Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

போலாமா ஊர்கோலம்' இசை வெளியீடு!

போலாமா ஊர்கோலம்’ இசை வெளியீடு!

Posted on May 6, 2022 By admin

கஜசிம்ஹா மேக்கர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பிரபுஜித் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘ போலாமா ஊர்கோலம்’. அறிமுக இயக்குநர் நாகராஜ் பாய் துரைலிங்கம் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தில் நடிகர் பிரபுஜித் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சக்தி மகேந்திரா நடித்திருக்கிறார். இவர்களுடன் மதுசூதன், ரவி ஏழுமலை, துளசி, சிவகார்த்திக், சூர்யா, கிருஷ்ணா, ரபீக் ஆகியோருடன் 20க்கும் மேற்பட்ட முன்னாள் கால்பந்தாட்ட வீரர்கள் இதில் நடித்திருக்கிறார்கள். வைசாலி சுப்பிரமணியன், டேவிட் பாஸ்கர் ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஷமந்த் நாக் இசையமைத்திருக்கிறார். பின்னணி இசையை கே. எம். ரயான் மேற்கொண்டிருக்கிறார். இப்படத்தின் இசை ட்ரெய்லர் வெளியீடு இன்று சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவில் தயாரிப்பாளர் கே ராஜன், இயக்குநர் பேரரசு, தயாரிப்பாளர் சங்கம் (கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

படத்தின் இசையை சிறப்பு விருந்தினர்கள் கே ராஜன், பேரரசு ஆகியோர் வெளியிட, மூத்த கால்பந்து வீரர்கள் மற்றும் படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர்.

விழாவில் படத்தின் தயாரிப்பாளரும், கதையின் நாயகனுமான பிரபுஜித் பேசுகையில்,

” நானும் என்னுடன் படித்தவர்களும், பணியாற்றியவர்களும் என 31 நண்பர்கள் முதலீடு செய்து இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். என் மீதும், என்னுடைய திரைத்துறை மீதான ஈடுபாட்டிலும் நம்பிக்கை வைத்து முதலீடு செய்த இவர்களுக்கு மனமார்ந்த நன்றியை இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். நானும் இயக்குநரும் ஐந்து ஆண்டு கால நண்பர்கள். இருவரும் சினிமா மீதான காதலை உணர்வுபூர்வமாகக் கொண்டவர்கள். அவருடைய திறமை மீது எனக்கு அதீத நம்பிக்கை இருக்கிறது. தரமான படைப்பை வழங்கியிருக்கிறார் என உறுதியாகச் சொல்வேன். இந்தப் படத்தில் நாயகியாக அறிமுகமாகி இருக்கும் நடிகை சக்தி மகேந்திரா, எதிர்காலத்தில் நிச்சயமாக சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெறுவார். இந்தப் படத்தில் பணியாற்றிய 20க்கும் மேற்பட்ட முன்னாள் கால்பந்து வீரர்களுக்கும், அவர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய ஒத்துழைப்பிற்கும் நன்றி. படப்பிடிப்புத் தளத்தில் அவர்களுடன் பணியாற்றிய நாட்களில் நிறைய விசயங்களை அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டேன். முன்னாள் வீரர்களின் கால்பந்து விளையாட்டை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை உருவாக்கி வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.” என்றார்.

இயக்குநர் நாகராஜ் பாய் துரைலிங்கம் பேசுகையில்,

” திரைத் துறையில் உதவி இயக்குநராக 15 ஆண்டுகாலம் பணியாற்றிய அனுபவம் உண்டு. ஒரு காலகட்டத்தில் சினிமா வேண்டாம் என்று தீர்மானித்து, வேறு துறையில் பணியாற்ற நேர்காணலுக்குச் சென்றேன். அந்தத் தருணத்தில் சென்னையில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழா ஒன்றில் தயாரிப்பாளரும், நடிகருமான பிரபுஜித் அவர்களைச் சந்தித்தேன். அந்தச் சந்திப்பில் தான் இந்த திரைப்படத்தின் முதல் புள்ளி தொடங்கியது. ஐந்தாண்டுகளுக்கு முன் அவரிடம் சொன்ன கதையை தற்போது படமாக உருவாக்கப் போகிறோம் என்றார்.

