புஷ்கர் பிலிம்ஸ் சார்பில் புஷ்கரா மல்லிகார்ஜுனையா தயாரிப்பில், கன்னட சினிமாவில் வளர்ந்து வரும் நடிகரான ரக்ஷித் ஷெட்டி நடிப்பில் வெளியாகியிருக்கும் கன்னட திரைப்படத்தின் தமிழ் டப்பிங்கான ‘அவனே ஸ்ரீமன் நாராயாணா’ எப்படி என்பதை பார்ப்போம்.காணாமல் போன புதையலை கண்டுபிடிக்கும் முயற்சியில், இரண்டு கொள்ளை கும்பல் 15 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது. அதே சமயம், புதையலை மறைத்துவிட்டு இறந்து போன நாடக நடிகர்களின் வாரிசுகளை கண்டுபித்து கொலை செய்யும் முயற்சியிலும் அந்த கும்பல் இருக்க, அவர்களுக்கு பயந்து 15 ஆண்டுகளாக நாடக நடிகர்களின் வாரிசுகள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த கதையில் எண்ட்ரியாகும் போலீஸ் இன்ஸ்பெக்டரான ஹீரோ ரக்ஷித் ஷெட்டி, இரண்டு கொள்ளை கும்பலுக்கு போக்கு காட்டி, தனது புத்திசாலித்தனத்தால் புதையலை கண்டுபிடிப்பதோடு, ஆபத்தில் இருக்கும் நாடக கலைஞர்களின் வாரிசுகளை எப்படி காப்பாற்றுகிறார், என்பது தான் கதை. இதை பேண்டஸி அட்வெஞ்சர் ஜானர் படமாக, அதே சமயம் காமெடியாக சொல்லியிருப்பது தான் இப்படத்தின் ஹைலைட்.
கன்னட படத்தின் டப்பிங் என்பது தெரியாதவாறு திரைக்கதையும், காட்சிகளும் கையாளப்பட்டிருந்தாலும், படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் மூலம் டப்பிங் படம் என்ற உணர்வு ஏற்பட்டு விடுகிறது.
ஹீரோ ரக்ஷித் எறும்பை போல சுறுசுறுப்பாக இருப்பதோடு, படத்தின் முதல் காட்சியில் வெளிப்படுத்தும் எனர்ஜியை படத்தின் இறுதிக் காட்சி வரை மெயிண்டெய்ன் செய்திருக்கிறார். எந்த பந்து போட்டாலும் சிக்ஸ் அடிப்பேன், என்பதை தனது நடிப்பு மூலம் வெளிக்காட்டியிருக்கும் ரக்ஷித் ஷெட்டியின் நடிப்பு மற்றும் கதாப்பாத்திரத்தை அவர் கையாண்ட விதம் ரசிகர்களுக்கு எனர்ஜியை கொடுக்கிறது.
ஹீரோயின் ஷான்வி ஸ்ரீவத்சா, கதாநாயகியாக அல்லாமல் ஒரு கதாப்பாத்திரமாக படம் முழுவதும் வலம் வருகிறார். தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்.
வில்லன்களாக நடித்திருக்கும் பாலாஜி மனோகர், பிரமோத் ஷெட்டி, மதுசூதன் ராவ் ஆகியோரும், அச்யுத் குமார், கோபாலகிருஷ்ண தேஷ்பாண்டே ஆகியோரும் தங்களுக்கான பணியை சிறப்பாகவே செய்திருக்கிறார்கள். தமிழுக்கு புதியவர்களாக இருந்தாலும், இவர்களது நடிப்பு அதை மறைத்துவிடுகிறது.
கரம் சாவ்லாவின் ஒளிப்பதிவு, அஜநீஷ் லோக்நாத் & சரண்ராஜ் ஆகியோரின் இசை, உல்லாஸ் ஹைதூரின் கலை உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்களின் பணி படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. குறிப்பாக கலை இயக்குநர் உல்லாஸ் ஹைதூரின் கொள்ளையர்களின் கோட்டை செட் மற்றும் அமராவதி கிராமம் உள்ளிட்டவை படத்தின் ஹைலைட். பீரியட் படம் என்பதை வருடம் குறிப்பிடாமலே நாம் உணர்ந்துக் கொள்ளும்படி ஒளிப்பதிவாளர் கரம் சாவ்லாவின் லைட்டிங் அமைந்திருக்கிறது. பின்னணி இசை மற்றும் பாடல்களும் ஓகே ரகம் தான்.
புதையலை கண்டுபிடிக்கும் ஹீரோ, என்ற ஒருவரியை வைத்துக் கொண்டு ரக்ஷித் ஷெட்டி மற்றும் தி செவன் ஆட்ஸ் குழு எழுதியிருக்கும் இந்த கதையை ஒரு படமாக மட்டும் அல்லாமல், இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம், என்று பல பாகங்கள் எடுப்பதற்கான எலிமெண்ட்ஸ் இருக்கிறது. ஆனால், இந்த ஒரே பாகத்தில் அனைத்தையும் சிதைக்கும் விதமாக இயக்குநர் சச்சினின் திரைக்கதை அமைந்திருக்கிறது.
புதையலை கொள்ளையடிக்கும் நாடக கலைஞர்கள், அவர்களிடம் இருந்து புதையலை கைப்பற்ற கொள்ளை கும்பல் மேற்கொள்ளும் முயற்சியும், தோல்வியும், அதனால் பழிவாங்க துடிக்கும் கொள்ளை கும்பலின் வாரிசுகள், என்று ஹீரோ இல்லாத கதையே சுவாரஸ்யமாக இருக்க, போலீஸாக கதையில் நுழையும் ஹீரோவின் எப்பிசோட் மாஸாகவும், தமாஸாகவும் இருக்கிறதே தவிர, சுவாரஸ்யமாக இல்லாமல் போவது படத்திற்கு மிகப்பெரிய மைனஸ்.
ஹீரோ புதையலை கண்டுபிடித்து விடுவாரா, என்று ஒட்டு மொத்த தியேட்டரே எதிர்ப்பார்த்திருக்க, ஹீரோ கண்டுபிடித்த புதையல் பெட்டியில் கற்கள் இருக்கிறது. பிறகு வில்லன்களிடம் சிக்கிக் கொள்ளும் ஹீரோ, அங்கிருந்து தப்பிக்க, இறுதியில் புதையலோடு கோட்டைக்கு வருகிறார், ஆனால், அவர் எப்படி புதையலை கண்டுபிடித்தார், என்பதை இயக்குநர் படம் முடிந்த பிறகு கூட ரகசியமாக வைத்திருப்பது, ரசிகர்களின் பொருமையை ரொம்பவே சோதித்து விடுகிறது.
ஒரு பக்கம் கதை ரசிகர்களுக்கு புரிய வேண்டும் என்பதில் கவனம் செலுத்தியிருக்கும் இயக்குநர் சச்சின், மறுபக்கம் ஹீரோவையும் ரசிகர்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பதில் கவனம் செலுத்தியிருக்கிறார். இதனால், அதிகரித்த படத்தின் நீளத்தால், படம் பார்ப்பவர்கள் ஆவேச நிலைக்கே சென்றுவிடுகிறார்கள்.
கன்னட சினிமாவில் இப்படி ஒரு படத்தை தயாரித்திருக்கிறார்கள் என்றால், நிச்சயம் அவர்களது முயற்சியையும், உழைப்பையும் பாராட்டியாக வேண்டும். அதே சமயம், அதை சரியான முறையில் சொல்லாமல் சொதப்பியும் இருக்கிறார்கள். குறிப்பாக படத்தின் நீளத்தை நிச்சயம் குறைக்க வேண்டும்.
மொத்தத்தில், வீழ்ச்சியடைந்த கன்னட சினிமாவின் நல்ல முயற்சியாக இருக்கிறது இந்த‘அவனே ஸ்ரீமன் நாராயாணா’