நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் தேசிய குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு, சமீபத்தில் (சி.ஏ.ஏ.) அமலானது.
அதேபோல தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பும் (என்.பி.ஆர்.) அமல்படுத்தப்பட இருக்கிறது. தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.) கொண்டுவரப்பட இருக்கிறது. இதுதொடர்பான ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்ட அரசின் சட்டங்களுக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி வருகின்றன. தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.
அந்த வகையில் தி.மு.க. தலைமையில் ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பெற்று ஜனாதிபதிக்கு அனுப்புவதற்காக கையெழுத்து இயக்கம் நடந்து வருகிறது.
இந்த நிலையில் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்து இருக்கிறார். சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக உங்களை விசாரணைக்கு நேரில் ஆஜராகக்கோரி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளதா?
பதில்:- எனக்கு இன்னும் அங்கிருந்து நோட்டீஸ் வரவில்லை. நோட்டீஸ் வந்த பிறகு என்னுடைய முழு ஒத்துழைப்பை நிச்சயம் வழங்குவேன். எனது விளக்கத்தை அதிகாரிகளிடம் நிச்சயம் தெரிவிப்பேன்.
கேள்வி:- குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பற்றி இதுவரை நீங்கள் கருத்து தெரிவிக்கவில்லையே?
பதில்:- தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு மிக முக்கியமானது, தேவையானதும் கூட. 2010-ம் ஆண்டே இதை காங்கிரஸ் செய்தது. 2015-ம் ஆண்டிலும் நடைமுறைப்படுத்தப்பட்டது. 2021-ம் ஆண்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டாக வேண்டும். நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் உள்நாட்டுக்காரர்கள் யார்? வெளிநாட்டுக்காரர்கள் யார்? என்பது தெரியவேண்டாமா? இது மிக மிக முக்கியமானது. தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு எடுத்துத்தான் ஆகவேண்டும். இதில் மற்றவர்களுக்கு என்ன பிரச்சினை? என்பது தெரியவில்லை.
என்.ஆர்.சி. இன்னும் அமல்படுத்தவில்லை. இதுகுறித்து யோசனை செய்து கொண்டிருக்கிறார்கள். என்.ஆர்.சி.யின் செயல்பாடுகள் என்னவென்பது தெரிந்தபிறகு தான் அதுகுறித்து நாம் சொல்லமுடியும்.
குடியுரிமை திருத்த சட்டம் குறித்து அரசு தெளிவாக சொல்லிவிட்டது. இந்தியாவில் வாழும் மக்களுக்கு இச்சட்டத்தால் எந்தவித பாதிப்பும் கிடையாது. அவர்கள் குடியுரிமைக்கு எந்த பிரச்சினையும் இல்லை. நம் நாட்டுக்கு வரும் வெளிநாட்டுக்காரர்களுக்கு, பக்கத்து நாட்டுக்காரர்களுக்கு குடியுரிமை தரலாமா, வேண்டாமா? என்பதுதான் பிரச்சினை.
இஸ்லாம் மக்களுக்கு இச்சட்டத்தால் பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று பீதியை கிளப்பி இருக்கிறார்கள். இது எப்படி இஸ்லாம் மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும்? என்பதே தெரியவில்லை. இஸ்லாம் மக்களுக்கு இந்த நாட்டில் எந்த அளவுக்கு உரிமை இருக்கிறது என்று சொன்னால், பிரிவினை காலத்தில் இஸ்லாமியர்கள் சிலர் நமது நாட்டில் இருந்து பாகிஸ்தானுக்கு சென்றார்கள். ஆனால் இங்குள்ள இஸ்லாமியர்கள் பலர் ‘இதுதான் என் நாடு, இது தான் எனது ஜென்ம பூமி, இது தான் எனது மண், இறந்தாலும் இங்குதான் இறக்கவேண்டும்’ என்று வாழ்ந்து வருகிறார்கள்.
இப்படி உரிமை கொண்டாடுபவர்களை எப்படி இந்த நாட்டை விட்டு வெளியே அனுப்ப முடியும்? ஒருவேளை இங்குள்ள இஸ்லாமியர்களுக்கு இந்த சட்டத்தால் ஏதாவது பாதிப்பு என்றால், அவர்களுக்காக நான் முதல் குரல் கொடுப்பேன், அவர்கள் பக்கம் நிற்பேன். இச்சட்டத்தால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது.
இந்த விவகாரத்தில் அரசியல் கட்சிகள் தங்களது சுயலாபத்துக்காக, சுயநலத்துக்காக இஸ்லாமியர்களை தூண்டிவிடுகின்றன. இதில் அந்த மத குருக்களும் துணைபோவது மிகவும் தவறான விஷயமாகும். இந்த விவகாரத்தில் மாணவர்களுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன். ஏதாவது போராட்டத்தில் ஈடுபட போவதற்கு முன்பு தீர ஆராய்ந்து, நல்லா யோசித்து உங்களது பேராசிரியர்கள், பெரியவர்களிடம் கேட்டு இறங்குங்கள். இல்லாவிட்டால் அரசியல்வாதிகள் உங்களை பயன்படுத்திக்கொள்ள பார்ப்பார்கள். ஒருவேளை எதையும் ஆராயாமல் போராட்டத்தில் இறங்கிவிட்டீர்கள் என்றால் பிரச்சினை உங்களுக்குத்தான். எந்த போலீஸ் எப்படி இருப்பார்கள்? என்று சொல்லமுடியாது. எப்.ஐ.ஆர். போட்டுவிட்டால் உங்களது வாழ்க்கையே முடிந்துபோகும். இதை மாணவர்கள் நிச்சயம் யோசிக்க வேண்டும்.
கேள்வி:- இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டிருக்கிறதே?
பதில்:- இலங்கையில் இருந்து இங்கு வந்து நீண்டகாலமாக அகதிகளாக வாழ்பவர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்பட வேண்டும். இலங்கையில் வாழும் தமிழர்களை நாம் தொந்தரவு செய்யக்கூடாது. அவர்களை ‘மைனாரிட்டி’ என்று குறிப்பிட்டு குடியுரிமை வழங்கினால், அங்கு அவர்களுக்கு பிரச்சினை நேரும். ஏனென்றால் அவர்கள் சோழர் காலத்தில் இருந்து இலங்கையில் இருக்கிறார்கள். எனவே அவர்களை நாம் தொந்தரவு செய்யக்கூடாது.
மேற்கண்டவாறு அவர் பதில் அளித்தார்.
வருமான வரி தொடர்பான வழக்கில் நடிகர் ரஜினிகாந்த் தாக்கல் செய்த பதில் மனுவில் கந்துவட்டி வழங்கியதாக அவர் குறிப்பிட்டிருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில், ‘நீங்கள் வருமான வரி சரியாக கட்டவில்லை. அதற்காக உங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்றும், குறைந்த வட்டிக்கு பலருக்கு கடன் தந்திருப்பதாகவும் கூறப்படுகிறதே?’ என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு ரஜினிகாந்த், ‘வருமான வரியை உண்மையாக, நேர்மையாக செலுத்துபவன் நான். அது வருமான வரித்துறைக்கே தெரியும். நான் சட்டவிரோதமாக எந்த காரியமும் செய்யவில்லை. இதை எந்த ஆடிட்டரிடமும் நீங்கள் கேட்டு தெரிந்துகொள்ளலாம்’ என்று பதிலளித்தார்.