Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

சுழல்= தி வோர்டெக்ஸ்’ வலைத்தளத் தொடரின் முன்னோட்டம் வெளியீடு

முப்பது மொழிகளில் வெளியாகும் தமிழ் வலைதள தொடர் ‘ சுழல் – தி வோர்டெக்ஸ்

Posted on June 8, 2022 By admin

இயக்குநரும், நடிகருமான ஆர். பார்த்திபன், கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்ட பலர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘சுழல்= தி வோர்டெக்ஸ்’ எனும் அமேசான் பிரைம் வீடியோவில் ஜூன் 17 ஆம் தேதி முதல் வெளியாகும் வலைதள தொடரின் முன்னோட்டம் வெளியானது.*

‘விக்ரம் வேதா’ புகழ் இயக்குநர்கள் புஷ்கர் – காயத்ரி அவர்களின் சொந்த பட தயாரிப்பு நிறுவனமான வால் வாட்சர் பிலிம்ஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் தயாராகியிருக்கும் முதல் வலைதளத் தொடர் ‘ சுழல்- தி வோர்டெக்ஸ்’. இயக்குநர்கள் பிரம்மா மற்றும் எம். அனுசரண் இயக்கத்தில் தயாராகியிருக்கும் இந்த வலைதள தொடரில் நடிகர்கள் ஆர். பார்த்திபன், கதிர், சந்தானபாரதி, பிரேம், நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி, நிவேதா சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மியூக்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த வலைதள தொடருக்கு, சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார். அமேசான் பிரைம் வீடியோவில் ஜூன் 17 தேதி முதல் வெளியாகும் ‘சுழல்- தி வோர்டெக்ஸ்’ என்ற க்ரைம் இன்வெஸ்டிகேட் திரில்லர் தொடரின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இதற்காக சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பிரம்மாண்டமுறையில் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் அமேசான் ஒரிஜினல்ஸ் தலைவர் அபர்ணா புரோகித், அமேசான் இந்திய தலைவர் சித்தானந்த் ஸ்ரீராம், புஷ்கர்= காயத்ரி, அனுசரண், பிரம்மா, ஆர். பார்த்திபன், கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி ஆகியோருடன் படக்குழுவினரும், படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களும் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் அமேசான் இந்திய தலைவர் சித்தானந்த் ஸ்ரீராம் பேசுகையில், ” அமேசான் பிரைம் வீடியோவில் முதன்முதலாக இந்திய கதைகள், சர்வதேச மொழிகளில் வெளியாகிறது. தமிழ் மண்ணில் நடைபெறும் கதையொன்று, அதன் நிலவியல் எல்லைகளைக் கடந்து, மொழிகளைக் கடந்து, சர்வதேச அளவில் பார்வையாளர்களைச் சென்றடைவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். திறமையான படைப்பாளிகள் குழுவாக இணைந்து உருவாக்கியிருக்கும் ‘ சுழல்- தி வோர்டெக்ஸ்’ எனும் வெப் சீரிஸ் ஜூன் 17ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் வெளியாகிறது. அதற்கான முன்னோட்டத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.” என்றார்.

அமேசான் பிரைம் ஒரிஜினல்ஸ் தலைவர் அபர்ணா புரோகித் பேசுகையில், ” அமேசான் ஒரிஜினல்ஸ் வெளியிடும் முதல் தமிழ் வலைதள தொடர் ‘சுழல்= தி வோர்டெக்ஸ்’ . இயக்குநர்கள் புஷ்கர் & காயத்ரி இந்த தொடரின் கருவை எங்களிடம் சொன்னபோது உண்மையில் மிக்க மகிழ்ச்சி அடைந்தோம். அவர்களுடன் இணைந்து பணியாற்ற தொடங்கினோம். கதையும், கதை சம்பவங்களும் தமிழக மண்ணில் நடந்தாலும், கதையின் மையப்புள்ளி சர்வதேச அளவிலான பார்வையாளர்களுடன் எளிதாக தொடர்பு கொள்ள முடியும் என்பதால் ஒப்புக்கொண்டோம். மேலும் இந்த தொடரில் வரும் கதாபாத்திரங்கள், உறவுகள், உணர்வுகள் என அனைத்தும் உலகத்திலுள்ள அனைத்து மக்களுக்குமானது. இந்த தொடர் குறிப்பிட்ட புவியியல் எல்லைகளை கடந்து, பல மொழிகளில் முதன் முதலாக வெளியாகிறது. முப்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில், 240க்கும் மேற்பட்ட நாடுகளில் முதன் முதலாக தமிழில் தயாரான தொடர், அமேசான் ப்ரைமில் வெளியாகிறது. இதன் மூலம் நம்முடைய இயக்குநர்களின் படைப்பு, சர்வதேச அளவிலான பார்வையாளர்களை சென்றடையும். இந்த தொடரின் முன்னோட்டத்தை அபுதாபியில் நடைபெற்ற திரைப்பட விழாவில் வெளியிட்ட போதும் பெரும் வரவேற்பு கிடைத்தது’.’ என்றார்.

