நகைக் களவாணியுடன் கர்நாடக போலீஸ் கூட்டு ? 12 கிலோ தங்கம் சிக்கியது
திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கடை கொள்ளையன் திருவாரூர் முருகன், காவிரி ஆற்றில் புதைத்து வைத்திருந்த 12 கிலோ நகைகளை ரகசியமாக பறிமுதல் செய்து எடுத்துச் சென்ற கர்நாடக காவல்துறையினர், பெரம்பலூர் போலீசாரிடம் சிக்கினர். நகையைப் பங்கு போட போலீசுடன் நடந்த பேரம் அம்பலமான பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..
திருச்சி லலிதா ஜுவல்லரி நகைகடையின் சுவற்றில் துளையிட்டு 28 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்று ஒரு வாரம் கடந்து விட்ட நிலையில் 7 தனிப்படைகள் அமைத்து திருச்சி போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்த நிலையில்
4 1/2 கிலோ நகையுடன் திருவாரூர் போலீசில் மணிகண்டன் என்பவன் மட்டும் சிக்கினான். அவன் அளித்த தகவலின் பேரில் இந்த கொள்ளை சம்பவத்தில் கில்லாடி கொள்ளையன் திருவாரூர் முருகன், அவனது தம்பி சுரேஷ் உள்ளிட்ட கும்பலுக்கு தொடர்பு இருப்பது வெளிச்சத்திற்கு வந்தது.
சுரேஷை நெருங்கி விட்டதாக காவல்துறையினர் கூறிவந்த நிலையில், அவன் நீதிமன்றத்தில் சரண் அடைந்து போலீசாருக்கு அதிர்ச்சி அளித்தான். கொள்ளையன் திருவாரூர் முருகனை தேடி, டெல்லி, ஆந்திரா, புதுச்சேரி என்று தனிப்படையினர் வலம் வர பெங்களூரில் பதுங்கி இருந்த கொள்ளையன் முருகன் அங்குள்ள நீதிமன்றத்தில் சரண் அடைந்தான்.
சரண் அடைந்த இரு கொள்ளையர்களும் தங்களுக்கும் இந்த கொள்ளை சம்பவத்திற்கும் தொடர்பில்லை என்று அடம்பிடித்து வந்த நிலையில், முருகனை ஆறு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்த பொம்மனஹள்ளி போலீசார் முருகனை உரிய முறையில் விசாரிக்க, லலிதா ஜுவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்ட நகையில் பெரும்பகுதியை காவிரி ஆற்றங்கரையில் புதைத்து வைத்துவிட்டு வந்திருப்பதாக தெரிவித்துள்ளான் முருகன்.
இந்த நகைகளை எல்லாம் தமிழக போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் எடுத்து சென்றுவிட வேண்டும் என்ற திட்டத்துடன், பொம்மனஹள்ளி போலீசார் திருவாரூர் முருகனை அழைத்துக் கொண்டு திருவெறும்பூர் அடுத்த பூசத்துறை காவிரி ஆற்றுபடுகைக்கு சாதாரண உடையில் சென்றுள்ளனர்.
அங்கு முள்செடி போட்டு மூடி வைக்கப்பட்ட இடத்தை தோண்டியபோது அங்கிருந்து 12 கிலோ அளவிலான தங்க நகைகளை கைப்பற்றினர். பின்னர் அந்த நகைகளுடன் பெங்களூருக்கு விரைந்தனர். வழியில் பெரம்பலூர் காவல்துறையினர் நடத்திய வாகன சோதனையில் நகைகளுடன் சிக்கிய பொம்மனஹள்ளி போலீசார், திருட்டு நகைகளை பறிமுதல் செய்து கொண்டு செல்கிறோம் என்று தப்பிச்செல்ல முயன்றுள்ளனர்.
