காதலர் தினமான வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி ‘ஓ மை கடவுளே’ வெளியாக உள்ளது. வெகு நாட்களுக்கு பிறகு ரசிகர்களை கவரும் ஒரு காதல் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அசோக் செல்வன் ஹீரோவாகவும், ரித்திகா சிங் ஹீரோயினாகவும் நடித்திருக்கும் இப்படத்தில் சின்னத்திரை நயன்தாரா என்று ரசிகர்களால் அழைக்கப்படும் வாணி போஜன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பதோடு, இப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாகிறார்.
வாணி போஜன் நடித்திருக்கும் கதாப்பாத்திரத்தில் முன்னணி நடிகைகளை நடிக்க வைக்க முடிவு செய்த இயக்குநர், அதற்காக பல ஹீரோயின்களிடம் கதை சொல்லியிருக்கிறார். ஆனால், வாணி போஜனின் கதாப்பாத்திரத்தை, அசோக் செல்வன் அக்கா என்று சில காட்சிகளில் அழைப்பது போல் இருந்ததால், பல நடிகைகள் நடிக்க மறுத்திருக்கிறார்கள். ஆனால், வாணி போஜன் எந்தவித பயமும் இல்லாமல், இந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க ஓகே சொன்னாராம்.
இது குறித்து சமீபத்தில் நடைபெற்ற ‘ஓ மை கடவுளே’ பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இயக்குநர் அஷ்வத், “இந்த மேடையில் இருப்பவர்கள் அனவருமே எனது நெருங்கிய நண்பர்கள். அவர்களால் தான் இந்தப்படம் நடந்தது. அசோக் எனது நெருங்கிய நண்பன். அபியிடம் அனுப்பி கதை சொல்ல சொன்னார். அப்படி தான் இந்தப்படம் ஆரம்பித்தது. தயாரிப்பாளர் டில்லிபாபு அவரை முதலில் சந்தித்த போதே லேட்டாகத்தான் போனேன். ஆனால் அவருக்கு கதை பிடித்திருந்தது. எந்த ஈகோ இல்லாமல் ராட்சசனுக்கு பிறகு என் படம் தயாரிக்க ஒத்துக்கொண்டார். அவர் இல்லை என்றால் இந்த மேடை இல்லை. இந்த டீமில் இருக்கும் அனைவருமே தங்கமான மனிதர்கள். லியான் ஜேம்ஸ் என்னோட அலைவரிசையில் இயங்கும் மனிதர். அவருக்கு லவ் என்றால் பிடிக்கும்.
இந்தப்படத்தில் இசை வெகு முக்கியம் அதை அவர் நிவர்த்தி செய்துள்ளார். சாராவை இதுவரையிலும் யாரும் சரியாக பயன்படுத்தவில்லை. இப்படத்தில் அவரை அனைவருக்கும் பிடிக்கும். வாணி போஜன் கேரக்டருக்கு நிறைய பேரை அணுகினோம் ஆனால் அக்கா எனும் வார்த்தையால் யாரும் செய்ய மாட்டேன் என்றார்கள். ஆனால் வாணி போஜன் அவரே முன்வந்து இந்தக் கதாப்பாத்திரத்தை செய்தார். அவர் இந்தப்படத்திற்கு பிறகு எல்லோருடைய கிரஷ்ஷாக மாறி விடுவார். ரித்திகா சிங் இறுதிசுற்றுக்கு பிறகு இந்தப்படத்தில் அனைவருக்கும் அவரைப்பிடிக்கும். அவர் மிகச்சிறந்த நடிகர். அவர் மிக எளிமையாக இருந்தார். மிக மிக அர்ப்பணிப்பானவர். அவர் நிறைய தமிழ் படங்கள் செய்ய வேண்டும். பூபதி என்னுடைய காலேஜ் ஜீனியர் என்னுடைய குறுமபடத்திலிருந்து அவர் தான் எடிட்டர். இனிமேல் செய்யும் படங்களுக்கும் அவர் தான் செய்வார். அசோக் என் மச்சான் நாளைய இயக்குநரிலிருந்து தெரியும். நான் என்ன சொன்னாலும் செய்வேன். இந்த படம் அனைவருக்கும் பிடிக்கும்.” என்றார்.
நடிகர் அசோக் செல்வன் பேசுகையில், “என் அக்கா அபிநயா செல்வம் பிரில்லியண்ட். என்னுடைய பெஸ்ட் ஃபிரண்ட். ஆனால் மிகப்பெரும் தைரியமாக படத்தை எடுத்திருக்கிறார். அஷ்வத் என் நண்பன். மிகச்சிறப்பாக எழுதும் திறமை இருக்கிறது. ராட்சசன் போன்ற படத்திற்கு பிறகு எங்களுடன் இணைந்து படம் செய்ததற்கு டில்லிபாபு சாருக்கு நன்றி. காதல் படத்திற்கு இசை வெகு முக்கியம் லியான் ஜேம்ஸ் பாதி படம் முடிந்த பிறகு தான் உள்ளே வந்தார். ஆனால் அத்தனை அற்புதமாக இசையமைத்துள்ளார். விது, பூபதி எல்லோருமே நண்பர்கள். இவர்களுடன் வேலை பார்த்தது சந்தோஷம். வாணி அட்டகாசமாக நடித்திருக்கிறார். அவருடன் நடித்தது மகிழ்ச்சி. ரித்திகா இப்போது நெருக்கமான நண்பியாக மாறிவிட்டார்.
