ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் அபுபக்கர் பாக்தாதி கொல்லப்பட்ட விவகாரத்தில் பல்வேறு விசாரணை விவரங்கள் தற்போது தெரிய வந்துள்ளன.
பாக்தாதி யை அமெரிக்கா மட்டுமல்ல ஈராக், துருக்கி உள்ளிட்ட நாடுகளின் உளவு துறைகளும் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் துருக்கி உளவுத்துறை அமைப்புக்கு 2018 பிப்ரவரி மாதம் பாக்தாதி பற்றிய முக்கிய தகவல்கள் கிடைத்தன.
பாக்தாதியின் நண்பர்கள் வட்டாரம் மிக மிகக் குறைவு. இந்த குறைவான நண்பர்கள் வட்டாரத்தில் தான் தனது திட்டங்களை மிகவும் அரிதாக விவாதிப்பார்.
அப்படி பாக்தாதி அவ்வப்போது விவாதிக்கும் அவரது உதவியாளர்களில் ஒருவரான இஸ்மாயில் அல் இதா வி என்பவர் 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் துருக்கி உளவுத் துறையிடம் சிக்கினார்.
அவர் சொன்ன தகவலின் அடிப்படையில்தான் இந்த ஆபரேஷன் நடந்து முடிந்து இருக்கிறது என்கிறார்கள். ஈராக்கிய பல்நோக்கு புலனாய்வுத்துறை இதாவியை பலமுறை விசாரித்ததில் பாக்தாதி பற்றி சில பயனுள்ள தகவல்களை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
இதாவி இஸ்லாமிய அறிவியலில் பிஎச்டி பட்டம் பெற்றவர். 2006 முதல் அல்கொய்தா இயக்கத்தில் இருந்த இதாவி அமெரிக்கப் படைகளினால் 2008ல் கைது செய்யப்பட்டவர். 4 வருட சிறை தண்டனைக்கு பிறகு வெளியே வந்த இதாவி தனது சிரிய நாட்டு மனைவியுடன் சிரியாவுக்கு வந்தார்.
மிகச் சில காலங்களிலேயே ஐஎஸ்ஐஎஸ் தலைவர் பாக்தாதியின் ஐந்து முக்கிய நண்பர்களில் ஒருவராக இருந்தார் இதாவி.
கடந்த ஆறு மாதங்களாக பாக்தாதியின் அசைவுகளை மிக கவனமாக ஈராக் துருக்கி ஆகிய நாடுகளின் உளவு துறைகள் அமெரிக்க உளவுத்துறையின் ஒருங்கிணைப்புடன் கண்காணித்தன.
இதன் மூலம் சிரியாவில் இதிலிப் பகுதியில் அமைந்துள்ள கிராமங்களில் பாக்தாதியின் சுரங்கப்பாதை வீடுகள் மற்றும் அவரது மனைவிகள் குழந்தைகள் தங்கியிருக்கும் வீடுகள் பற்றிய செயற்கைக்கோள் புகைப்படங்கள் எடுக்கப்பட்டன.
இதன் தொடர்ச்சியாகவே கடந்த இரு வாரங்களாக அமெரிக்க ஈராக் துருக்கி உளவு படைகள் இதிலிப் பகுதியை முற்றுகையிட்டு பாக்தாதியின் வீட்டை கண்டுபிடித்தனர்.
ஒசாமா பின்லேடனை எப்படி உடல் வெளியே கிடைக்கவிடாமல் கடலிலேயே வீசி எறிந்தார்களோ அதேபோல பாக்தாதியையும் நினைவுச் சின்னங்களுக்கு இடம் கொடுக்காமல் கடலில் வீசி எறிய அமெரிக்கா முடிவு செய்து அதையும் செய்து முடித்துவிட்டது என்ற தகவல்களும் வெளிவந்து கொண்டுள்ளன.