Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

வேலூர் இப்ராஹிம்! -indiastarsnow.com

கல்யாணராமனைக் கண்டிப்பவர்கள் திருமாவளவனைக் கண்டிக்கவில்லையே – கொதிக்கும் வேலூர் இப்ராஹிம்!

Posted on February 13, 2021April 11, 2021 By admin No Comments on கல்யாணராமனைக் கண்டிப்பவர்கள் திருமாவளவனைக் கண்டிக்கவில்லையே – கொதிக்கும் வேலூர் இப்ராஹிம்!

“கல்யாணராமனைக் கண்டிப்பவர்கள் திருமாவளவனைக் கண்டிக்கவில்லையே…’’ – கொதிக்கும் வேலூர் இப்ராஹிம்!
த.

“கோவையில், நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பா.ஜ.க-வைச் சேர்ந்த கல்யாணராமனைக் கண்டிப்பவர்கள், மனு தர்மம் குறித்து சர்ச்சையாகப் பேசிய திருமாவளவனைக் கண்டிக்கவில்லையே’’ எனக் கேள்வி கேட்கிறார் வேலூர் இப்ராஹிம்.

கோவை, மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற கூட்டத்தில், பா.ஜ.க செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன், நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து கல்யாணராமனைக் காவல்துறை கைதுசெய்திருக்கிறது. `தமிழ்நாடு ஏகத்துவ பிரசார ஜமா அத்’ இயக்கத்தின் தலைவரும் பா.ஜ.க ஆதரவாளருமான வேலூர் இப்ராஹிமிடம் இது குறித்துப் பேசினேன்….

“நபிகள் நாயகம் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கும் கல்யாணராமனை நீங்கள் மென்மையாகக் கண்டித்திருப்பதாகச் சொல்கிறார்களே..?’’

“ `இறைத்தூதரை உங்கள் உயிரைவிட மேலாக நேசிக்க வேண்டும்’ என திருக்குர்ரான் சொல்கிறது. அந்தவகையில் ஐந்து வேளை தொழுகை நடத்தக்கூடிய, இஸ்லாமிய மார்க்கத்தின் மீது முழுமையான பற்றுடையவன் நான்.

பா.ஜ.க கூட்டத்தில் கல்யாணராமன்
பா.ஜ.க கூட்டத்தில் கல்யாணராமன்
இந்தச் சூழலில், பா.ஜ.க செயற்குழு உறுப்பினரான கல்யாணராமன், நபிகள் நாயகத்தை இழிவுபடுத்திப் பேசியதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்… மிகக் கடுமையாக என் கண்டனத்தை வெளிப்படுத்தியிருக்கிறேன். பா.ஜ.க தலைவர்களேகூட அவரது பேச்சைக் கண்டித்திருக்கிறார்கள். நடந்துவிட்ட தவறுக்காக என்னிடமும் தனிப்பட்ட முறையில் வருத்தம் தெரிவித்திருக்கின்றனர். ஆனால், `பா.ஜ.க செயற்குழு உறுப்பினரான கல்யாணராமன் இப்படிப் பேசலாமா’ என்று அரசியல்ரீதியாக இப்போது கண்டிக்கிற பலரும், வி.சி.க தலைவர் பொறுப்பில் இருக்கக்கூடிய திருமாவளவன் மனு தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியபோது கண்டிக்கவில்லையே…”

“மனு ஸ்மிருதியில் கூறப்பட்டிருப்பதை அப்படியே திருமாவளவன் எடுத்துச்சொல்வதையும், நபிகள் நாயகத்தை தரக்குறைவாக விமர்சிப்பதையும் ஒன்றாகப் பார்க்கமுடியுமா?’’

“மனு ஸ்ம்ருதி பற்றிப் பேசுவதாக இருந்தால், முதலில் சம்ஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும். அதேபோல், நபிகள் நாயகத்தைப் பற்றிப் பேசுவதாக இருந்தால், அரபி மொழியில் ஞானம் இருக்க வேண்டும். சம்ஸ்கிருதம் தெரியாத திருமாவளவன், யாரோ ஒருவர் மொழிமாற்றம் செய்த புத்தகத்திலிருந்து கோடிட்டுக் காட்டிப் பேசுவது தவறு. ஏனெனில், ஒரு வார்த்தைக்குப் பல்வேறு அர்த்தங்கள் இருக்கும். அந்த உண்மைகள் அனைத்தும் வேத பண்டிதர்களுக்குத்தான் தெரியும்.

நபிகள் நாயகம் எப்படிப்பட்ட ஆண்மைகொண்டவர் என்பது குறித்து நானே மேடைகளில் பேசியிருக்கிறேன். எனவே, அன்றைய சம்பவத்தின்போது நானும் உடன் இருந்திருந்தால் கல்யாணராமனுக்கும் இது குறித்துப் பேசிப் புரியவைத்திருப்பேன். இப்படிப்பட்ட தர்மசங்கடமான சூழல் உருவாவதையே தடுத்திருப்பேன். எனவே, கல்யாணராமன், திருமாவளவன் என இந்த இருவர் பேசியதுமே தரங்கெட்டத்தனமானதுதான்!”

