கொரோனாவின் தாக்கம் தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சில மரணங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், தமிழ் சினிமாவை சேர்ந்த பிரபல தயாரிப்பாளர் ஒருவரின் குடும்பத்தில் கொரோனாவால் நிகழ்ந்த மரணத்தால் கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தராக இருப்பவர் தனஞ்செயன். இவரது தயாரிப்பில் ‘கபடதாரி’ மற்றும் விஜய் ஆண்டனி நடிப்பில் ஒரு படம் என பல படங்கள் உருவாகி வருகிறது.
இந்த நிலையில், தனஞ்செயனின் மூத்த சகோதரர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்திருக்கும் சம்பவ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனஞ்செயன் அவர்களின் மூத்த சகோதரர் மற்றும் அவரது மனைவி, மகன் ஆகியோர்களுக்கு சமீபத்தில் கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஐந்து நாட்கள் மட்டுமே ஆன நிலையில் தனது சகோதரர் கொரோனாவுக்கு பலியாகிவிட்டதாகவும், அவருடைய மனைவி, மகன் ஆகியோர் சிகிச்சையில் இருப்பதாகவும் தனஞ்செயன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது சகோதரரின் குடும்பத்திற்கு உயரிய சிகிச்சை அளிக்க முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் உதவி செய்ததாகவும் அவர்களுக்கு தனது நன்றி என்றும் தனஞ்செயன் தெரிவித்திருப்பவர், கொரோனா எனும் கொடிய நோய் தொற்றாமல் இருக்க அனைவரும் கவனமாக இருப்பதோடு, முடிந்தவரை வீட்டுக்குள்ளேயே இருங்கள், என்று வேண்டுகோளும் விடுத்துள்ளார்.