“எம்.ஜி.இராமச்சந்திரன் எனும் நான்”
புரட்சித்தலைவர் முதன் முதலாக முதல்வராக பதவி ஏற்று
அதிமுக அரசை அரியணையில் அமர்த்திய நாள் இன்று..
30 சூன் 1977
42-ஆண்டுகளுக்கு முன் தமிழக வரலாற்றில் இதே நாளில்தான் ஒரு புதிய அத்தியாயம் எழுதப்பட்டது..
அன்று காலையில் அண்ணா நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு விழாவுக்கு வந்திருந்தார் மக்கள்திலகம்..
அன்றைய தமிழக ஆளுனர் பிரபுதாஸ் பட்வாரி, ராஜாஜி ஹாலில் நடந்த விழாவில், தமிழக முதல்வராக பொன்மனசெம்மலுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
பதவி ஏற்ற அடுத்த நொடியே தன்னை அறியணை ஏற்றி அழகு பார்த்த மக்களை சந்திக்க புறப்பட்டார்..
அண்ணா சாலையில் அமைந்துள்ள பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து, அருகே அமைக்கப்பட்டிருந்த பெரிய மேடைக்கு வந்தார்.
அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமான பேர் அங்கே காத்திருந்தனர்…
தமிழகமெங்கும் இருந்து மக்கள் பலர் பேருந்து, ரயில், லாரி மற்றும் வேன் போன்ற வண்டிகளில் பயணித்து சென்னை வந்து சேர்ந்தனர்..
அங்கே குழுமிய லட்சக்கணக்கான மக்களில் எவர் ஒருவர் கூட செல்வ சீமான் வீட்டிலிருந்து வந்தவர்கள் இல்லை…
அனைவருமே ஏழைகள், எளியோர்கள்.. அவர்கள் அங்க அத்தனை சிரமப்பட்டு வர காரணம்…?
தங்களில் ஒருவன்… ஏழைகளின் பங்காளன்… எங்கள் வீட்டுப் பிள்ளை ஒருவர் தமிழக முதல்வராக வந்துள்ளார்… அவர் நமக்கு நல்லதே செய்வார் என்றே நம்பிக்கையில் அங்கே குழுமியிருந்தனர்..
ஜெமினி மேம்பாலத்திலிருந்து அண்ணா சிலை வரை…
மறுபக்கம் காசினோ தியேட்டர் முதல் சென்ட்ரல் ரயில் நிலையம் வரை…
இன்னொரு பக்கம் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் வரை…
வாரி வழங்கிய பாரி வள்ளலின் முகத்தை காண வேண்டும் என்ற ஆர்வத்தில் காலையிலிருந்தே மக்கள் காத்திருந்தனர்..
அங்கே இருந்த அனைவராலும் வாத்தியாரை நேரில் பார்க்க முடியாத நிலைமை இருந்தாலும், அவர் பேசுவதை நன்றாக கேட்கும் வகையில் மைக் ஏற்பாடுகள் எல்லா இடங்களிலும் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன.
பேச ஆரம்பிப்பதற்கு முன்னர், மேடையின் எல்லா திசைதோரும் சென்று, மக்களைப் பார்த்து கை அசைக்க…
அப்போது எழுந்த கரவொலியும், கை தட்டலும், விசில் சத்தம், ஆரவாரமும் அடங்க மிக நேரமாகியது..
குறைந்தபட்சம் பத்து லட்சம் பேருக்கு அதிகமானோர் சாலைகளிலும், கட்டிடங்கள் மேலேயும், மரங்களிலும், தரையிலும் எங்கிருந்தெல்லாம் எம்.ஜி.ஆரை அன்று பார்க்க முடியுமோ, அவர் பேசுவதை கேட்க முடியுமோ, அங்கெல்லாம் குவிந்திருந்தனர்…
“மதிப்பிற்கும் பாசத்திற்கும் உரிய தமிழக அமைச்சர்களே…
பாராளுமன்ற உறுப்பினர்களே..
சட்டசபை அங்கத்தினர்களே…
பெரியோர்களே, தாய்மார்களே…
என் ரத்தத்தின் ரத்தமான என் அன்பு உடன் பிறப்புக்களே…”
– என்று சொல்லி முடிக்கவில்லை…
எங்கும் கரவொலி… கை தட்டல்… உற்சாகம்..
“இந்த வெற்றி என் வெற்றி இல்லை; இது உங்கள் வெற்றி. நான் உங்களில் ஒருவன்.. உங்களுக்காகவே பாடுபடுவேன்.
இது உங்கள் ஆட்சி; மக்கள் ஆட்சி. மக்களுக்கு செய்கிற தொண்டே, மகேசனுக்கு, ஆண்டவனுக்கு செய்கிற தொண்டு என்று நான் நம்புகிறேன்.
தமிழகமும், தமிழக மக்களும் செழிப்பாக இருக்க வேண்டும்; அது தான் என் லட்சியம். என் லட்சியத்தில் நான் வெற்றி பெற, உங்களுடைய ஆசிகளை வேண்டுகிறேன்…”
-என்று மக்களின் பெருத்த ஆரவாரத்தின் இடையே அவர் பேசிக்கொண்டு இருந்தார்.
அவ்வளவு மக்கள் பாசத்துடன், அன்புடன் அவரைப் பார்க்க, பேசுவதை கேட்க கூடி இருந்தது அவர் வாழ்க்கையிலேயே அவருக்கே மறக்க முடியாத நாள் என்றே சொல்ல வேண்டும்..