புஷ்கர் & காயத்ரி பேசுகையில், ” இந்த தொடரின் கருவை மட்டும் தான் நாங்கள் முதலில் மும்பையில் இருந்த அமேசான் ஒரிஜினல்ஸ் தலைவரான அபர்ணா புரோகித்திடம் தெரிவித்தோம். கேட்டு முடித்ததும், இதுதான் அமேசானின் முதல் தமிழ் ஒரிஜினல்ஸ் தொடர் என உறுதியளித்தார். அந்த தருணத்தில் எங்களிடம் ஏற்பட்ட நம்பிக்கை, தற்போது வரை பொறுப்புணர்வுடன் கூடிய தன்னம்பிக்கையாக வளர்ந்துகொண்டே இருக்கிறது.

‘விக்ரம் வேதா’விற்கு பிறகு எங்களை சந்திக்கும் பலரும், அடுத்து என்ன? என்ற வினாவை முன் வைப்பார்கள். அவர்களுக்கு இந்த தொடர் தான் சரியான பதிலாக இருக்கும். மூன்றாண்டு காலமாக இதன் திரைக்கதையை எழுதி, உருவாக்கியிருக்கிறோம். இந்த தொடர் முதலில் இந்திய மொழிகளில் வெளியாகும் என தெரிவித்தனர். தற்போது அதையும் கடந்து முப்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகும் என அறிவித்து, எங்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

இந்தத் தொடரை இயக்கிய இயக்குநர்கள் அனுசரண் மற்றும் பிரம்மா, நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் இணைந்து கடுமையாக உழைத்து இதனை உருவாக்கி இருக்கிறார்கள்.

தமிழ் திரை உலகில் பெரும்பாலும் கதாசிரியர்களே இயக்குனர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால் நாங்கள் இந்தத் தொடருக்காக கதை எழுதி, இயக்குவதற்காக இயக்குநர்கள் அனுசரண் மற்றும் பிரம்மாவை கேட்டுக் கொண்டபோது, உடனடியாக அவர்கள் ஒப்புக் கொண்டார்கள். இதற்காக அவர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற பாணி தமிழ்த்திரையுலகில் இல்லை. இதனை தொடங்கி வைத்த இயக்குநர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நடிகர்கள் கதிர், பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி என அனைவரும் தங்களுடைய ஒத்துழைப்பை முழுமையாக வழங்கினார்கள்.

இந்தத் தொடரின் கதையை திரைப்படத்திற்கு எழுதுவது போல் வில்லன், கதாநாயகன், கதாநாயகி என எழுதவில்லை. எழுத எழுத எழுதிக்கொண்டே இருக்கிறோம். ஒரு புள்ளியில் கதாபாத்திரங்களை கடந்து கதை நிகழும் நகரம் கூட கதாபாத்திரமாக மாறியது. இதை படமாக எடுக்க வேண்டுமென்றால்.. ஏழு எட்டு மணி நேரம் தேவைப்படும். அதனால் அதனை எழுதி தனியாக வைத்து விட்டோம். அதனை அமேசான் ‘சுழல்= தி வோர்டெக்ஸ்’ எனும் எட்டு அத்தியாயங்களைக் கொண்ட வலைத்தளத் தொடாராக உருவாக்கியிருக்கிறது.”என்றார்.

நடிகர் கதிர் பேசுகையில், ” இந்த தொடரில் நடிக்கும் போது, இந்த தொடர் உலகம் முழுவதும் 30 க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் பணியாற்றவில்லை. நம்முடைய கதையை உலகத்தில் உள்ள பலரும், அவர்களுடைய இடத்தில்.. அவர்களுடைய மொழியில்.. பார்க்க முடியும் என்றால் அது பெருமகிழ்ச்சி. இந்த தொடரில் இடம்பெற்றிருக்கும் கதாபாத்திரங்கள், சம்பவங்கள்.. அனைத்தும் நம் மண் சார்ந்தவை. ஆனால் இவை சர்வதேச பார்வையாளர்களும் ஏற்றுக் கொள்ளும் வகையில் உருவாகி இருக்கிறது. இந்தப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறேன்.

‘பரியேறும் பெருமாள்’ என் திரையுலக வாழ்க்கையில் முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம். அதனையடுத்து என் திரையுலக பயணத்தில் அடுத்த கட்டத்தை நோக்கிய வளர்ச்சியை ஏற்படுத்திய தொடர் ‘சுழல்’. இதற்காக தயாரிப்பாளர்கள் புஷ்கர் & காயத்ரி மற்றும் அமேசானுக்கு என்றென்றும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த தொடர் குறித்து அமேசான் குழுவினர் வெளிப்படுத்தும் தன்னம்பிக்கை, எங்களை மேலும் உற்சாகப்படுத்தி வருகிறது. ஜூன் 17ஆம் தேதி முதல் ‘ சுழல்’ தொடர் மூலம் நாங்கள் வெவ்வேறு மொழி பேசி பார்வையாளர்களை சென்றடைவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.” என்றார்.

இயக்குநர் பிரம்மா பேசுகையில், ” இந்த தொடரின் முதல் நான்கு அத்தியாயங்களை இயக்கியிருக்கிறேன். தொடரை இயக்குவதற்கு முன் தயாரிப்பாளர்களான புஷ்கர் & காயத்ரி, ஒளிப்பதிவாளர், கலை இயக்குனர் என தொழில்நுட்ப கலைஞர்களுடன் நீண்ட விவாதம் நடத்தி, தெளிவான திட்டமிடலையும் உருவாக்கிக் கொண்டோம். இந்த விவாதத்தின் ஊடாக கதாசிரியர்கள் எந்த புள்ளியை சர்வதேச அளவிலான பார்வையாளர்களுக்கு புரிய வைக்க வேண்டும் என்று எழுதினார்களோ.. அதனை நாங்கள் முதலில் தெளிவாக உட்கிரகித்தோம்.” என்றார்.

இயக்குநர் அனுசரண் பேசுகையில், ” இந்த தொடரின் இறுதி நான்கு அத்தியாயங்களை நான் இயக்கி இருக்கிறேன். நான் திரைப்படங்களை எழுதி, இயக்கியிருக்கிறேன். ஆனால் தொடர் இயக்குவது முதல் முறை என்பதால், இதுகுறித்த புரிதலுக்காக நீண்ட நேரம் பல விசயங்களை தேடி தெரிந்து கொண்டேன். ஏனெனில் இந்தத் தொடரை நேர்த்தியாக இயக்க வேண்டும் என்று விரும்பினேன். அத்துடன் தயாரிப்பாளர்களான புஷ்கர் & காயத்ரி என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என்ற கடமையும் எனக்கு இருந்தது. இந்தத் தொடரை இயக்கத் தொடங்கிய பிறகு மிகப்பெரிய பொறுப்புணர்வை உணர்ந்தேன். எதிர்காலத்தில் வேறு சில திறமையான இயக்குநர்களுக்கும் இது போன்ற வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்றும் எண்ணினேன். ” என்றார்.

நடிகர் ஆர் பார்த்திபன் பேசுகையில், ” 32 ஆண்டு கால திரையுலக வாழ்க்கையில் சௌகரியமான முறையில் ஒரு படைப்பில் பணியாற்றி இருக்கிறேன் என்றால், அது இந்த சுழல் தொடரில் தான். நான் முதன் முதலில் நடிக்கும் வலைதள தொடர் இது. படப்பிடிப்பு நெருங்கும் தருணத்தில் என்னைத் தொடர்பு கொண்டு புஷ்கர் & காயத்ரி பேசினார்கள். அவர்களது இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். இந்தத் தொடரின் கதையை கேட்டவுடன் அதில் ஒரு ஜீவன் இருந்ததை உணர்ந்தேன்.

நம்முடைய கலாச்சாரத்தில் ஒரு புராணக்கதை உண்டு. ஞானப்பழம் யாருக்கு என்ற அநத கதையில், ஞான பழத்திற்காக முருகன் உலகமெல்லாம் சுற்ற சென்று விடுவார். விநாயகர் அருகிலிருக்கும் அப்பா, அம்மாவை சுற்றிவிட்டு, ஞானப்பழத்தைப் பெற்றுவிடுவார். அந்த விநாயகர் கதைதான் அமேசானின் கதை.

