ஸ்வாமி சரணம்,
முக்கிய அறிவிப்பு
கட்டாயம் முழுவதும் படியுங்கள்
ஆன்லைன் முன்பதிவு கட்டாயம்.
:
சபரிமலை ஐயப்பன் கோயிலின் மண்டலப் பூஜை நவம்பர் மாதம் 15-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த மாதத்தில்தான் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்வார்கள். கார்த்திகை மாதம் முதல் நாளான நவம்பர் 16-ஆம் தேதி கோயிலின் நடை மாலை 5 மணிக்கு திறக்கப்படும். பின்பு, மண்டலப் பூஜை நிறைவடைந்து டிசம்பர் 27-ஆம் தேதி இரவு 10 மணிக்கு கோயிலின் நடை அடைக்கப்படும். பின்பு மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர்-30 ஆம் தேதி மாலை நடை திறக்கப்படும். இந்தக் காலங்களில் அதிகப்படியான பக்தர்கள் சபரிமலையில் கூடுவார்கள் என்பதால் பாதுகாப்பு காரணங்களுக்காக கேரள போலீஸ் இந்தாண்டு புதிய நடைமுறையை கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
திருப்பதி போல ஆன்லைன் முன்பதிவை கட்டாயமாக்க கேரள போலீஸார் முடிவு செய்துள்ளனர். ஏற்கெனவே அமலில் இருக்கும் ஆன்லைன் தரிசன முன்பதிவு கட்டாயம் இல்லாமல் இருந்தது.மேலும் அது இலவசமாக இருந்தது. ஆனால் இந்தாண்டு மண்டலப் பூஜையின்போது அனைத்து பக்தர்களும் கட்டாயம் முன்பதிவு செய்ய வேண்டும் என்ற திட்டத்தை அமல்படுத்த முடிவு மேற்கொள்ளவுள்ளதாக தெரிகிறது.
அதன்படி புதிதாக தொடங்கப்படவுள்ள இணையதள முகவரியில் பக்தர்கள் தங்கள் விவரங்கள், தரிசன நாள், நேரம் அவற்றை குறிப்பிட வேண்டும். பின்பு, முன்பதிவு செய்த பக்தர்களுக்கு “டிஜிட்டல் பாஸ்போர்ட்” வழங்கப்படும். அதனை வைத்து இணையதளததில் இருக்கும் பல்வேறு சேவைகளை பக்தர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். சபரிமலை கோயிலுக்கு தானமும் டிஜிட்டல் பணபரிவர்த்தனை மூலம் மேற்கொள்ளலாம். மேலும், டிஜிட்டல் பாஸ்போர்ட்டை பிரிண்ட் எடுத்துக்கொண்டு சபரிமலைக்கு வரவேண்டும்.
முன்பதிவு கட்டணமாக நபர் ஒருவருக்கு ரூ.100 செலுத்த வேண்டும்
ஆனால், தரிசனம் முடிந்து திரும்பும்போது ரூ.85 மதிப்புள்ள அரவண பாயாசத்தை பெற்றுக்கொள்ளலாம். அதேபோல கூட்டத்தை கட்டுப்படுத்த பல்வேறு ஆலோசனைகளையும் கேரள மாநில போலீஸார் மேற்கொண்டுள்ளனர்.