அந்த நகைகள் அனைத்திலும் லலிதா ஜூவல்லரி பெயர் கொண்ட துண்டுச்சீட்டு தொங்கியதால் சந்தேகப்பட்டு அவர்களை காருடன் பெரம்பலூர் ஆயுதப்படை மைதானத்துக்கு அழைத்து சென்று விசாரித்தபோது பொம்மன ஹள்ளி போலீசாரில் சிலர் கொள்ளையன் முருகனுடன் ரகசிய கூட்டு வைத்திருப்பது தெரியவந்ததாக கூறப்படுகிறது.
நகைக்கடை கொள்ளையில் காவல்துறையினர் தன்னை தீவிரமாக தேடுவதை அறிந்த முருகன், தனக்கு தெரிந்த பொம்மனஹள்ளி குற்றப்பிரிவு போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளான். அங்கு ஏற்கனவே நிலுவையில் இருக்கும் கொள்ளை வழக்கு ஒன்றில் காவலில் எடுப்பதுபோல முருகனை அழைத்துச்சென்று, தமிழகத்தில் காவிரி ஆற்றுக்குள் பதுக்கி வைத்துள்ள கிலோ கணக்கிலான நகைகளை கைப்பற்றி தங்களுக்குள் பங்கு போட்டுக் கொள்வது என்றும், முருகனை வழக்கில் இருந்து காப்பாற்றி விடுவது என்றும் திட்டமிட்டுள்ளனர்.
ஒருவேளை தமிழக காவல்துறையிடம் சிக்கினால், தனக்கும் கொள்ளை சம்பவத்திற்கும் தொடர்பில்லை என்றும், நகைகள் ஏதும் தன்னிடம் இருந்து திருச்சி போலீசார் கைப்பற்றவில்லையெனில் திருட்டுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்றாகி விடும் எனவும் திருவாரூர் முருகன் திட்டமிட்டுள்ளான்.
அதிர்ஷ்டவசமாக பெரம்பலூர் போலீசாரிடம் சிக்கியதால் லலிதா ஜுவல்லரி நகை கொள்ளையில் முருகன் மூளையாக செயல்பட்டது ஆதாரத்துடன் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பொம்மனஹள்ளி போலீசாருக்கு களவாணியுடனான கூட்டு குறித்து கர்நாடக மாநில காவல்துறை தலைமைக்கு உடனடியாக விவரிக்கப்பட்டவுடன், அந்த நகைகளை முறைப்படி தமிழக போலீசாரிடம் ஒப்படைக்க தயாராக இருப்பதாக உறுதி அளித்துள்ளனர்.
இதையடுத்து கைப்பற்றப்பட்ட நகைகளை பெங்களூரு நீதிமன்றத்தில் ஒப்படைத்து அவர்கள் அனுமதியுடன் திருச்சி நீதிமன்றத்தில் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து நகைகளுடன் பொம்மனஹள்ளி போலீசார் அனுப்பி வைக்கப்பட்டனர்.
கொள்ளையனுடன் கூட்டு சேர்ந்து ரகசியமாக நகைகளை பங்குபோட நினைத்த திட்டம் தோல்வியில் முடிந்தது. ஒவ்வொருமுறையும் திருவாரூர் முருகன் இதே பாணியில் தான் கொள்ளையடித்த நகைகளை பல்வேறு பகுதி காவல்துறையில் உள்ள சில கருப்பு ஆடுகள் மூலம் பங்கு போட்டு தப்பி வந்துள்ளான். ஆனால் லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவத்தில் போலீசாரின் தொடர் வாகன சோதனையால் நகையை வெளியில் கொண்டு செல்ல முடியாமல் சிக்கிக் கொண்டான் என்கின்றனர் காவல்துறையினர்.
வாகன சோதனை நடத்துவது வாகன ஓட்டிகளை வதைப்பதற்கு அல்ல, இவர்களை போன்ற கேடிகளை அடையாளம் காண்பதற்கு என்று சுட்டிக்காடும் காவல்துறையினர் மீதமுள்ள நகைகளை மீட்கவும் , முருகனின் கூட்டாளிகளை கைது செய்யவும் தீவிரம் காட்டி வருகின்றனர்.