ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி வந்த ‘தனுசு ராசி நேயர்களே’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.
‘பியார் பிரேமா காதல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ஹரிஷ் கல்யாணுக்கு பல்வேறு பட வாய்ப்புகள் வந்தன. அதனைத் தொடர்ந்து ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் அவர் நடித்த ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ திரைப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றாலும், வசூல் ரீதியில் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.
இதனைத் தொடர்ந்து புதுமுக இயக்குநர் சஞ்சய் பாரதி இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார் ஹரிஷ் கல்யாண். இவர் சந்தான பாரதியின் மகன் ஆவார். இயக்குநர் விஜய்யிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்து வந்தவர், இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
‘தனுசு ராசி நேயர்களே’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் ஹரிஷ் கல்யாண், ரெபா மோனிகா ஜான் உள்ளிட்ட பலர் நடித்து வந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள இடங்களில் நடைபெற்று வந்தது. பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசையமைத்து வருகிறார்.
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். நவம்பரில் இந்தப் படம் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.