தமிழக உள்ளாட்சி தேர்தல்.. அரசியல் கட்சிகள் போட்டியடக்கூடிய பதவிகள்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு
சென்னை:
தமிழக உள்ளாட்சி தேர்தலில் அரசியல் கட்சிகள் எந்தெந்த பதவிகளுக்கு போட்டியிடலாம் என்பது குறித்து மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பினை தமிழகு மாநில தேர்தல் ஆணையம் வெளியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2016ம் ஆண்டு நடந்திருக்க வேண்டிய உள்ளாட்சி தேர்தல் இது வரை நடைபெறாமல் இருந்து வந்தது. இந்த தேர்தல் மூலம் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கு 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இதில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய 3 அமைப்புகளின் தேர்தலுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மூலம் வாக்குப்பதிவு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கிராமப் பகுதிகளில் உள்ள ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களுக்கு வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளது தேர்தல் ஆணையம்.
இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலில் கட்சி சார்பில் போட்டியிடும் பதவிகள் குறித்து மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணைய செயலாளர் எஸ்.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளின் வார்டு உறுப்பினர்கள், பேரூராட்சி மற்றும் நகராட்சி தலைவர்கள், மாநகராட்சி மேயர்கள், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கு அரசியல் கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடலாம்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.