சிங்கப்பூர் மேடம் டுஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் நடிகை காஜல் அகர்வாலுக்கு மெழுகுச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுக்க அந்தந்தத் துறையில் மிகப் பிரபலமாக இருப்பவர்களின் மெழுகுச் சிலை சிங்கப்பூரில் உள்ள மேடம் டுஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் அமைக்கப்படுவது வழக்கம்.
இந்தியாவின் சார்பில் இதுவரை பிரதமர் நரேந்திர மோடி, சச்சின் டெண்டுல்கர், அமிதாப் பச்சன் விராட் கோலி, மகேஷ் பாபு, பிரபாஸ், சல்மான் கான், ஷாருக் கான், பிரபுதேவா உள்ளிட்ட பல பிரபலங்களின் மெழுகுச் சிலைகள் அந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சிங்கப்பூர் அருங்காட்சியகத்தில் தனக்கு மெழுகுச் சிலை அமையவிருப்பது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார் காஜல் அகர்வால்.
இந்நிலையில் சிங்கப்பூர் மேடம் டுஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் இன்று (05.02.2020) நடிகை காஜல் அகர்வாலுக்கு மெழுகுச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் காஜல் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார். தனது மெழுகுச் சிலையுடன் காஜல் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
தற்போது காஜல், கமல்ஹாசனுடன் இணைந்து ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.