அந்தக் காலத்தில் சிவாஜியை விட மிகச் சிறந்த நடிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய நடிப்பு பெரும்பாலானவர்களுக்கு தெரியாது. ஏனெனில் ஒவ்வொரு ஊராகச் சென்று நடிக்க வேண்டும். சென்னையில் அழகாக நடிக்க வேண்டும். பிறகு கோயம்புத்தூருக்குச் சென்று மீண்டும் அதே போல் அழகாக நடிக்க வேண்டும். பிறகு மும்பைக்குச் சென்று அதே போல அழகாக நடிக்க வேண்டும். ஆனால் அமேசானில்.. ஒரே ஒரு தொடரில் நடித்தால், உலகத்தில் உள்ள 240 நாடுகளில் ஒரே நேரத்தில், இந்த தொடரைப் பார்க்க முடியுமென்றால், இதுதான் அமேசானின் ஞானப்பழம். நம்முடைய படைப்பை உலக அளவில் ஒரே தருணத்தில் பார்த்து ரசிக்கிறார்கள் என்றால் அது மட்டற்ற மகிழ்ச்சி தானே.

ரெண்டு பொண்டாட்டியுடன் குடும்பம் நடத்துவது கடினம் என்பார்கள். ஆனால் இங்கு இரண்டு புருஷன்களுடன் குடும்பம் நடத்திய அனுபவம். ஆனால் வித்தியாசம் எதுவும் தெரியவில்லை. ஒரே ஆள் இரட்டை வேடம் போட்டது போல் இருந்தது. இந்த படத்தில் பணியாற்றிய இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்களையும், சந்தானபாரதி போன்ற கலைஞர்களையும் மனதார பாராட்டுகிறேன்.

இந்தத் தொடரில் சண்முகம் என்ற கதாபாத்திரத்தில் தொழிற்சங்க தலைவராகவும், ஒரு பெண்ணின் தகப்பனாராகவும் நடித்திருக்கிறேன். என் மகள் மீது வைத்திருக்கும் அன்பையும், பாசத்தையும் வெளிப்படுத்த தெரியாது. எனக்கு நடிக்க தெரியாது அதனால் என்னுடைய நடிப்பு நன்றாக இருக்கும்.” என்றார்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசுகையில், ” எனக்கு இயக்குநர்கள் புஷ்கர் & காயத்ரி மீது நல்ல மரியாதை உண்டு. ஏனெனில் அவர்கள் கலை மீது அளவற்ற பற்று கொண்டவர்கள். கொரோனா காலகட்டத்தின் போது என்னை அழைத்து வலைதள தொடரில் நடிக்க வேண்டும் என கேட்டார்கள். நான் உடனே ஒப்புக்கொண்டேன். ஆனால் அந்த தொடர் இவ்வளவு பிரம்மாண்டமாக வெளியாகும் என சற்றும் எதிர்பார்க்கவில்லை.

இந்த தொடரில் நடிப்பதற்கு முன் என்னிடம் ஒரு புத்தகத்தை கொடுத்தார்கள். அதில் சில அத்தியாயங்களில் நான் இல்லை. அப்போது ஏன் இந்தத் தொடரில் என்னை தேர்வு செய்தார்கள்? என யோசித்தேன். ஆனால் கதை முழுவதும் படித்த பிறகு, என்னுடைய கதாபாத்திரத்தின் அழுத்தத்தை உணரமுடிந்தது. நந்தினி என்ற பிடிவாதம் கொண்ட பெண்ணாக அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். என் தங்கை காணாமல் சென்று விடுவாள். அவளை தேடி நான் பயணப்படுவேன். கதையில் பல இடங்களில் நந்தினி, என் நிஜத்தை பிரதிபலித்திருப்பாள்.

நான் இதுவரை 30-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டேன். ஆனால் இந்த தொடரில் நடிக்கும் போது எனக்கு கிடைத்த சௌகரியங்களும், வசதிகளும் வேறு எங்கும், எப்போதும் கிடைத்ததில்லை. அதனால் மிக சிறந்த அனுபவத்தை உணர்ந்தேன். படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றும்போது சக நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களும் நேர்மறையான அதிர்வை வெளிப்படுத்தி, முழுமையான ஒத்துழைப்பு வழங்கினர். அமேசன் குழுவினர் எங்களை தாய்போல் அரவணைத்தனர். அபுதாபியில் நடைபெற்ற திரைப்பட விழாவில் எங்களையெல்லாம் அபர்ணா மேடம், மற்றவர்களிடம் பெருமிதத்துடன் அறிமுகப்படுத்தி, கொண்டாடினார்கள். அதுவும் என்னால் மறக்க இயலாது. ” என்றார்.

