கபடி ஆட்டத்தில் தொடங்கும் பகை ஒருவனின் வாழ்க்கையை எப்படியெல்லாம் கபடி ஆடுகிறது என்பதுதான் படத்தின் ஒன்லைன்.
அடிதடி, கட்டப் பஞ்சாயத்து என மதுரையையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் தாதா காந்திமதி (ராதிகா). தனது தாயின் ரௌடிசத்தை பயன்படுத்தி ஏரியாவில் கெத்து காட்டுகிறார் அவரது மகன் முத்துப்பாண்டி (கண்ணா ரவி). அவரது ‘வெட்டுப்புலி’ கபாடிக்குழுவுக்கும், சக்தியின் (அதர்வா)வின் ‘பாசப்பட்டாளம்’ கபாடி குழுவிற்குமான ஆட்டத்தில் ‘வெட்டுப்புலி’ அணி தோல்வியைத் தழுவ, அது மோதலாக வெடிக்கிறது.
இந்த மோதல் பழிவாங்கும் படலமாக உருப்பெற்று, அது எப்படி சக்தி (அதர்வா) வாழ்க்கையில் கபடி ஆடுகிறது என்பதையும், அந்த ஆட்டத்தில் சக்தி வென்றாரா? வீழ்ந்தாரா? என்பதையும் ஆக்ஷன் த்ரில்லராக சொல்ல முற்பட்ட படம்தான் ‘குருதி ஆட்டம்’.
ஒரு பக்காவான ஆக்ஷன் த்ரில்லருக்கான ஒன்லைனை கையிலெடுத்திருக்கிறார் ‘8 தோட்டாக்கள்’ இயக்குநர் ஸ்ரீகணேஷ். அப்படித்தான் படத்தின் முதல் பாதியையும் தொடங்கியிருக்கிறார்.
ராதிகாவின் மாஸ் இன்ட்ரோ, அதர்வா தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை கச்சிதமாக செய்துள்ளார். மதுரை பையனாக அதற்கான வசன உச்சரிப்பு, உடல் மொழி என அசத்தியுள்ளார். ப்ரியா பவானி சங்கர் காதல் காட்சிகளுக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளார் என்றாலும், அழகான மதுரைக்கார பெண்ணாக ரசிக்க வைக்கார். மொத்தத்தில் லாஜிக் பார்க்காத ஆக்ஷன் விரும்பி ரசிகர்களுக்கு நல்ல விருந்து இந்த ‘குருதி ஆட்டம்’.