குலுகுலு படத்தில் உதவி என யாராவது கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு களமிறங்கிவிடும் கூகுள் (சந்தானம்) யாருமில்லாத தனிமையான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறார். சமயங்களில் அவர் செய்யும் உதவிகள் அவருக்கே பாதகமாக அமைந்துவிடுகின்றன. இப்படியிருக்கும் சூழலில், கடத்தப்பட்ட தன் நண்பனை மீட்டுத் தரக் கோரி கூகுளிடம் 3 பேர் உதவி கேட்கின்றனர். அவர்களுடன் கைகோத்து நண்பனை மீட்க போராடும் கூகுள் இறுதியில் வெற்றிபெற்றாரா, இல்லையா என்பதை சொல்லும்படம் தான் ‘குலுகுலு’.
ஆர்பாட்டமில்லாத ஒரு நடிப்பை கொடுத்த விதத்தில் நடிகர் சந்தானத்துக்கு இது முக்கியமான படம். வழக்கத்திலிருந்து மொத்தமாக உருமாறி அழுத்தமான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார் சந்தானம்.
படத்தில் அவர் சிரிக்கவில்லை, யாரையும் கலாய்க்கவில்லை ஆனால், பார்வையாளர்களை ரசிக்கவும், சிரிக்கவும் வைக்கும் விதத்தில் நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். அதுல்யா சந்திரா, நமீதா கிருஷ்ணமூர்த்தி இருவரும் படத்திற்கு தேவையான பங்களிப்பை செலுத்தியுள்ளனர். ஜார்ஜ் மர்யான் மற்றும் அவருடன் வரும் 2 பேர் நடிப்பு திரையரங்கையே சிரப்பில் குலுங்க வைக்கிறது. தவிர சாய் தீனா, பிரதீப் ராவத் அழுத்தமான நடிப்பை பதிவு செய்கின்றனர்.
அழுத்தமான கதையெல்லாம் இல்லாமல், போகிற போக்கில் நடக்கும் சம்பவங்களை கோத்து அதன் வழி சில விஷயங்களை காமெடியாக சொல்லும் விதம் படத்தை கவனிக்க வைக்கிறது.
எல்லாத்தையும் மூடிட்டு இருந்தாதான் எனக்கு பத்தினி பட்டம் கிடைக்கும்னா எனக்கு அந்தப் பட்டமே வேண்டாம்’, ‘பசியும் வலியும் புரிஞ்சிக்க எதுக்கு டா மொழி’ போன்ற வசனங்கள் அழுத்தமாக கடக்கின்றன. மனிதன் ஆகச்சிறந்த சுயநலவாதி என்பதையும், வயதாகிவிட்ட ஒரே காரணத்துக்காக ஒரு பெண் தன் விருப்பங்களை மறைத்து வாழ வேண்டுமென்ற அவசியமில்லை என்பதையும் போகிற போக்கில் அழுத்தமாகவே படம் பதிவு செய்கிறது. தவிர, இடைவேளைக்கு முன்பு வரும் துப்பாக்கிச்சூடு சண்டைக்காட்சி ரசிக்கும்படியாகவே இருந்தது. இறுதியில் வரும் கேங்க் வார் காட்சிகள் ‘லொள்ளு சபா’ சேஷூவின் டைமிங் என ஒரு ஜாலியான படமாக உருவாகியிருக்கிறது