எனக்கும், தயாரிப்பாளர் பிரபுஜித்துக்கும் இடையே பல தருணங்களில் ஆரோக்கியமான விவாதங்கள் ஏற்பட்டதுண்டு. அந்தச் சமயங்களில் படத்தில் நடித்த நடிகர் மதுசூதன் எங்களைச் சமாதானப்படுத்தி படத் தயாரிப்பை முன்னெடுத்துச் செல்வார். இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் மதுசூதன், கால்பந்து விளையாடும் காட்சிகளில் நிஜ விளையாட்டு வீரர்களைப் போல் சாகசம் செய்து நடித்திருக்கிறார். படத்தில் நடித்த 20 மூத்த முன்னாள் விளையாட்டு வீரர்களும், படப்பிடிப்பின்போது சோர்வடையாமல் எங்களுடைய படக்குழுவின் வேகத்திற்கு ஈடு கொடுத்து ஒத்துழைப்பு அளித்தனர்.

‘போலாமா ஊர்கோலம்’ என் நண்பனின் வாழ்க்கையில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை தழுவி திரைக்கதையாக எழுதி உருவாக்கி இருக்கிறேன். இந்த திரைப்படம் பார்வையாளர்களுக்கு எந்த இடத்திலும் சோர்வு தராது. இரண்டு மணி நேரம் ஓடும் கிளாசிக்கல் வித் கமர்சியல் படைப்பாக உருவாகி இருக்கிறது. படத்தைப் பார்த்துவிட்டு வெளியேறும்போது ஃபீல் குட் மூவியாக இருக்கும். ” என்றார்.

தயாரிப்பாளர் கே. ராஜன் பேசுகையில்,

” அண்மைக்காலமாக இணைய தளங்களில் நேர்காணல் வழங்குவதற்காகக் கட்டணம் வசூலிக்கிறேன். இந்தத் தொகையை ஏழை எளிய மக்களின் கல்விக்காக நன்கொடையாக வழங்கி வருகிறேன். நான் பால்ய காலங்களில் பிறருடைய உதவியால் கல்வியைப் பயின்றேன். தற்போது மற்றவர்கள் கல்வி பயில உதவுகிறேன்.

‘போலாமா ஊர்கோலம்’ என்ற தலைப்பு தமிழில் இருப்பதால் வரவேற்கிறேன். இந்தப்படத்தில் 60 வயதிற்கு மேற்பட்ட 20 கால்பந்து விளையாட்டு வீரர்கள் நடித்திருக்கிறார்கள். வயது என்பது வெறும் எண் மட்டும் தான். இவர்கள் அனைவரும் வயதாகாத இளைஞர்கள். கால்பந்து விளையாட வேண்டும் என்றால் மனதில் ஒழுக்கம் இருக்க வேண்டும் உடலில் உறுதி இருக்க வேண்டும்.

இங்கு முன்னாள் விளையாட்டு வீரர் முகமது சம்ஷத் பேசுகையில், ‘கால்பந்து விளையாட்டை வாழ்க்கையின் பல்வேறு நிலைகளுடன் ஒப்பிட்டுப் பேசினார். அற்புதமான பேச்சு.’ கால்பந்தாட்டம் அல்ல. கால் போராட்டம் என்று குறிப்பிடலாம். வாழ்க்கையின் போராட்டம்.

படத்தின் முன்னோட்டம் நேர்த்தியாக இருந்தது. இதனை உருவாக்கிய இயக்குநருக்கும், படக்குழுவினரும் நன்றி. படத்தில் நடித்த நடிகர்கள் வடசென்னைத் தமிழில் பேசி நடித்திருப்பது வரவேற்பைப் பெறும். மனம் விரும்பி ஒரு மொழியை யார் வேண்டுமானாலும் கற்கலாம். புரட்சிக்கவி மகாகவி பாரதியார் ஒன்பது மொழிகளைக் கற்றார். அதன் பிறகுதான் அவர் ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்’ என்றார்.

இந்தப் படத்தின் இசை அமைப்பாளர் மற்றும் பின்னணி இசை அமைப்பாளர் இருவருக்கும் சிறந்த எதிர்காலம் இருக்கிறது.” என்றார்.