“மதரீதியான கலவரத்தைத் தூண்டி கட்சியை வளர்ப்பதுதான் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-வின் செயல்திட்டம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனவே?’’

“ஆர்.எஸ்.எஸ் இயக்கம் மதக் கலவரத்தைத் தூண்டுகிறது என்ற பிரசாரத்தையே நான் மறுக்கிறேன். ஏனெனில், இந்தச் சம்பவம் நடப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்புதான் கொடைக்கானலில், குடியரசு தினத்தன்று தேச ஒற்றுமை குறித்து நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நான் பேசினேன். அப்போது, எஸ்.டி.பி.ஐ., த.மு.மு.க மற்றும் நாம் தமிழர் கட்சிகளைச் சேர்ந்த 50 பேர் என் மீது கல், இரும்புக்கம்பியால் தாக்கினர். மேலும், வேலூர் இப்ராஹிம் பா.ஜ.க மேடையில் நின்றுகொண்டு, இஸ்லாமைத் தாக்கிப் பேசினார் என்று பொய்ச் செய்தியையும் பரப்புகிறார்கள்.

கல்யாணராமன் பேசியது தவறுதான். அதேசமயம் அவரது தவற்றை யார் கண்டிக்க வேண்டும்… தனிநபர் யாரேனும் கண்டிக்க முடியுமா… அவர்மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், கைது செய்ய வேண்டும் என்றல்லவா போராட வேண்டும்… ஆனால், த.மு.மு.க., வி.சி.க கட்சியினரோ, `கல்யாணராமனைத் துண்டு துண்டாக வெட்டிக் கொல்வோம்’ என்று பேசியிருக்கிறார்கள்.’’

“மதுரை, திருப்பாலையில் பா.ஜ.க-வினர் கொண்டாடிய `நம்ம ஊர் பொங்கல்’ ஊர்வலத்திலும் பிரச்னை ஏற்பட்டிருக்கிறதே..?”

“பொங்கல் விழாவைக் கடந்த காலங்களிலும் பா.ஜ.க கொண்டாடியிருக்கிறது. ஆனால், இந்த வருடம்தான் பொங்கல் விழாவை ஓர் ஊர்வலமாகக் கொண்டுசென்றனர். அப்போது ஊர்வலத்தினரை நோக்கி ஓர் இஸ்லாமிய பெண்மணிதான் செருப்பை எடுத்து வீசுகிறாரே தவிர, பா.ஜ.க தொண்டர்களில் ஒருவர்கூட எதிர்வினையாற்றவில்லை. இதற்கான வீடியோ பதிவுகள் உள்ளன. ஆனால், பள்ளிவாசலுக்குள் பா.ஜ.க-வினர் செருப்பு, கற்களை வீசினர் என்று வி.சி.க., எஸ்.டி.பி.ஐ கட்சிகள் பொய்ச் செய்திகளைப் பரப்பிவிட்டன. ஆனால், பள்ளிவாசலில் பாங்கு ஒலிக்கும் சத்தம் கேட்டதும், பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் ஶ்ரீனிவாசன் தனது பேச்சை நிறுத்திவிடுகிறார். இப்படி மத நல்லிணக்கத்தோடுதான் பா.ஜ.க-வினர் நடந்துகொள்கின்றனர். ஆனால், `இஸ்லாமிய மக்கள் தி.மு.க-வுக்கு வாக்களிக்க வேண்டும்’ என்ற சதித்திட்டத்தோடு பா.ஜ.க மீது திட்டமிட்ட பொய்ச் செய்திகளை அரசியல்ரீதியாக சிலர் பரப்புகின்றனர். வி.சி.க போன்ற கட்சிகளும் இதற்கு உதவியாக இருக்கின்றன.”

“பெரும்பான்மைச் சமூகத்தின் பாதுகாப்புக்காக அதிகமாகக் குரல் கொடுக்கிறீர்களே?’’

“இந்துக்களுக்கு ஒரு பாதிப்பு என்றால், அதற்காக இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த வேலூர் இப்ராஹிம் முதல் குரல் எழுப்புவதில் என்ன தவறு இருக்கிறது… எங்களுடைய முன்னோர்களுமே ஒருகாலத்தில் இந்துக்கள்தானே?

எந்த மதத்தையும் யாரும் புண்படுத்தக்கூடாது என்றுதானே கல்யாணராமனை இந்து மதத்தைச் சார்ந்த தலைவர்களே கண்டித்திருக்கின்றனர்… அந்தவகையில், சிறுபான்மை சமூகத்து மக்கள் தவறு செய்தாலும், அதையும் சுட்டிக்காட்டுகிற ஒரு தலைவன் சிறுபான்மைச் சமூகத்திலிருந்தே வந்திருக்கிறான் என்பதும் நல்ல செய்திதானே…”

“பல்வேறு இஸ்லாமிய இயக்கங்களுக்கு மத்தியில் உங்கள் இயக்கம் மட்டும் வித்தியாசமாகச் செயல்படுகிறதே ஏன்?”

