‘சர்கார்’ படத்துக்குப் பிறகு தெலுங்கு மற்றும் இந்திப் படங்களை ஒப்புக்கொண்ட கீர்த்தி சுரேஷ், கடந்த ஒரு வருடமாக தமிழ் படங்கள் எதிலும் நடிக்காமல் இருந்தார். இதையடுத்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரிப்பில் நடிக்க கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமானார். அறிமுக இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கும் இப்படம் முழுக்க திரில்லர் பாணியில் உருவாகிறது.
இந்நிலையில், கீர்த்தி சுரேஷின் பிறந்தநாளான இன்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்திற்கு ’பெண்குயின்’ என பெயரிடப்பட்டுள்ளது. கீர்த்தி சுரேஷ் கர்ப்பிணி பெண் வேடத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்ய, அனில் கிரிஷ் எடிட் செய்கிறார்.
இதன் படப்பிடிப்பு, கொடைக்கானலில் நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பை முடித்து, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் மூன்றாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.