டெல்லி: நாடு முழுவதும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் சேர பாடவாரியாக ஒற்றை நுழைவுத்தேர்வு கொண்டுவரப்பட உள்ளது. இந்த தகவலை மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார்.
தற்போது நாடு முழுவதும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் சேர தனித்தனியாக நுழைவுத் தேர்வு உள்ளது. அதுவும் சில பாடங்களுக்கு மட்டுமே நுழைவுத் தேர்வு என்பது உள்ளது.
கலை மற்றும் அறிவியல் பாடங்களுக்கு நுழைவுத் தேர்வு என்பது கிடையாது. பொறியியல், மருத்துவம், வேளாண் படிப்புகள், மேலாண்மை படிப்புகளுக்கு மட்டுமே நுழைவுத்தேர்வு உள்ளது.
2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் 2021 முதல் அஸ்ஸாமில் அரசு பணி இல்லை!
பல்கலைக்கழகங்களில் சேர
இந்நிலையில் புதிய கல்விக்கொள்கையின் படி நாடு முழுவதும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் சேர ஒற்றை நுழைவுத்தேர்வு கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பாட வாரியாக இந்த நுழைவுத் தேர்வுகளை நடத்த முடிவு செய்துள்ளது. இந்த தேர்வுகளை தேசிய தேர்வு முகவை நடத்த உள்ளது.
பாடவாரியாக தேர்வு
இது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “புதிய கல்விக்கொள்கை பரிந்துரைப்படி நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் சேர பாடவாரியாக நுழைவுத்தேர்வு கொண்டுவரப்படும். இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தும்.
2லட்சம் பரிந்துரைகள்
இதற்காக நடத்தப்பட உள்ள NEP – 2020ன்படி, மாணவர்கள் சேர விரும்பும் குறிப்பிட்ட பாடத்தில் மாணவர்களின் திறனை சோதிக்கும் வகையில் இருக்கும் இந்த தேர்வு ஆண்டுக்கு சில முறை நடத்தப்படும். இதற்காக 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பரிந்துரைகளை ஆய்வு செய்யும் பணி முடிந்துவிட்டது. NEP – 2020 தேர்வு வரைவுக்கு நாங்கள் விரைவில் தயாராக இருப்போம்.
உயர்கல்வி பரிந்துரை
புதிய கொள்கையை இறுதி செய்வதற்கான இறுதி கட்டத்தில் நாங்கள் இருக்கிறோம். உயர்கல்விக்கான பரிந்துரைகளை ஆய்வு செய்ய பெங்களூரில் ஒரு அலுவலகத்தை அமைத்தோம், அதே நேரத்தில் பள்ளி கல்விக்காக, சிபிஎஸ்இ தலைவர் அனிதா கார்வாலின் கீழ் ஒரு குழு அறிக்கையை இறுதி செய்தது. ஐந்து நாட்களுக்கு முன்பு, நான் கல்வி செயலாளர்களையும் ஒரு சிபிஎஸ்இ குழுவையும் சந்தித்து ஆலோசனை நடத்தினேன்.
பிரதமர் ஒப்புதல் தேவை
இந்த பொதுவான தேர்வு மாணவர்களின் சுமையை குறைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். ஒரு முற்போக்கான மற்றும் முற்றிலும் இந்தியாவை மையமாகக் கொண்ட இந்த புதிய கல்விக் கொள்கையை நான் நம்புகிறேன். பிரதமரிடமிருந்து ஒப்புதல் கிடைத்தவுடன் அதை விரைவில் அறிவிப்போம்.
தேசிய கல்விக் கொள்கை
தற்போது, இந்தியாவில் ஒரு மாணவர் கல்லூரி படிப்பில் சேர விரும்பினால், சேர விரும்பும் பல்கலைக்கழகங்களுக்கு ஏற்ப பல நுழைவுத் தேர்வுகளுக்கு தயாராக வேண்டும். அல்லது கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சேர பல முறை பதிவு செய்ய வேண்டும் என்ற நிலை உள்ளது. இந்த தேர்வு மாணவர்களின் சுமையை குறைக்கும் என்பதை தவிர, பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கும் சுமையை குறைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இது தேசிய கல்விக்கொள்கையின் ஒரு பகுதியாகும். இதை சரியான முறையில் அமல்படுத்த வேண்டியது அவசியம்” என்றார்.