அஜீத்தின் ‘வலிமை’ திரைப்படத்தை வெளியிடுவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் மும்முறமாக நடைபெற்று வருகிறது.
2019 அக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட ‘வலிமை’ திரைப்படம் கொரோனா தாக்குதலினால் 2 வருட தாமதத்திற்குப் பிறகு அடுத்த ஆண்டு 2022 ஜனவரி 13-ம் தேதி பொங்கல் வெளியீடாக வெளியாகிறது.
இந்தப் படம் 135 கோடி ரூபாய் செலவில் தயாராகியிருப்பதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் அஜீத்தின் சம்பளம் மட்டுமே 60 கோடி என்கிறார்கள்.
தற்போது இத்திரைப்படம் வெளியீட்டுக்குத் தயாராகிவிட்டது. தமிழ்நாடு முழுவதும் படத்தைத் திரையிடும் உரிமையை அன்புச் செழியனின் ‘கோபுரம் பிலிம்ஸ்’ நிறுவனம் பெற்றுள்ளது. இதன் விலை 75 கோடி என்கிறது விநியோகஸ்தர்கள் வட்டாரம்.
இப்போது அனைத்து ஏரியாக்களும் விற்பனை செய்யப்பட்டு விநியோகஸ்தர்களும் உறுதி செய்யப்பட்டுவிட்டனராம்.
இதன்படி ‘வலிமை’ படத்தின் சென்னை சிட்டி உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. செங்கல்பட்டு ஏரியாவை ஸ்கைமேன் புரொடெக்சன்ஸ் பெற்றுள்ளது. வட ஆற்காடு-தென் ஆற்காடு ஏரியாவை ராக்போர்ட் எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் பெற்றுள்ளது. கோவை ஏரியாவை SSI புரொடெக்சன்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. மதுரை ஏரியாவில் கோபுரம் பிலிம்ஸே வெளியிடுகிறது. திருச்சி ஏரியாவை ஸ்ரீதுர்காம்பிகை பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. சேலம் ஏரியாவை ஸ்ரீகுமரன் நிறுவனமும், நெல்லை, கன்னியாகுமரி ஏரியாவை MKRP புரொடெக்சன்ஸ் நிறுவனமும் வெளியிடுகிறது.