விஜய் நடிப்பில் படங்கள் வெளிவரும்போது எல்லாம் ஆளுங்கட்சி இடையூறு, பஞ்சாயத்துகள், வருமான வரித்துறை சோதனைகள் இவை அனைத்தும் இல்லாமல் வெளிவருவதில்லை. விஜய்யின் பிகில் படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனத்திடமிருந்து வாங்கி விநியோகம் செய்யும் உரிமையைப் பெற்றிருக்கும் ‘ஸ்கிரீன் சீன்’ நிறுவனம் மற்றும் அந்நிறுவனத்துக்குப் பணம் கொடுத்தவர்களை கண்காணிப்பு வளையத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது வருமான வரித்துறை.
விஜய்யும், பிரச்சினையும் பிரிக்க முடியாதது என்ற எண்ணம் கத்தி படம் தொடங்கி சர்கார் படம் வரை தொடர்கதையாக இருந்து வருகிறது. தீபாவளி பண்டிகைக்கு வெளிவர உள்ள பிகில் திரைப்படமும் அதற்கு விதிவிலக்கு இல்லை என்று கிடைக்கும் தகவல்கள் சொல்லாமல் சொல்கின்றன. பிகில் சம்பந்தமான செய்திகளை நாம் வெளியிட்ட போது நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு பின்னர் விஜய்க்கு எதிரான ஆட்டம் தொடங்கப்படலாம் என்று குறிப்பிட்டு இருந்தோம்.
தமிழ் சினிமாவில் விழாக்காலங்களில் வருகின்ற புதிய திரைப்படங்களுக்கு சிறப்பு காட்சிகள் திரையிட தமிழக அரசு அதிகாரபூர்வமாக அனுமதியளித்து வந்திருக்கிறது. அதனைப் பயன்படுத்தி சென்னை மற்றும் முக்கியமான நகரங்களில் அதிகாலை காட்சி திரையிடப்படுவது உண்டு. இவ்வருட தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இரண்டு நாட்களுக்கு முன்னதாக விஜய் நடித்துள்ள பிகில், கார்த்தி நடித்துள்ள கைதி ஆகிய இரண்டு படங்கள் மட்டும் ரிலீஸாகின்றன.