அவருடன் இன்னும் நிறைய படங்கள் செய்ய ஆசைப்படுகிறேன். சாராவை முதலில் நான் வேண்டாம் என்று சொன்னேன். ஆனால் படம் பார்த்த பிறகு அவர் தான் மனதில் நின்றார். சினிமாவில் பணம் சம்பாதிக்க ஆசை இல்லை. அதனால் தான் இந்த பெரிய இடைவெளி. எனக்கு நிறைய வித்தியாசமான கேரக்டர், கதைகள் செய்ய ஆசை. இப்போது காதல் கதைகள் எதுவும் வருவதில்லை அதனால் இந்தப்படம் செய்யலாம் எனத் தோன்றியது. எனக்கு பிடித்து ஆசைப்பட்டு செய்த படம் உங்களுக்கும் பிடிக்கும். அஷ்வத் 8 வருடம் ஒன்றாக பயணிக்கும் நண்பன். அஷ்வத் இந்தப்படம் செய்கிறான் என்பதால் எனக்கு பயமே இல்லை, அந்தளவு முழுமையாக அவனை நம்புகிறேன். படத்தில் முக்கியமான பாத்திரம் ஒன்னு இருக்கு. அதுக்கு விஜய் செதுபதி அண்ணாகிட்ட கேட்டோம். நான் நல்லா வர வேண்டும் என்று மனதார நினைப்பவர். கதையே கேட்காமல் எனக்காக நடிக்க ஒப்புக்கொண்டார். அவருக்கு பெரிய மனசு, எளிமையா வந்து நடிச்சு கொடுத்திட்டு போயிட்டார். விஜய் சேதுபதி இந்தப்படத்தில் கடவுளாக நடிக்கிறார். மற்றதெல்லாம் திரையில் பாருங்கள்.” என்றார்.
தயாரிப்பாளர் டில்லி பாபு பேசுகையில், “எங்கள் கம்பனியில் வித்தியாசமான படங்கள் எடுக்க வேண்டும் என்பது தான் எங்கள் இலக்கு. ’ராட்சசன்’ படத்திற்கு பின்னர் அடுத்து என்ன செய்யலாம் எனும் போது அஷ்வத் சொன்ன கதை எங்களுக்கு பிடித்தது. உடனே முடிவு செய்து இப்படத்தை ஆரம்பித்தோம். எல்லாமே கடவுளின் செயல் போல் தான் நடக்கிறது. இப்படம் நம் வாழ்வில் நடக்கும் கதைதான் ஆனால் அதை சொல்லும் விதத்தில் நேர்த்தி இருக்கும். இயக்குநர் அழகாக இயக்கியுள்ளார். ரித்திகா சிங் தான் இந்தக் கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று விரும்பினோம். அவரும் மிகுந்த ஒத்துழைப்பு தந்தார். மிக மிக இயல்பான நபராக இருந்தார். அர்ப்பணிப்பு மிக்கவரகா இருந்தார். அசோக் செல்வனுக்கு இந்தப்படம் முக்கியமான படமாக இருக்கும். அவருடைய திறமை இன்னும் முழுமையாக வெளிப்படவில்லை என்றே சொல்வேன். அவர் இன்னும் பல உயரங்கள் செல்வார். வாணி போஜனை தமிழில் அறிமுகப்படுத்துவதில் பெரிய மகிழ்ச்சி. தெலுங்கில் இருந்து வந்து படம் பார்த்து ரிமேக் செய்ய இப்போதே அணுகினார்கள். படம் ரிலீஸாகும் முன்பே எங்களுக்கு இந்த மரியாதை கிடைத்திருக்கிறது. அதை பெருமையாக நினைக்கிறேன்.” என்றார்.
நடிகை வாணி போஜன் பேசுகையில், “ஒரு படம் செய்யும் போது அந்தப்படத்தில் படத்தில் வேலை செய்யும் அனைவருக்கும் அந்தப்படம் பிடித்திருக்க வேண்டும். இந்தப்படம் அப்படிபட்ட படம். நான் பார்ப்பவர்களிடம் எல்லாம் முதலில் ’ஓ மை கடவுளே’ ரிலீஸ் ஆக வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தேன். எல்லோரும் கேட்டார்கள் அப்படி என்ன படம் அது, என்று. இது எங்கள் படம், நாம் தான் தயாரிப்பாளர் போல் இருக்கிறோம் என்று அசோக்கிடம் சொன்னேன். எல்லோரும் நண்பர்கள் போல் இணைந்து இந்தப்படத்தை எடுத்துள்ளோம். கண்டிப்பாக இப்படம் அனைவருக்கும் பிடிக்கும்.” என்றார்.
அக்ஸஸ் பிலிம் ஃபேக்டரி சார்பில் ஜி.டில்லிபாபு மற்றும் ஹாப்பி ஹை பிக்சர்ஸ் சார்பில் அபிநயா செல்வம் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தை சக்தி பிலிம் ஃபேகடரி தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது.