தமிழக பள்ளி மாணவர்கள் மத்தியில் அதிகரிக்கும் புதுவித போதை பழக்கம்-அதிர்ச்சி தகவல்.
வலி நிவாரணி மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து ஊசியாக மாற்றி போதை ஏற்றிக்கொள்ளும் பழக்கம், தமிழக பள்ளி மாணவர்கள் மத்தியில் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் சார்பாக மதுரை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் ஆனந்த் செய்தியாளர்களிடம் பேசினார்.
தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் போதைப் பழக்கம் சமீப காலமாக அதிகரித்து வருவதாக அவர் கூறினார். மேலும், புதுக்கோட்டையில் வலி நிவாரணி மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து அதனை போதை ஊசியாக மாற்றி போதை ஏற்றிக்கொள்ளும் பழக்கத்தை மாணவர்கள் மத்தியில் பரப்பியதாக சுமார் ஐந்து பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாகவும், இந்த பழக்கம் தமிழகம் முழுவதும் பரவி வருவதாகவும் அவர் தெரிவித்தார். இதுகுறித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.