விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘ சங்கத்தமிழன்’ படத்துக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கான பின்னணி என்ன என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ், நாசர், சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சங்கத்தமிழன்’. விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு விவேக் – மெர்வின் இசையமைத்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்தின் விநியோக உரிமையைக் கைப்பற்றியுள்ள லிப்ரா நிறுவனம், ‘தீபாவளி வெளியீடு’ என அறிவித்துவிட்டது. விரைவில் தணிக்கைச் செய்யப்பட்டுப் படத்தின் வெளியீட்டுத் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளது படக்குழு. இதனிடையே ‘வீரம்’ படத்தால் ‘சங்கத்தமிழன்’ படத்துக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் ‘வீரம்’ படத்தைத் தயாரித்ததும் விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
‘ வீரம்’ சமயத்தில் நடந்தது என்ன?
பல ஆண்டுகள் கழித்து அஜித் – விஜய் இருவரது படங்களும் ஜனவரி 10-ம் தேதி வெளியானது. ‘ஜில்லா’ மற்றும் ‘வீரம்’ படங்கள் ஒரே தேதியில் வெளியானதால், இரண்டு படங்களுக்குமே சிக்கல் ஏற்பட்டது. ’ஜில்லா’ படத்துடன் ‘வீரம்’ வந்ததால் அந்தப் படத்துக்கு நஷ்டம், ‘வீரம்’ படத்துடன் ‘ஜில்லா’ வந்ததால் அந்தப் படத்துக்கு நஷ்டம். இரண்டு படத்தின் தயாரிப்பாளர்களுக்கும் லாபம் தான் என்றாலும், படத்தைப் பெரும் விலை கொடுத்து வாங்கிய விநியோகஸ்தர்களுக்கே நஷ்டம் ஏற்பட்டது.
அந்தச் சமயத்தில் தமிழக அரசிடமிருந்து பெறப்படும் வரிச்சலுகை என்பது படத்தின் வசூலுக்குப் பெரிதும் உதவியது. இரண்டில் ஒரு படத்துக்குக் கொடுத்துவிட்டு, மற்றொரு படத்துக்குக் கொடுக்காமல் இருக்க முடியாது என்பதால் இரண்டு படங்களுக்குமே தமிழக அரசு வரிச்சலுகை வழங்கவில்லை. ஆனால், இரண்டு படத்தின் விநியோகஸ்தர்கள் வியாபாரத்தில் வரிச்சலுகை கிடைத்துவிடும் என்றே கூறியுள்ளனர். ‘ஜில்லா’ படத்துக்கு வரிச்சலுகைக் கிடைக்கவில்லை என்றவுடன், அந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி 10% பணத்தை விநியோகஸ்தர்களுக்கு திரும்ப அளித்துவிட்டார்.
அதே போல், ‘வீரம்’ படத்தின் தயாரிப்பாளர் தனக்கு வரும் விநியோகஸ்தர்கள் தொகையில் 10% பிடித்துவிட்டுக் கொடுங்கள் எனவும் தெரிவித்துவிட்டார். ஆனால், அவர் சொல்வதற்கு முன்பாகவே சேலம் விநியோக உரிமையை 7ஜி சிவா முழுத்தொகையையும் வழங்கிவிட்டார். 10% தொகையைத் திரும்பக் கேட்ட போது கண்டிப்பாகக் கொடுத்துவிடுகிறோம் என்று கூறியுள்ளது விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம்.
‘பைரவா’ படத்தின் போது நடந்த பேச்சுவார்த்தை
தொடர்ச்சியாக 10% தொகையைத் தராமல் இருந்ததால், அடுத்த படத்தின் மீது சரி செய்து கொள்ளலாம் என விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்தச் சமயத்தில் தான் ‘பைரவா’ படத்தைத் தயாரித்தது. அது வெளியாகும் போதும் 7ஜி சிவாவுக்குப் பணம் வழங்கவில்லை. விஜய் படம் பெரிய பட்ஜெட் என்பதால், 7ஜி சிவாவும் எதுவும் கேட்கவில்லை. ஆனால், இது தொடர்பாக ‘பைரவா’ சமயத்திலேயே புகார் ஒன்றையும் வழங்கியுள்ளார். இந்தப் புகார் கடிதம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
‘சங்கத்தமிழன்’ படத்துக்குச் சிக்கல்
‘வீரம்’ சமயத்தில் கொடுக்க வேண்டிய தொகையை, விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திடமிருந்து வாங்கித் தருமாறு தயாரிப்பாளர் சங்கத்துக்கு புதிய புகார் ஒன்றை அளித்துள்ளார் 7ஜி சிவா. இது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இப்போது விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் வெங்கட்ராம ரெட்டி காலமாகிவிட்டதால், என்ன செய்வதென்று பேசி வருகிறார்கள். ஆனால், இந்தத் தொகையைக் கொடுத்தால் மட்டுமே சேலம் ஏரியாவில் படத்தின் வியாபாரம் நடக்கும் என்று தெரிவித்துவிட்டார்கள்.
இதனால் ‘சங்கத்தமிழன்’ பட வெளியீட்டில் சிக்கல் தொடங்கியுள்ளது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்தால் மட்டுமே பட வெளியீடு என்பதில் விநியோகஸ்தர்களும் தெளிவாக இருக்கிறார்கள்.