Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

எதற்கும் துணிந்தவன் திரைவிமர்சனம்

எதற்கும் துணிந்தவன் திரைவிமர்சனம்

Posted on March 12, 2022March 12, 2022 By admin

தென்னாடு பகுதியில் வக்கீலாக இருக்கும் சூர்யா, தந்தை சத்யராஜ், தாய் சரண்யாவுடன் வாழ்ந்து வருகிறார். வடநாடு பகுதியில் மிகவும் செல்வாக்கு மிக்கவராக இருக்கிறார் வினய். தென்னாடு, வடநாடு ஊர்களுக்கு இடையே சில ஆண்டுகளாக பகை இருந்து வருகிறது.

இந்நிலையில் ஊரில் சில பெண்கள் கொலை மற்றும் தற்கொலை செய்யப்படுகிறார்கள். இதற்கான காரணத்தை கண்டுபிடிக்க சூர்யா தீவிரம் காட்டுகிறார். இதன் பின்னணியில் வினய் இருப்பது சூர்யாவிற்கு தெரிய வருகிறது.

‘நம்ம பிள்ளை நாலு கொலை பண்ணிட்டானாம்’ என்று அம்மா சரண்யா பொன் வண்ணன் பதற.. ‘கணக்கு தப்பா இருக்கும்…’ என்று சொல்கிறார் சூர்யாவின் அப்பாவாக நடித்திருக்கும் சத்யராஜ். கோவையை அடுத்து, வடநாடு, தென்நாடு என்று எதிரும் புதிருமாக இருக்கும் இரண்டு கிராமங்களில் தென்னாட்டைச் சேர்ந்த பெரிய தலைக்கட்டான சத்தியராஜின் மகன் கண்ணபிரான் என்கிற புகழ்பெற்ற இளம் வழக்கறிஞர்தான் சூர்யா. அப்படி பட்டவர் 8 பேரை ஏன் கொலைசெய்து குவித்தார் என்பதுதான் கதை.

களத்தில் இறங்கி தீயவர்களை பந்தாடும் முன்பு சூர்யா சொல்கிறார்:‘நான் கோர்ட்ல கருப்பு கோட்டு போட்டா ஜட்ஜ் வேற ஒருத்தர்… அதுவே நான் வேட்டிய மடிச்சு கட்டினா இங்க நான்தான்டா நீதிபதி’. இந்த வசனம்தான் மொத்தப் படமுமே.. கருப்புக் கோட் அணிந்து நீதிமன்றத்தில் வென்று தரமுடியாமல் போகும் நீதியை, வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு, நீதியை சாகடித்தவர்களை சூர்யா வேட்டையாடுகிறார். ஆனால், அவருடைய நர வேட்டைக்கு படத்தில் ‘ஜஸ்டிஸ்’ வேண்டுமல்லவா? அது படத்தின் பின்னணியில் தீயவர்கள் யார் அவர்கள் என்ன காரியம் செய்து தீயவர்களாக இருக்கிறார்கள் என்கிற காரணம் மிக அழுத்தமாகவே சொல்லப்பட்டிருக்கிறது.

இயக்குநர் பாண்டிராஜ், படத்தின் மையப் பிரச்சினையாக இளம் பெண்கள் மீதான பாலியல் வன்முறை அத்துமீறல் குற்றங்களை கையெலெடுத்திருக்கிறார். அதிமுக ஆட்சியில் இருந்தபோது கோவையை அடுத்த பொள்ளாட்சியில் அரசியல் பிரமுகர் ஒருவருடைய மகன் உட்பட பலர் ஒரு குழுவாக இயங்கி, இளம்பெண்களை காதலில் வீழ்த்தி அவர்களை பாலியல் ரீதியாக பயன்படுத்தி ஆபாசப் படமெடுத்து வைத்துகொண்டு மிரட்டும் கும்பல் குறித்து தமிழ்நாடே தீயாகப் பரபரத்தது. அந்தப் பிரச்சினை அரசியல் காரணங்களுக்காக அப்படியே அமுக்கப்பட்டபோது தமிழ்நாட்டு மக்கள் கொதித்துதான் போனார்கள். அந்தப் பொள்ளாட்சிக் கொடூரத்தின் உண்மையான பின்னணியை தோலுரித்துக் காட்டியிருக்கிறார் இயக்குநர்.

ஊரில் இருக்கும் எல்லா பெண்களும் சூர்யாவுக்கு ராக்கி கட்டி ‘அண்ணே அண்ணே…’ என்று அழைக்க, சிறு வயதில் தனது தங்கையை ‘இழந்த’சூர்யா அனைவருக்கும் பாசம் நிறைந்த அண்ணனாக வலம் வருகிறார். ஊர்ப் பெண்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் முதல் ஆளாகப் போய்நின்று தோள் கொடுக்கிறார். அப்படிப்பட்டவர், வடநாடு கிராமத்தைச் சேர்ந்த பிரியங்கா மோகனைப் பார்த்ததும் காதலில் விழுகிறார். பிரியங்காவுக்கும் சூர்யா மீது கொள்ளை பிரியம். பிரியங்கா வீட்டில் எதிர்க்க, ஊர் மொத்தமும் கூடியிருக்கும் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் வைத்து திருட்டுத் தாலி கட்டி கூட்டி வந்துவிடுகிறார். அதுவரை காதல் கலாட்டா, இரண்டு ஊர்களுக்கும் இடையிலான பிரச்சினை எனச் சென்று கொண்டிருந்த படம் முக்கிய பிரச்சினைக்குள் நுழைந்து, சூர்யாவை கருப்புக் கோட்டை உதறிவிட்டு வேட்டியை மடித்துக்கட்டும் ஆளாக்கிவிடுகின்றன.

