சென்னையில் ஆட்டோ ஓட்டும் ஶ்ரீராம் கார்த்திக்கும் ஆடுகளம் முருகதாசும் உறவினர்கள். ஊரில் வசதியாக வாழ்ந்த இவர்கள் இங்கு ஆட்டோ ஓட்டுவதற்கு பின்னணியில் ஸ்ரீராம் கார்த்திக் தந்தையின் சாதிவெறியால் ஏற்பட்ட சம்பவம் இருக்கிறது.
ஊரை விட்டு சென்னை வரும் காதல் ஜோடி விஷ்ணுவும் சாயாதேவியும் ஶ்ரீராம் கார்த்திக், முருகதாஸ் தங்கியிருக்கும் வீட்டின் அருகிலேயே குடி வருகிறார்கள். அவர்களை சாதிவெறி கொண்ட கும்பல் ஆணவக்கொலை செய்ய துரத்துகிறது. சாயாதேவியை கொன்று விட்டு, விஷ்ணுவை அழைத்துச் செல்வது அவர்கள் திட்டம்.
அவர்களின் திட்டம் நிறவேறியதா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
ரீராம் கார்த்திக்குக்கு உள்ளுக்குள் சோகத்தை வைத்துக்கொண்டு நண்பர்களுக்காக சிரித்து வாழும் கதாபாத்திரம். அதை சிறப்பாக நடித்துள்ளார். இரண்டாம் பாதி முழுக்க உணர்வுபூர்வமான நடிப்பு.
சாயாதேவிக்கு படத்தையே தாங்கும் கதாபாத்திரம். முதல் படம் என்பதை நம்ப முடியாத அளவுக்கு அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து இருக்கிறார். முதல் பாதியில் மட்டும் வரும் விஷ்ணுவும் கவர்கிறார். ஆடுகளம் முருகதாஸ், சூப்பர் குட் சுப்பிரமணி, பிரியங்கா சங்கர் மூவருமே காமெடியாக படத்தை நகர்த்துகிறார். உணர்வுபூர்வ காட்சிகளிலும் மூவரும் கலக்கி இருக்கிறார்கள். ஆட்டோ டிரைவராக வந்து காதலை, மனதுக்குள் புதைக்கும் வலினா, சாதிவெறியுடன் அலையும் கஜராஜ் என அனைவரும் கச்சிதமான தேர்வு.
நடிகர் போஸ் வெங்கட் இயக்குனராகி இருக்கும் படம். முதல் படத்திலேயே சில உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்ட கதையை எழுதி, அதை நேர்த்தியாக சொல்ல முயன்றுள்ளார். இடைவேளை காட்சியும் இறுதிக்காட்சியும் அவரை தேர்ந்த இயக்குனராக அடையாளம் காட்டுகிறது.
ஹரி சாயின் பின்னணி இசையும் ஹரிஷ் ஜெ இனியனின் ஒளிப்பதிவும் கதையோடு பயணிக்க உதவுகிறது. சாதிவெறி கொடுமையை பல படங்களில் பார்த்திருந்தாலும் இந்த கதையின் முடிவு அதிர்ச்சி கொடுக்கிறது. சின்ன சின்ன குறைகள் இருந்தாலும் சாதிவெறியுடன் போராடும் காதலையும் நேசத்தையும் இயல்பாக சொன்னதில் படம் மனதை கனக்க செய்கிறது.