இயக்குநர் பேரரசு பேசுகையில்,

” கறுப்பான ஆண்களைத் தேர்ந்தெடுத்து நாயகனாக்கி சூப்பர்ஸ்டாராக்குவது மறைந்த இயக்குநர் சிகரம் கே பாலச்சந்தரின் பாணி. கருப்பான பெண்களை தேர்ந்தெடுத்து நாயகியாக்கி சிறந்த நடிகைக்கான விருதுகளை வாங்கச் செய்வது மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் பாணி. அந்த வகையில் பாலுமகேந்திராவின் பயிற்சிப் பட்டறையில் உருவான இப்படத்தின் நாயகி சக்தி மகேந்திரா இந்த படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு சிறந்த நடிகையாக வளர வேண்டும் என வாழ்த்துகிறேன்.

இப்படத்தின் இயக்குநருக்கு முன்கோபம் அதிகம் என படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் மதுசூதனன் குறிப்பிட்டார். ஒவ்வொரு இயக்குநருக்கும் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குவதற்கு முன், கோபம் இருப்பதுதான் சரியானது. பொருத்தமானது. ஏனெனில் திரை உலகில் இயக்குநர் கோபப்பட்டால் தான் இங்கு காரியம் நடக்கும்.

இயக்குநர் நாகராஜ் பேசும்போது, ‘சினிமாவை நிஜமாக காதலித்தால், அது கைவிடாது’ என பேசினார். அது உண்மைதான். சினிமாவை உண்மையாக நேசித்தால் அது நம்மை ஒருபோதும் கைவிடாது.

பத்திரிகையாளர் சுபாஷ் பேசும்போது, இன்றைய சூழலில் பள்ளிக்கூடங்களில் விளையாட்டுப் பாடவேளையை வேறு பிரிவு ஆசிரியர்கள் கைப்பற்றி விடுகிறார்கள். மைதானம் கூட இருப்பதில்லை எனக் குறிப்பிட்டார். ஆனால் இனி பள்ளிக் கூடங்களில் தமிழ் இருக்குமா ..! என்பதே சந்தேகம்தான். தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் தமிழ் மொழி விருப்பப் பாடமாக இருக்கிறது. தமிழகத்தில் தாய்மொழியான தமிழ் மொழி, விருப்ப பாடமாக இருக்கிறது. இந்த அநியாயத்தை எதிர்த்து யார் கேள்வி கேட்பது? இந்தியை எதிர்க்கிறோம் என்பதெல்லாம் வேறு. தமிழை எப்படிப் பாதுகாக்கப் போகிறோம் என்பதுதான் முக்கியமான கேள்வி. இன்றைக்கு பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவர்களை சிலரை அழைத்து தமிழில் எழுதச் சொல்லுங்கள். தமிழில் எழுதியதை வாசித்து படிக்கச் சொல்லுங்கள். அப்போதுதான் தமிழ்மொழி எவ்வளவு ஆபத்தான சூழலில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது என்பது அனைவருக்கும் புரியும். தற்போதைய சூழலில் பள்ளிக்கூடங்களிலிருந்து மைதானங்கள் மறைந்து போயிருக்கும் நிலையை போல், எதிர்காலத்தில் மாணவர்கள் தமிழை எழுதவும், தமிழை எழுதியதை வாசிக்கவும் மறந்து போன தலைமுறை உருவாகிவிடும்.

இப்பொழுது தேசப்பற்று, நாட்டுப்பற்று என பேசுபவர்களை ‘சங்கி’ எனக்குறிப்பிடுகிறார்கள்.

கால்பந்து விளையாட்டு தான் இந்தியாவில் சிறந்த விளையாட்டு. அந்த விளையாட்டு தான், இரண்டு அணிகளும் சம பலத்துடன் மோதும் விளையாட்டு. அதுதான் சுறுசுறுப்பான விளையாட்டு. ஆனால் சோம்பேறி விளையாட்டு என குறிப்பிடப்படும் கிரிக்கெட் இங்கு பிரபலமாகிவிட்டது.

வழுக்கு மர விளையாட்டு போன்றதுதான் சினிமா. போராடி போராடி போராடி வழுக்கி வழுக்கி வெற்றி இலக்கைத் தொடும் வரை யாரும் நம்மை ஆதரிக்க மாட்டார்கள். ஆனால் வெற்றி பெற்ற பின்பு நம்மைச் சூழ்ந்து கொள்வார்கள்.

பெரிய பட்ஜெட் படங்களில் பணியாற்றும் அனைவரும் வசதி வாய்ப்புள்ளவர்கள். ஆனால் ‘போலாமா ஊர்கோலம்’ போன்ற சிறிய பட்ஜெட் படங்களில் தான் நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் உணர்வுபூர்வமாகப் பணியாற்றுகிறார்கள். சிறிய பட்ஜெட் படங்கள் தான் அடையாளத்திற்காகப் போராடும் அறிமுக கலைஞர்களுக்கும், வளரும் கலைஞர்களுக்கும் ஆதரவளிக்கின்றன. ‘போலாமா ஊர்கோலம்’ படம் வெளியான பிறகு, வெற்றி ஊர்வலமாக மாறும்” என்றார்.

இறுதியாக படத்தின் இசையை சிறப்பு விருந்தினர்கள் கே ராஜன், பேரரசு ஆகியோர் வெளியிட, மூத்த கால்பந்து வீரர்கள் மற்றும் படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர்.

இவ விழாவில் இந்தியாவிற்காக விளையாடிய சர்வதேச கால்பந்து வீரர் அப்துல் ஷம்சத் , கேரம் அசோசியேசன் தலைவர் கே எம் மார்ட்டின், நடிகர் மேஜர் கௌதம் , படத்தின் நாயகி சக்தி மகேந்திரா, நடிகர்கள் மதுசூதன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

Cinema News Tags:இசை அமைப்பாளர் ஷமந்த் நாக் இசையில் உருவான 'போலாமா ஊர்கோலம்' படத்தின் இசை வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது., கிளாசிக்கல் கமர்சியல் படைப்பாக உருவாகியிருக்கும் 'போலாமா ஊர்கோலம்', தமிழகப் பள்ளிகளில் தமிழ் விருப்பப்பாடமா? தமிழை எப்படிப் பாதுகாக்கப் போகிறோம்? - பேரரசு கேள்வி, நம்பியவர்களை சினிமா கைவிடாது: இயக்குநர் பேரரசு பேச்சு, நேர்காணல் கொடுக்க கட்டணம் வசூலிக்கிறேன்: கே. ராஜன் பேச்சு, போலாமா ஊர்கோலம்' இசை வெளியீடு!, மூத்த கால்பந்தாட்ட வீரர்கள் 20 பேர் கலந்து கொண்ட வித்தியாசமான திரைப்பட விழா!

Post navigation

Previous Post: கூகுள் குட்டப்பா திரைவிமர்சனம்
Next Post: ஆஹா ஒரிஜினல் படைப்பு ‘குத்துக்கு பத்து’ வலைத்தளத் தொடரின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியீடு

Related Posts

முதல் முறையாக பான் இந்தியா இசையில் தடம் பதிக்கும் டி ஆர் Cinema News
WorldMusicDay just a small note from Harish Kalyan StayHomeStaySafe WorldMusicDay just a small note from Harish Kalyan StayHomeStaySafe PIC Cinema News
பாரதிராஜாவுக்கு ‘தாதா சாகிப் பால்கே விருதை இந்த வருடம் தர, இந்திய அரசாங்கத்திடம் அளிக்கும் கோரிக்கை பாரதிராஜாவுக்கு தாதா சாகிப் பால்கே விருதை இந்த வருடம் தர, இந்திய அரசாங்கத்திடம் கோரிக்கை Cinema News
எதிர் வினையாற்று படம் கிரைம் திரில்லர் எதிர் வினையாற்று படம் கிரைம் திரில்லர் விரைவில் வெள்ளித்திரையில் Cinema News
டைகர் நாகேஷ்வரராவ்’ படத்துக்கு 7 கோடியில் பிரம்மாண்ட செட் டைகர் நாகேஷ்வரராவ்’ படத்துக்கு 7 கோடியில் பிரம்மாண்ட செட் Cinema News
Advanced Grohair Clinic 5th branch Launched in Adyar Advanced Grohair Clinic 5th branch Launched in Adyar Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme