ஆவின் பால் நிறுவனத்துக்கு தண்ணீர் கலந்த பாலை விற்பனை செய்ததால் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.அவர்களிடம் இருந்து 7 வேன்கள், 50 பால் கேன்கள், 1 கார் பறிமுதல்-அவர்களுக்கு உதவியாக இருந்து ஆவின் பாலக ஊழியர்கள் 3 பேர் தற்காலிக பணியிடை நீக்கம்.
திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலையில், வேலூர் சாலையில் ஆவின் நிறுவனத்தின் பால் குளிருட்டும் நிலையம் அமைந்துள்ளது. இந்த பாலகத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளில் இருந்தும் பால் வியாபாரிகள் தங்களது பால் உற்பத்தியை விற்பனை செய்வது வழக்கம்.
இந்நிலையில் திருவண்ணாமலையில் செயல்பட்டு வரும் ஆவின் பால் குளிருட்டும் நிலையத்தில் தண்ணீர் கலந்த பால்விற்பனை செய்யப்படுவதாக ஆவின் மேலாளர் உலகநாதனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் ஆவின் ஊழியர்கள் கண்காணித்து வந்தனர்.
அப்போது ஓலப்பாடி கிராமத்தில் இருந்து பால் ஏற்றி வரும் செலவம், கீரனூர் கிராமத்தில் இருந்து பால் ஏற்றி வரும் ராஜ்குமார், மேல்பாளானந்தல் கிராமத்தில் இருந்து பால் ஏற்றி வரும் சம்மந்தம், நாச்சானந்தல் கிராமத்தில் இருந்து பால் ஏற்றி வரும் கார்த்தி, ராதாபுரம் கிராமத்தில் இருந்து பால் ஏற்றி வரும் மூர்த்தி மற்றும் மங்கலம் கிராமத்தில் இருந்து பால் ஏற்றி வரும் ரகுராம் ஆகிய 6 நபர்களும், திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் உள்ள முரளி மற்றும் கோபி ஆகிய இரண்டு தனியார் பால் வியாபாரிகளிடம் பாலை கொடுத்து அதற்காக கணிசமாக தொகையை பெற்று வந்துள்ளனர்.
மேலும் தனியார் பால் வியாபாரிகளிடம் பாலை கொடுப்பதால் பாலின் அளவு குறைந்து விடுவதால் பாலில் தண்ணீர் கலந்து ஆவின் நிறுவனத்தில் விற்று வந்துள்ளனர். ஆவின் பாலகத்தில் பாலை பரிசோதனை செய்யாமல் இருக்க ஆவின் பாலகத்தில் பணியாற்றும் சேகர், கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஷ்யாம் ஆகிய 3 பேரும் இவர்களுக்கு உதவியாக இருந்துள்ளனர்.
ஆவின் பாலகத்தில் தண்ணீர் கலந்து பால் வருவதை கண்டறிந்த ஆவின் பாலக மேலாளர் உலகநாதன் இது குறித்து திருவண்ணாமலை கிராமிய காவல் நிலையத்தில் கடந்த 21ம் தேதி புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட கிராமிய காவல் துறையினர் ஆவின் பாலகத்திற்கு வரும் பாலை தனியார் பாலகத்தில் விற்பனை செய்து வருவதை கண்டறிந்தனர்.
பின்னர் தனியார் பால் வியாபாரிகளான முரளி, கோபி மற்றும் செல்வம், ராஜ்குமார், சம்மந்தம், கார்த்தி, மூர்த்தி, ரகுராம் ஆகிய 8 பேரையும் கைது செய்து அவர்கள் மீது 379, 511 ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இவர்களுக்கு உதவியாக இருந்த ஆவின் பாலக ஊழியர்கள் சேகர், கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஷ்யாம் ஆகிய மூன்று நபர்களை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து ஆவின் பாலகம் உத்தரவிட்டுள்ளது.
இந்த கலப்படம் எத்தனை காலமாக நடக்கிறது, இதுவரை திருவண்ணாமலை ஆவினுக்கு எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. என்பதை அறிய ஆவின் தரப்பிடம் பேச முயன்றோம், ஆனால் இயலவில்லை.
தமிழகம் முழுவதும் உள்ள பல “ஆவின்” களுக்கும், இது போன்ற கலப்பட பால் சப்ளை செய்யப்படுகிறதா என்று ஆவின் நிர்வாகம் விசாரித்தால் நலம்.