளரையும் வாழ்த்துகிறேன். உங்கள் உழைப்பிற்கு கடவுள் நிச்சயம் வெற்றியைக் கொடுப்பார் என்றார்.

சண்டைப் பயிற்சியாளர் ஜாகுவார் தங்கம் பேசும்போது,

1,500 படங்களுக்கு இசையமைத்த முதல் மனிதர் சங்கர் கணேஷ். 130 திரையரங்கில் வெளியிடுகிறோம் என்று கூறி 13 திரையரங்கில் மட்டுமே வெளியிட்டிருக்கிறார்கள். காவல்துறையில் இருப்பவர்களையே ஏமாற்றியிருக்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இருக்கிறோம். நாங்களே ஒரு தளம் ஆரம்பித்திருக்கிறோம். அதில் தரமான படங்களை ஆதரிப்போம். திருப்பூர் குமரன் உண்மையான மனிதர், அவருக்கு அனைவரும் ஆதரவு கொடுங்கள். இப்படத்தை போட்டிப்போட்டு வாங்க முன்வருவார்கள். சிறப்பாக இயக்கியிருக்கிறார் திருப்பூர் குமரன் என்றார்.

இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் பேசும்போது,

உழைப்பவர்கள் முன்னுக்கு வருவார்கள். அப்படி வருபவர்களுக்கு இவர்கள் முன்னுதாரணம். இப்படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவரும் தங்களுடைய பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள். தயாரிப்பாளர் அப்பா என்றால், இயக்குனர் அம்மா.

எம்.ஜி.ஆர் தான் என்னைக் காப்பாற்றினார். அவரால் தான் நான் இங்கு இப்படி நிற்கிறேன். அதேபோல், ராஜன் எம்.ஜி.ஆர். போல இருக்கிறார். சிறிய தயாரிப்பாளர்களை காப்பாற்றும் முக்கிய மனிதர் ராஜன் தான் என்றார்.

இசையமைப்பாளர் ராக ஜீவன் அஜிம் ராஜா பேசும்போது,

முதல் வாய்ப்பும் மட்டுமல்ல, இரண்டாம் வாய்ப்பும் இயக்குனர் எனக்கு கொடுத்திருக்கிறார். ஆம். அவர் அடுத்து இயக்கும் படத்திற்கும் என்னையே இசையமைக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். என்னுடைய யூடியூப்-ல் ஆல்பம் பாடல் கேட்டுதான் என்னை அழைத்து இந்த வாய்ப்பு கொடுத்தார். திருப்பூர் குமரன் கொடுத்த உடனேயே இரண்டு பாடல்களையும் இசையமைத்துக் கொடுத்து விட்டேன். அதற்கு உறுதுணையாக இருந்த ஆபாவிற்கும் வாழ்த்துகள் என்றார்.

இயக்குனர் திருப்பூர் குமரன் இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி என்றார்.

கதாநாயகி வெண்மதி பேசும்போது,

திருப்பூர் குமரன் சாரும், ஆபா சாரும் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தார்கள். நான் அதிக நிறமும் இல்லை, எந்த நம்பிக்கையில் இப்படத்தில் என்னை தேர்ந்தெடுத்தீர்கள் என்று கேட்டேன். சினிமாவிற்கு அழகும், நிறமும் தேவையில்லை ; திறமை தான் தேவை என்றார். என்னுடைய ரீல்ஸ் பார்த்து தான் இந்த வாய்ப்பு கொடுத்தார்.

பலரும் பெண்ணை நடிக்க வைக்காதே என்று கூறினாலும், அதைப் பொருட்படுத்தாமல் என்னை ஊக்கப் படுத்தியது என் அம்மா. ஐ லவ் யூ அம்மா, உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்றார்.

தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது,

குண்டான் மலை நிச்சயம் வெற்றி கொண்டான் மலை. குடும்பமாக இருந்து ஈகோ இல்லாமல் பணியாற்றியிருக்கும் இப்படகுழுவினருக்கு வாழ்த்துக்கள். இப்படத்தைப் பார்க்கும் போது புதியதாக இயக்கியது போல் தெரியவில்லை. ஓடு ஓடு பாடல் அருமையாக உள்ளது.

சிறிய படங்கள் தான் சினிமாத் தொழிலாளர்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் படத்தை எதற்காக வேறு மாநிலங்களில் எடுக்கிறீர்கள். என் தம்பி செல்வமணி 75% தமிழ் நாட்டில் எடுத்துவிட்டு 25% மட்டும் வெளியே செல்லுங்கள் என்று வேண்டுகோள் வைத்திருக்கிறார். மலையாள திரையுலகம், ஆந்திரா திரையுலகம் அவர்களின் தொழிலாளர்களை நன்றாக பார்த்துக் கொள்கிறார்கள். ஆனால், தமிழ் திரையுலகினர் மட்டும் தான் தமிழ் திரையுலக தொழிலாளர்களை விட்டு மற்றவர்களை வாழ வைக்கிறார்கள்.

நான் எம் ஜி ஆரும் அல்ல, தெய்வமும் அல்ல. எனக்கு 4 வயது இருக்கும் போதே அப்பா இறந்து விட்டார். அம்மா வீட்டு வேலை செய்து தான் காப்பாற்றினார். அண்டை வீட்டில் இருந்தவர்கள் தான் என்னை படிக்க வைத்தார்கள். ஆகையால், நானும் இயலாதவர்களின் பிள்ளைகளை படிக்க வைத்துக் கொண்டிருக்கிறேன்.

கவிஞர் ஆபாவை ஆஹா என்றே அழைக்க தோன்றுகிறது. இப்படத்தில் இரண்டு பாடல்கள் எழுதியிருக்கிறார். வசனம் எழுதி நடித்தும் இருக்கிறார், மனதில் வலிமையுடன் இருக்கிறார்.

கலைஞர் சிஷ்யன் கூறியதை, 3 நாட்களுக்கு முன்பே முதல்வருக்கு அனுப்பி விட்டேன். அதில், 8% வரியைக் குறைக்க வேண்டும். ஏழை மக்கள் 30, 40, 60 ரூபாயில் பார்க்கும் வகையில் ஒவ்வொரு ஊரிலும் சிறிய அரங்கம் கட்டி தர வேண்டும். இது போன்று பல கோரிக்கைகளுடன் விரைவில் முதல்வரை சந்திக்க உள்ளேன் என்றார்.

விழாவின் இறுதியில், குண்டான் மலை படத்தின் இசைத்தட்டு வெளியிடப்பட்டது.
Attachments area

Cinema News Tags:குண்டான் மலை நிச்சயம் வெற்றி கொண்டான் மலை - தயாரிப்பாளர் கே.ராஜன் பாராட்டு

Post navigation

Previous Post: The Lord of the Rings: The Rings of Power Mega Asia Pacific Premiere in Mumbai Sees Record Attendance from Fans and B-town Celebs Alike
Next Post: திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் நடந்த ’கோப்ரா’ திரைப்பட ரசிகர்கள் சந்திப்பு விழா !

Related Posts

நடிகை ஸ்ருதிஹாசன் நாயகியாகவும் நடிக்க இயக்குநர் ஜனநாதன் லாபம் படப்பிடிப்பு மிக பிரம்மாண்டமாகவும் நடைபெற்று வருகிறது நடிகை ஸ்ருதிஹாசன் நாயகியாகவும் நடிக்க இயக்குநர் ஜனநாதன் லாபம் படப்பிடிப்பு மிக பிரம்மாண்டமாகவும் நடைபெற்று வருகிறது Cinema News
Indhuja Exclusive Photoshoot Stillsindiastarsnow.com Actress Indhuja Exclusive Photoshoot Stills Cinema News
அஜித் வாழ்க்கையை பின்பற்றி வாழும் ரசிகர்களையும் சினிமா நட்சத்திரங்களே அஜித் வாழ்க்கையை பின்பற்றி வாழும் ரசிகர்களையும் சினிமா நட்சத்திரங்களே !!! Cinema News
*ஐஃபா விருதினை வென்ற இசையமைப்பாளர் சாம் சி. எஸ்.* Cinema News
ஏஜென்ட் கண்ணாயிரம்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு ! “ஏஜென்ட் கண்ணாயிரம்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு ! Cinema News
Vijay Antony starrer 'Raththam' Teaser garners fabulous response Vijay Antony starrer ‘Raththam’ Teaser garners fabulous response Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme