,
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31-ந் தேதி தொடங்கியது. இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் ர்.
பிரதமர் மோடி பதில்
அதைத் தொடர்ந்து ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மக்களவையிலும், மாநிலங்களவை யிலும் விவாதங்கள் நடந்தன. அவற்றுக்கு பிரதமர் நரேந்திர மோடி பதில் அளித்து நேற்று இரு அவைகளிலும் பேசினார்.
முதலில் மக்களவையில் அவர் பேசும்போது கூறியதாவது:-
குடியுரிமை திருத்த சட்டம், இந்திய நாட்டில் ஒருவரைக் கூட, அவர் எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் பாதிக்காது. இது சிறுபான்மையினர் நலனுக்கும் தீங்கு விளைவிக்காது.
இந்திய மக்களால் ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட்டவர்கள், நினைத்துப்பார்க்க முடியாததை செய்கிறார்கள். அவர்கள், மக்களை அவர்களது மதத்தின் அடிப்படையில் பார்க்கிறார்கள். நாங்கள் ஒவ்வொருவரையும் இந்தியராகத்தான் பார்க்கிறோம். குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்ட களங்களில், எதிர்க்கட்சிகள் மக்களை தூண்டி விடுகின்றன.
இந்தியா காத்திருக்க முடியாது
பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இனி இந்தியா காத்திருக்க முடியாது. அதனால்தான் வேகமாகவும், உறுதியாகவும் தீர்வு காண்பது எங்கள் நோக்கமாக அமைந்துள்ளது.
இந்திய மக்கள் சர்க்காரை (அரசு) மட்டும் மாற்றவில்லை. அவர்கள் சரோக்கரையும் (நடத்தையையும்) மாற்ற விரும்பினர். நாங்கள் பழைய வழிகள் மற்றும் சிந்தனைகளில் பணியாற்றி இருந்தால், காஷ்மீருக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கியது ஒருபோதும் வரலாறு ஆக்கப்பட்டிருக்காது. முத்தலாக் சட்டத்தால் பெண்கள் இன்னும் கஷ்டப்பட்டுக்கொண்டிருப்பார்கள். ராமஜென்ம பூமி பிரச்சினை இன்னும் தீர்க்கப்படாமல்தான் இருந்திருக்கும்.
கட்டுக்குள் விலைவாசி
பொருளாதாரத்தை பொறுத்தமட்டில் இந்த அரசு நிதிப்பற்றாக்குறையை கட்டுக்குள் வைத்துள்ளது. விலைவாசி உயர்வும் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. பெரும்பொருளாதாரம் நிலையாகவே இருக்கிறது.
விவசாயத்துக்கான பட்ஜெட் ரூ.27 ஆயிரம் கோடியாக இருந்தது, இப்போது ரூ. 1½ லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சியில் விவசாயத்துக்கான பட்ஜெட் 5 மடங்காக உயர்ந்துள்ளது. அரசியல் காரணங்களால் சில மாநிலங்கள், பிரதம மந்திரி விவசாயிகள் நிதி திட்டத்தின்கீழ் விவசாயிகள் பலன் அடைவதை அனுமதிக்கவில்லை. விவசாயிகள் நலனில் அரசியல் வேண்டாம். விவசாயிகளின் நலனுக்காக நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம்.
காந்திதான் வாழ்க்கை
2018-ம் ஆண்டு ஏப்ரல்- செப்டம்பரில் அன்னிய நேரடி முதலீடு 22 பில்லியன் அமெரிக்க டாலராக (சுமார் ரூ. 1 லட்சத்து 54 ஆயிரம் கோடி) இருந்தது. 2019 ஏப்ரல்-செப்டம்பரில் இது 26 பில்லியன் டாலராக (சுமார் ரூ.1 லட்சத்து 82 ஆயிரம் கோடி) உயர்ந்துள்ளது. இது இந்தியாவில் அன்னிய முதலீட்டாளர்கள் வைத்துள்ள நம்பிக்கையை பிரதிபலிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பிரதமர் மோடி உரை ஆற்ற தொடங்கியபோது மகாத்மா காந்தியை வாழ்த்தி காங்கிரஸ் எம்.பி.க்கள் போட்ட கோஷத்தை காங்கிரஸ் கட்சி தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சுட்டிக்காட்டி “இது வெறும் டிரைலர்தான்” என்று கூறினார்.
அதற்கு மோடி பதில் அளிக்கையில், “ மகாத்மா காந்தி உங்களுக்கு வேண்டுமானால் டிரைலராக இருக்கலாம். எங்களுக்கு அவர்தான் வாழ்க்கை” என குறிப்பிட்டார்.
மாநிலங்களவையில் பதில்
பின்னர் மாநிலங்களவையில் பதில் அளித்து பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நாட்டை தவறாக வழி நடத்துவது, பொய் பிரசாரம் செய்வது சரியா? குடியுரிமை திருத்த சட்டத்தில் எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு துரதிர்ஷ்டவசமானது.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்களின்கீழ் நடந்த ஜனநாயக விரோத நடவடிக்கைகளை மறைப்பதற்கு முயற்சி நடக்கிறது.
அரசியல் லாபம்
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தால் யாரும் அரசியல் லாபம் அடைய முடியாது. குடியுரிமை திருத்த சட்டத்தின் பெயரால் மக்களை அச்சுறுத்துவதற்கு பதிலாக சரியான தகவல்கள் அளிக்கப்பட வேண்டும்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேசிய மக்கள்தொகை பதிவேடு தயாரிப்பு ஆகியவை வழக்கமான நிர்வாக செயல்பாடுகள்தான். முந்தைய அரசுகளும் இவற்றை செய்துள்ளன. இவற்றில் மக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்க வேண்டாம்.
ஏழைகளுக்கு இழப்பு
2011-ம் ஆண்டு தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிக்கப்பட்டபோது பயோமெட்ரிக் தரவுகள் பெறப்பட்டுள்ளன. தேசிய மக்கள் பதிவேட்டை அரசியல் காரணங் களுக்காக எதிர்ப்பது, நலத்திட்டங்களின் பலன்களை ஏழைகள் இழக்க வைக்கும்.
எல்லா மாநிலங்களும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கு ஒப்புக்கொண்டன. அரசியல் காரணங்களுக்காக இப்போது சில மாநிலங்கள் எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
தீர்மானம் நிறைவேறியது
பிரதமர் மோடியின் பதிலுக்கு பின்னர் இரு அவைகளிலும் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம், குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேறியது.