விஜயின் பிகில் படம் வெளியான அதே 25 ஆம் தேதி கார்த்தியின் ‘கைதி’ யும் வெளியாகின. மேலும் சில படங்கள் தீபாவளிக்கு வெளியாவதாக இருந்தாலும், பிகில் படத்துடன் மோதுவதற்கு தைரியம் இல்லாமல் பின் வாங்கிவிட்டன. ஆனால், கார்த்தியின் ‘கைதி’ மட்டுமே தங்களது கண்டெண்டில் நம்பிக்கை வைத்து படத்தை தைரியமாக ரிலீஸ் செய்தார்கள்.
தியேட்டர்கள் ஒதுக்குவதிலும் சில சிக்கல்களை சந்தித்தாலும், கிடைத்த 300 தியேட்டர்களே போது, இதுவே எங்களுக்கு முதல் வெற்றி, என்று தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு கூறினார். அவர் கூறியதைவிட தற்போது கைதி படத்திற்கு இரட்டிப்பு வெற்றி கிடைத்திருக்கிறது.
விமர்சனம் ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பைக் கொடுத்திருக்கும் ‘கைதி’ படத்தை வாங்கிய அத்தனை விநியோகஸ்தர்களும், தியேட்டர் உரிமையாளர்களும் நல்ல லாபம் பார்ப்பார்ப்பார்கள் என்று கோடம்பாக்க வியாபாரிகள் இடையே பேச்சு அடிபடுகிறது.
இதற்கிடையே, இரண்டாவது வாரத்தில் கைதி படத்திற்கு தியேட்டர்கள் அதிகரிக்கப்பட்டிருப்பதோடு, தமிழகத்தின் முக்கியமான பெரிய திரையரங்குகளில் கூட தற்போது கைதி திரையிடப்பட்டுள்ளது. தமிழகம் மட்டும் இன்றி அமெரிக்காவிலும் கைதி படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைத்திருப்பதால், அங்கேயும் தியேட்டர்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், விஜய் படத்துடன் போட்டி போட்டு கார்த்தி இரண்டாவது முறையாக வெற்றி பெற்றிருக்கிறார். கடந்த 2011 ஆம் ஆண்டு விஜயின் ‘காவலன்’ ரிலீஸான போது தான் கார்த்தியின் ‘சிறுத்தை’ படமும் வெளியானது. இந்த இரண்டு படங்களுக்குமான போட்டியில் சிறுத்தை தான் வெற்றிப் பெற்ற நிலையில், தற்போது ‘பிகில்’ படத்தை ’கைதி’ பின்னுக்கு தள்ளியுள்ளது.