இ- பாஸ் இல்லாமல் மாற்று வழியில் ராணிப்பேட்டை, வேலூருக்கு நுழையும் மக்கள்
வேலூர்: இ- பாஸ் இல்லாமல் மாற்று வழியில் ராணிப்பேட்டை, வேலூருக்கு நுழையும் மக்களால், கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறையினர் கூறினர்.
சென்னையிலிருந்து வருபவர்களை கண்காணிக்க ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் தலா, 25 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு இ- பாஸ் பெறாமல் வந்த வாகனங்களை திருப்பியஅனுப்புகின்றனர். ஆனால், சோதனைச் சாவடி அல்லாத குறுக்கு வழிகளில் மக்கள் வரத்தொடங்கியுள்ளனர்.
சென்னையிலிருந்து மினி வேன்களில் ராணிப்பேட்டை மாவட்ட எல்லையான பொன்னியம்மன் பட்டறை சோதனைச் சாவடிக்கு முன்பாக வந்து இறங்குகின்றனர். அங்கிருந்து, பனப்பாக்கம் கூட்டுசாலைக்கு அருகே மக்லின் கால்வாய் வழியாக நடந்து பொய்கை நல்லூருக்கு வருகின்றனர். அங்கிருந்து பெரும்புலிபாக்கம் வழியாக, ராணிப்பேட்டை, வேலூர் வரை பைக்கில் செல்கின்றனர். அவர்களை அழைத்துச்செல்ல, பைக் ஓட்டிகள் தயாராக உள்ளனர். ஒரு பைக்கில் இரண்டு பேரை அழைத்துச்செல்கின்றனர். ஒரு நபருக்கு ராணிப்பேட்டைக்கு, 500 ரூபாய், வேலூருக்கு, 1,000 ரூபாய் வசூலிக்கின்றனர்.
பாலாறு வழி: சென்னையிலிருந்து பைக்கில் கனகம்மா சத்திரம், திருவள்ளூர் வழியாக அரக்கோணம், சோளிங்கர், அம்மூர் வந்து அங்கிருந்து பாலாற்றையொட்டியுள்ள குப்பத்தா மோட்டூர், திருவலம், பூட்டுத்தாக்கு, சத்துவாச்சாரிக்கு வந்து வேலூரில் நுழைகின்றனர். ஆந்திரா மாநிலம், சித்தூரில் இருந்து குடிபாலா, பொன்னை, வள்ளிமலை வழியாக திருவலம், காட்பாடிக்கு பைக்கில் வந்து வேலூரில் நுழைகின்றனர். வாகனங்களுக்கு மட்டும் இ- பாஸ் உள்ளதா என போலீசார் சோதனை செய்கின்றனர்.
பைக்கில் வருபவர்களுக்கு சோதனை செய்வதில்லை. வேலூர் மாவட்ட எஸ்.பி.,பிரவேஷ்குமார் நேற்று பிள்ளையார்குப்பம் சோதனைச் சாவடியில் ஆய்வு செய்தார். அப்போது பைக்கில் வருபவர்களை கண்காணிக்க உத்தரவிட்டார்.ePass for Lockdown-indiastarsnow.com