“சொந்தச் சமூக மக்களை தங்களது சுயலாபத்துக்காக சில அமைப்புத் தலைவர்கள் தவறாக வழிநடத்துகிறார்கள்; பலியாக்குகிறார்கள். இந்தச் சூழலில், நான் உண்மையை எடுத்துச் சொல்கிறேன். இந்தப் பணியில் நான் பலியானால்கூட என்னைப் போன்று லட்சம் பேர் வருவார்கள்… பேசுவார்கள்… மக்களைச் சிந்திக்கத் தூண்டுவார்கள். இஸ்லாமிய மக்கள் முரடர்களாக, போராட்டக்காரர்களாக, வன்முறையாளர்களாகச் சித்திரிக்கப்படும் நிலை மாறி, சகிப்புத் தன்மையானவர்கள் என்ற நிலையை நாங்கள் உருவாக்குவோம்.

கல்யாணராமன் பேசியது கண்டிக்கத்தக்கது. ஆனால், அதற்கும் ஒரு வாரத்துக்கு முன்பே எஸ்.டி.பி.ஐ கட்சியினர் பிரதமர் மோடியைக் கொச்சையாகப் பேசினார்களே, இதையெல்லாம் யார் சுட்டிக்காட்டுவது… திருப்பாலை, கொடைக்கானல் சம்பவங்களைப்போல் 100 சம்பவங்களை என்னால் சுட்டிக்காட்ட முடியும்.”

“தனிப்பட்ட வாழ்விலுள்ள பிரச்னைகளிலிருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ள நீங்கள் பா.ஜ.க-வில் அடைக்கலமாகியிருப்பதாகச் சொல்கிறார்களே?”

“என்னுடைய தனிப்பட்ட பிரச்னைகளுக்காக நான் பா.ஜ.க-வுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. என் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளில் இரண்டு வழக்குகள் பொய்யானவை என்று கூறி உயர் நீதிமன்றமே ரத்து செய்துவிட்டது. இன்னும் ஒரு வழக்கு நிலுவையில் இருக்கிறது… அதுவும் `வேலூர் இப்ராஹிம், அவருடன் இருக்கிற போலீஸ் அதிகாரிகளோடு சேர்ந்துகொண்டு காரைத் தூக்கிச் சென்றுவிட்டார்’ என்பதான வழக்கு. இந்த வழக்கைக் கேட்டு போலீஸ்காரர்களே சிரிக்கிறார்கள். இதுதான் நிலைமை. அண்மையில் என்னுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படுகிற அளவுக்கு என்மீது தாக்குதல் நடத்தப்பட்டது. பணத்துக்காகக்கூட ஒருவர் உயிரைப் பணயம் வைக்கலாம். ஆனால், நான் பணத்துக்காகவோ அல்லது தனிப்பட்ட பிரச்னைகளிலிருந்து தப்பிப்பதற்காகவோ இந்தப் பணியில் நான் ஈடுபடவில்லை!”

Political News Tags:கல்யாணராமனைக் கண்டிப்பவர்கள் திருமாவளவனைக் கண்டிக்கவில்லையே - கொதிக்கும் வேலூர் இப்ராஹிம்! த.கதிரவன், வேலூர் இப்ராஹிம்

Post navigation

Previous Post: தமிழ்,தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட பதிப்பிற்க்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைக்கிறார்
Next Post: மூக்கை வைத்தே நீங்க எப்படிப்பட்டவர் என்பதை சொல்ல முடியும்?

Related Posts

ஓபிஎஸ் தர்மயுத்தம் 2.o க்கு ரெடி!!!! Political News
சட்டவிரோத தொழிலும் செய்யவில்லை என்றும் நடிகர் ரஜினிகாந்த் சட்டவிரோத தொழிலும் செய்யவில்லை என்றும் நடிகர் ரஜினிகாந்த் Cinema News
புதுவை மாநிலம் செக்ஸ் சுற்றுலா பகுதியாக மாறிவருகிறது Genaral News
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளரை தேர்வு செய்வதற்கான நேர்காணல் நடைபெற்று வருகிறது மு.க.ஸ்டாலின் தலைமையில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளர் நேர்காணல் Political News
ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை முதல் 144தடை உத்தரவு அமல் ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை முதல் 144தடை உத்தரவு அமல் Genaral News
சென்னை விமான நிலையத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் திரு சஞ்சய் சாம்ராவ் செய்தியாளர் சந்திப்பு சென்னை விமான நிலையத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் திரு சஞ்சய் சாம்ராவ் செய்தியாளர் சந்திப்பு Political News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme