பிரதமரின் பசுமை வீடு ஆணை வழங்காத பி.டி.ஓ., : பஞ்., செயலாளர்கள் சஸ்பெண்ட்: கலெக்டர் ஆடியோ வைரல்
திருவண்ணாமலை: ‘பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தில், வரும் திங்கட்கிழமைக்குள், பயனாளிகளுக்கு வீடு வழங்கவில்லை என்றால், சஸ்பெண்ட் செய்ய தயாராக இருக்கிறேன்’ என, திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கந்தசாமியின் ஆவேச பேச்சு ஆடியோ, ‘வாட்ஸ் ஆப்’பில் வைரலாக பரவுகிறது.
‘வாட்ஸ் ஆப்’ ஆடியோவில் கலெக்டர் கந்தசாமி பேசியிருப்பதாவது: அனைவருக்கும் வணக்கம், நான் கலெக்டர் பேசுகிறேன். கடந்த வாரம், திருவண்ணாமலை மாவட்ட பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தோம். கடந்த முறை வீடு வழங்கும் திட்டத்திற்கு தகுதியானவர்களுக்கும், பொருளாதார கணக்கெடுப்பில் எடுத்தவர்களுக்கும் வீடு வழங்க அறிவுறுத்தப்பட்டது. ஆனால், அந்த வீடு யாருக்கும் போகமாட்டேன்கிறது. நிறைய புகார்கள் நாள்தோறும் வருகிறது. இன்று(18ல்) நடந்த, விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலும் இது குறித்து புகார்கள் வந்துள்ளன. வருகிற திங்கட்கிழமை தான் உங்களுக்கு கடைசி. நான் இந்த மாவட்டத்தில் இருக்கிறேனா, அல்லது நீங்கள் பணியில் இருக்கிறீர்களா என முடிவு செய்து கொள்ள வேண்டும். திங்கட்கிழமைக்குள் பயனாளிகளுக்கு வீடுகளை ஒதுக்கி தரவேண்டும். இல்லையென்றால், பஞ்., செயலாளர், பி.டி.ஓ., டெபுடி பி.டி.ஓ., உள்ளிட்டோரை, ‘சஸ்பெண்ட்’ செய்ய நான் தயாராக இருக்கிறேன். இதை, நீங்கள் எப்படி வேண்டும் என்றாலும் எடுத்து கொள்ளலாம். நீங்கள் தவறு செய்வதை, பார்த்து கொள்ள நான் இங்கு உட்காரவில்லை. தப்பு செய்பவர்களுக்கு, காவல் காப்பவன் நான் இல்லை. இதுவே கடைசி. இது என்னுடைய உச்சக்கட்ட கோபம். அனைத்து, பி.டி.ஓ.க்களும், பஞ்., செயலாளர்களும் இதை, சீரியசாக எடுத்து கொள்ள வேண்டும். திங்கட்கிழமை காலையில், நீங்கள் வேலைக்கு வந்து விட்டு, மாலையில் வேலையோடு போறீங்களா, இல்லை வேலை இல்லாமல் போகிறீங்களா என, நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள். நான் இதை எதிர்கொள்ள தயாராக உள்ளேன். இவ்வாறு அதில் அவர் பேசியுள்ளார். இந்த வாய்ஸ் மெசேஜை கலெக்டர் சந்தசாமி, அனைத்து பி.டி.ஓ., ‘வாட்ஸ் ஆப்’ குருப்பில் அனுப்பி உள்ளார். இது தற்போது வாட்ஸ் ஆப் குரூப்களில் வைரலாகி வருகிறது.