‘சூரரைப் போற்று’ படத்துக்குப் பிறகு மீண்டும் கிராமத்துக் காதலில் கலங்கடிக்கிறார் சூர்யா. மனைவிக்கு அவர் தன்னம்பிக்கை தரும் காட்சியில் திரையரங்கில் விசில் பறக்கிறது. கையில் பட்டாக்கத்தி ஏந்தி தீயவர்களை பிளக்கும் காட்சியிலோ தியேட்டர் மொத்தம் எழுந்து நின்று கத்துகிறது என்றால், பொள்ளாட்சி சம்பவம் தமிழ் நாட்டு மக்களை எந்த அளவுக்கு காயப்படுத்தியிருக்கிறது என்று தெரிந்துகொள்ளலாம். சூர்யா உண்மையில் ஜமாய்த்திருக்கிறார். அதிலும் ஒரு பாடலில் முருகர் வேடத்தில் வரும்போது அப்பா சிவகுமாரைப் போலவே அழகோ அழகு.

வெள்ளந்தித்தனமும் புத்திசாலித்தனமும் கொண்ட பெண்ணாக வரும் பிரியா மோகனின் நடிப்பும் அசத்தல். பெண்களை எடுப்பார் கைபிள்ளையாக நினைக்கும் தீயவர்களை கருவறுக்கும் படத்தில், அப்பா இளவரசுவின் கண்களில் மண்ணைத் தூவி சூர்யாவைக் கைப்பிடிப்பதுபோல் கதாநாயகியைச் சித்தரிப்பது முரண்பாடாக இருக்கிறது.சூர்யா, பிரியங்கா மோகனுக்கு அடுத்த இடத்தில் அவருடைய அப்பாவாக வரும் சத்யராஜும் அம்மாவாக வரும் சரண்யா பொன் வண்ணனும் சரியான கலகலப்பு ஜோடிகள்.

கதாநாயகனாக பல படங்களில் நடித்த வினய், டாக்டர் படத்துக்குப் பிறகு அய்யோ ! என அலறும் அளவுக்கு வில்லன் வேடங்களில் துவம்சம் பண்ணத் தொடங்கியிருக்கிறார். அவர் செய்யும் ஹைடெக் தீமை அணைத்தும் இன்றைய தொழில் நுட்பம் குற்றங்கள் பெருகவும் எப்படி காரணமாகிவிட்டது என்பதற்கு எடுத்துகாட்டு. குடும்பம், குற்றக் கும்பல் என்ற கலவையில் உருவாகியிருக்கும் படத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வந்த புகழ் மற்றும் கலக்கப்போவது யாரு ராமர் ஆகியோர் சூரியுடன் சேர்ந்து செய்யும் நகைச்சுவையும் வருகிறது. இவர்களிடம் நாயகி பிரியங்கா மோகனின் அப்பாவாக வரும் இளவரசு படும்பாடு நகைச்சுவையாகக் காட்டப்படுகிறது.கிராமத்து திருவிழாவை பிரம்மாண்டமாகக் காட்டும் ரத்னவேலுவின் ஒளிப்பதிவு, இமானின் இசை பின்னணி இசை, பாடல்கள் என்பனவும் படத்திற்குப் பலம்.

பெண்களைக் காவுகொள்ளும் பாலியல் குற்றங்களுக்கு தண்டனை கிடைப்பதில்லை, குற்றம் செய்பவர்கள் சட்டத்தில் இருக்கும் ஒட்டைகளை வைத்து தப்பித்துகொள்கிறார்கள் என சொல்ல வருகிறது படம். ஜெய் பீம் படத்தில் நீதியை நீதிமன்றத்தின் வழியாகப் பெற்றுத்தரும் சூர்யா, இதில் அவரே நீதி வழங்குவது அவரது ஹீரோயிசத்துக்கு தீணியாக அமைந்திருக்கலாம். ஆனாலும் நீதிமன்றில் பெண் நீதிபதியே அளிக்கப்பட்ட சாட்சியங்களின் உண்மைத் தன்மையினை ஆய்ந்தறியாமல் அவசரமாக வழக்கினை தள்ளுபடி செய்து விடுவதான காட்சி அமைப்புக்கள் சட்டத்தினால் பாதிப்புறும் பெண்களுக்கு நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையைத் தரவில்லை என்பதில் கதாசிரியராக தோற்றுப் போகும் பாண்டியராஜ், இதுதான் தமிழகத்தின் உண்மை நிலை என்பதைச் சொல்கையில் பாதிப்புற்றவர்களின் குரலாக வெற்றி பெறுகின்றாரோ…?

Movie Reviews Tags:எதற்கும் துணிந்தவன் திரைவிமர்சனம்

Post navigation

Previous Post: ஹே சினாமிகா திரைவிமர்சனம்
Next Post: மாறன் திரைவிமர்சனம்

Related Posts

sayyesha-arya-indiastarsnow.com ஆர்யா அசரடிக்கும் மகத்தான மகாமுனி Cinema News
பட்டத்து அரசன் திரை விமர்சனம் பட்டத்து அரசன் திரை விமர்சனம் Cinema News
சேத்துமான் திரைவிமர்சனம் சேத்துமான் திரைவிமர்சனம் Cinema News
குருதி ஆட்டம் திரைவிமர்சனம் குருதி ஆட்டம் திரைவிமர்சனம் Movie Reviews
பச்சை விளக்கு Cinema Review பச்சை விளக்கு Cinema Review Movie Reviews
Perunali Film Review பெருநாளி திரை விமர்சனம் Movie Reviews

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme