ஆஹா.. அரை மணி நேரம்..
சென்னை: தமிழகத்தில் தற்போது 10, 11 மற்றும், பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்கள் தேர்வெழுத 2.30 மணி நேரம் ஒதுக்கப்பட்டு வந்தது. தற்போது, தமிழகத்தில் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
எனவே, 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு எழுதுவதற்கு மாணவர்களுக்கு கூடுதல் நேரம் வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இதன் மூலம், மாணவர்கள் தேர்வெழுத கூடுதலாக அரை மணி நேரம் ஒதுக்கப்பட்டு உள்ளது. எனவே, இனி தேர்வு காலம், 3 மணி நேரம்.
இதுதொடர்பாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், புதிய பாடத்திட்டத்தால் தேர்வெழுத கூடுதல் நேரம் தேவைப்படுகிறது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறைக்கு நிறைய கோரிக்கை கடிதங்கள் வந்தன. எனவே, முதல்வருடன் கலந்து ஆலோசித்து, மாணவர்களுக்கு கூடுதலாக அரை மணி நேரம், வழங்க முடிவு செய்துள்ளோம்.
பொதுத்தேர்வு எழுத மாணவர்களுக்கு கூடுதலாக அரை மணி நேரம் ஒதுக்கீடு அளிக்கப்பட்டு உள்ளது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் இனி 3 மணி நேரம் எழுத அனுமதிக்கப்படுவார்கள். இந்த நடைமுறை நடப்பாண்டிலேயே அமலுக்கு வரும். இவ்வாறு செங்கோட்டையன் தெரிவித்தார்.
முன்னதாக, தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம், குரூப் – 2 மற்றும் குரூப் – 2 ஏ தேர்வுகளுக்கு, பொதுவான பாடத்திட்டம் மற்றும் தேர்வு திட்டத்தை செப்டம்பர் 27ம் தேதி வெளியிட்டது. இரண்டு பிரிவினருக்கும், முதல் நிலை தேர்வும், முதன்மை எழுத்துத் தேர்வும் கட்டாயமாக்கப்பட்டது.
ஆனால் இதில் தமிழ் புறக்கணிக்கப்படுவதாக கூறி, மாற்றங்கள் தேவை என்று கோரிக்கை எழுந்தது. எனவே தேர்வு திட்டத்தில், மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஒரே தேர்வாக அறிவிக்கப்பட்டிருந்த, முதன்மை எழுத்துத் தேர்வு, இரண்டு தேர்வுகளாக மாற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட, முதன்மை எழுத்துத் தேர்வின் முதல் பகுதி, தனித் தாளாகவும், தகுதித் தேர்வாகவும் மாற்றப்பட்டுள்ளது. இந்த தேர்வு, அதிகபட்சம், 100 மதிப்பெண்களுக்கு நடக்கும். இந்த தேர்வில், குறைந்தபட்சம், 25 மதிப்பெண் பெற்றால் மட்டுமே, தகுதி பெற முடியும்.