இசையமைப்பாளர் சாம் சி எஸ் பேசுகையில், ” புஷ்கர் & காயத்ரி அவர்களின் திரைக்கதையில் ஒரு இசையமைப்பாளர் எதிர்பார்க்கும் அனைத்து விதமான உணர்வுகளும் இடம்பெற்றிருக்கும். இந்த தொடரில் உள்ள எட்டு அத்தியாயங்களுக்கு இசை வடிவிலும் கதையை நகர்த்த இயலும் வகையில் திரைக்கதை அமைத்திருந்தார்கள். அது எனக்கு சவாலாக இருந்தது. ” என்றார்.

நடிகை ஸ்ரேயா ரெட்டி பேசுகையில், ” இயக்குநர்கள் புஷ்கர் & காயத்ரி தொடர்புகொண்டு ‘சுழல்’ பற்றி பேசி, என் கதாபாத்திரத்தைப் பற்றி விவரித்தார்கள். 16 ஆண்டுகாலத்திற்கு பிறகு இந்த தொடரில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறேன். இதற்கு ஒரு முக்கிய காரணம் புஷ்கர் &காயத்ரி, ‘இந்த தொடரில் எந்த இடத்திலும் ‘திமிரு’ படத்தினுடைய நடிப்பும் தோற்றமும் வந்து விடக் கூடாது’ என உறுதியாக கண்டிப்புடன் கூறி விட்டார்கள். ரெஜினா என்ற போலீஸ் அதிகாரி வேடம் என்றாலும், பல இடங்களில் நடிப்பதற்கு சவாலாக இருந்ததால் நடிக்க ஒப்புக்கொண்டேன். இயக்குநர்கள் பிரம்மா, அனுசரண் படப்பிடிப்பு தளத்தில் நேர்த்தியாக பணியாற்றி, நடிகர்களிடமிருந்து நடிப்பை பெற்றுக் கொண்டார்கள். ஒளிப்பதிவாளர் மியூக்ஸ் படப்பிடிப்புத் தளத்தில் சர்வதேச தரத்திலான பணியை வழங்கி எங்களையெல்லாம் ஆச்சரியப்படுத்தினார். படப்பிடிப்பு தளத்தில் என்னையும் சக நடிகர்களையும் தொழில் நுட்பக் கலைஞர்களையும் அமேசான் குழுவினர் சௌகரியமாக நடத்தினார்கள். அதிலும் குறிப்பாக அமேசான் குழுவில் இருக்கும் அபர்ணா புரோகித் அவர்கள் ஆச்சரியப்படும் தருணங்களைப் பற்றி புத்தகமே எழுதலாம். அவை அனைத்தும் தன்னம்பிக்கையின் வெளிப்பாடுகள் என்பதே அதன் சிறப்பு. ‘சுழல்’ தொடர் ஜூன் 17ஆம் தேதி, முப்பது மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாவதில் மிக்க மகிழ்ச்சி.” என்றார்.

Cinema News Tags:16 ஆண்டுகளுக்கு பிறகு 'சுழல் - தி வோர்டெக்ஸ்' மூலம் மீண்டும் நடிக்கும் ஸ்ரேயா ரெட்டி, சுழல்= தி வோர்டெக்ஸ்’ வலைத்தளத் தொடரின் முன்னோட்டம் வெளியீடு, முப்பது மொழிகளில் வெளியாகும் தமிழ் வலைதள தொடர் ' சுழல் - தி வோர்டெக்ஸ்

Post navigation

Previous Post: மராட்டியில் ‘அதுர்ஷ்யா’ படத்தின் மூலம் கலக்கும் இயக்குநர் கபீர்லால் இயக்கத்தில் உருவாகியுள்ள தமிழ் திரைப்படம் ‘உன் பார்வையில்’ !
Next Post: ஜெய் ஆகாஷ் நாயகனாக நடித்து இயக்கும் புதிய திரைப்படம் “அமைச்சர் ரிட்டன்ஸ்

Related Posts

ஆர்யா – கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவாகும் Mr.X ஆர்யா – கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவாகும் Mr.X Cinema News
Swagathaanjali, first single from Lyca’s ‘Chandramukhi 2’, released!* Cinema News
WorldMusicDay just a small note from Harish Kalyan StayHomeStaySafe WorldMusicDay just a small note from Harish Kalyan StayHomeStaySafe PIC Cinema News
BRAHMĀSTRA PART ONE GLOBAL BOX OFFICE OPENING OF RS. 75 CR DAY ONE BRAHMĀSTRA PART ONE GLOBAL BOX OFFICE OPENING OF RS. 75 CR DAY ONE Cinema News
"Actor Sassi Selvaraj Receives Rave Reviews for His Performance in 'Veeran'" “Actor Sassi Selvaraj Receives Rave Reviews for His Performance in ‘Veeran'” Cinema News
Not Ramaiya Vastavaiya – song out tomorrow! Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme