எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ‘வறுகறி’ என்ற சிறுகதையை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘சேத்துமான்’ படத்தை இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிக்க, அறிமுக இயக்குநர் தமிழ் இயக்கியுள்ளார். வரும் மே 27 ஆம் தேதி நேரடியாக சோனி லைவ் ஒடிடி தளத்தில் வெளியாக இருக்கும் இந்த படம் எப்படி இருக்கிறது, விமர்சனத்தை பார்ப்போம்.
மாட்டுக்கறி உண்பவர்களை கேவலமாக பார்ப்பதோடு, அவர்களை கொலை செய்யவும் துணியும் ஆதிக்க சாதியினர், மனித மலத்தை உண்ணும் பன்றியின் கறியை சுவைப்பதற்காக எப்படி அலைகிறார்கள் என்பதையும், அவர்களின் பன்றிக்கறி பசிக்கு ஒரு பாமரனை எப்படி பலியாக்குகிறார்கள், என்பதையும் சொல்வது தான் ‘சேத்துமான்’ படத்தின் கதை.
மாட்டுக்கறியை சாப்பிட்டதால் ஆதிக்க சாதி வெறியர்களால் கொல்லப்பட்ட தாய், தந்தையை இழந்த சிறுவன் அஸ்வின், தனது தாத்தா மாணிக்கத்திடம் வளர்கிறான். கூடைப் பின்னி சந்தையில் விற்று பணம் சம்பாதிக்கும் மாணிக்கம், தனது பேரனை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு வாழ்ந்து வருகிறார். அந்த ஊர் பெரியா மனிதர் ஒருவருக்கு உதவியாக அவர் சொல்லும் வேலைகளையும் மாணிக்கம் செய்து வருகிறார். அப்போது அந்த பெரிய மனிதரும், அவரது நண்பர்களும் பன்றிக்கறி சாப்பிட ஆசைப்படுகிறார்கள். அவர்களுக்காக மாணிக்கம் பன்றி ஒன்றை வாங்கி, அதை சமைத்துக்கொடுக்க, அப்போது ஒரு பிரச்சனை உருவாகி அதன் மூலம் மிகப்பெரிய அசம்பாவிதம் நடக்கிறது. அது என்ன? என்பதே படத்தின் கதை.
மாட்டுக்கறியை வைத்து அரசியல் செய்பவர்களின் மண்டையில் ஓங்கி கொட்டியிருக்கும் இயக்குநர் தமிழ், அவர்களுக்கு வலி தெரியாத வகையில் பல இடங்களில் அவர்களை அடித்து துவைத்திருக்கிறார். அதிலும், மனித மலத்தை உண்ணும் பன்றி, என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்தி அவர்களின் கண்ணத்தில் மாறி மாறி அரைந்திருக்கிறார்.
மாட்டுக்கறி அரசியல் ஒரு பக்கம், பன்றிக்கறி ருசி மறுபக்கம் இருந்தாலும், தாத்தா – பேரனின் பாசப்போரட்டம் இந்த இரண்டு பக்கங்களையும் இணைத்துக்கொண்டு பயணிப்பது நம்மை படத்துடன் ஒன்றிவிட செய்கிறது.
பூச்சியப்பா என்ற கதாப்பாத்திரத்தில் தாத்தாவாக நடித்திருக்கும் மாணிக்கம், ஒரு நடிகராக அல்லாமல் அந்த மண்ணின் மனிதராக வாழ்ந்திருக்கிறார். கேமரா முன் நடிக்கிறோம், என்ற எண்ணமே இல்லாமல் மிக இயல்பாக நடித்திருக்கும் அவரது நடிப்பு பூச்சியப்பா என்ற கதாப்பாத்திரத்திற்கு மிகப்பெரிய பலம்.
குமரேசன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் சிறுவன் அஸ்வின், அளவான நடிப்பு, தாத்தா மீதான அளவுக்கதிகமான பாசம் என இரண்டிலும் நம்மை கவர்ந்துவிடுகிறார்.
பண்ணையாராக வெள்ளையன் என்ற வேடத்தில் நடித்திருக்கும் பிரசன்னா பாலசந்திரனும், அவரது மனைவியாக நடித்திருக்கும் சாவித்ரியும் நடிப்பில் அசத்துகிறார்கள். ரங்கனாக நடித்திருக்கும் குமார், சுப்ரமணியாக நடித்திருக்கும் சுருள், ஆசிரியராக நடித்திருக்கும் நடிகர் என அனைவரும் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ப கச்சிதமாக நடித்திருக்கிறார்கள்.