நாயகன் திருமுருகன், பிழைப்பு தேடி ஒரு ஊருக்குச் செல்கிறார். அங்கு, பூ ராம் குடும்பத்தில் சரவணன் சக்தி பிரச்சனைகளை இழுக்க, ஹீரோ எண்ட்ரீ ஆகி பூ ராம் குடும்பத்தை காப்பாற்றுகிறார்.
இதனால், பூ ராம், தன் குடும்பத்தில் திருமுருகனுக்கு அடைக்கலம் கொடுக்கிறார். ஒருகட்டத்தில் திருமுருகனுக்கு தனது இரண்டாவது மகளான ஷில்பாவை மணமுடித்து வைக்க திட்டமிடுகிறார்.
வெளிநாட்டில் இருக்கும் தனது மகன் காளி வெங்கட்’க்கு அழைப்பு விடுக்கிறார். அவரும் திருமணத்திற்கு வருகிறார். திருமணமும் நல்லபடியாக நடைபெறுகிறது.
அன்று இரவு, திருமுருகன் ஒரு சைக்கோ கொலைகாரன் என்பதை பழைய நாளிதழ் ஒன்றினை பார்த்து தெரிந்து கொள்கிறார் காளி வெங்கட்.
அதன்பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை…
களவாணி படத்தில் வில்லனாக பார்த்த திருமுருகன் சதாசிவனை இதில் ஹீரோவாக பார்க்க வைத்திருக்கிறார் இயக்குனர். படம் முழுக்க சைக்கோ போலவே சுற்றித் திரிகிறார் நாயகன். க்ளைமாக்ஸ் காட்சியில் மட்டுமே அவருக்கு வசனங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
முதல் பாதியில் காமெடி என்ற பெயரில் நம்மை சோதனைக்கு உள்ளாக்கியவர் சிங்கம் புலி. மற்றவரை பேச விடாமல் இவர் மட்டுமே பேசி, காமெடி காட்சிகளை நசுக்கி கொலை செய்துவிட்டார் சிங்கம் புலி.
நாயகி ஷில்பா மஞ்சுநாத், புடவையில் அழகான தேவதையாக வந்து செல்கிறார். மற்றொரு நாயகியாக வந்த சனுஜா சோமந்த் அவர்களும் தனது கேரக்டரை கச்சிதமாக செய்திருக்கிறார்.
காமெடி, குணச்சித்திரம் என முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த காளி வெங்கட், தனது ஓவர் ஆக்டிங்கை சற்று குறைத்திருந்திருக்கலாம்.
நல்ல ஒரு மூலக்கருவை கையில் எடுத்த இயக்குனர் சென்னன். அதை கொண்டு செல்லும் விதத்தில் சற்று தடுமாறியிருக்கிறார். ஒட்டு மொத்த கதையையும் இரண்டாம் பாதியில் அதுவும் கடைசி பத்து நிமிடங்களில் வைத்திருக்கிறார்.
சைக்கோ போல் சுற்றும் நாயகன் எப்போது தான் பேசுவார் என்று படம் பார்ப்பவர்களை எரிச்சலடைய வைத்துவிட்டார்.
வழக்கம்போல், நாயகிக்கு தந்தையாக பூ ராம், தனது கேரக்டரை நல்லவிதமாக செய்து முடித்திருக்கிறார்.
ராஜேஷ் ராமனின் ஒளிப்பதிவு காட்சிகளை ரசிக்கும்படியாக கொடுத்திருக்கிறார். அந்தோணி ஆபிரகாம், தனது இசையில் சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்