சென்னை : ‘நான்கு மாதங்களாக பெய்த, தென்மேற்கு பருவமழை, நாளை (அக்., 10) முதல் குறையத் துவங்கும். வடகிழக்கு பருவமழை, இரண்டு வாரத்தில் துவங்கும்’ என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
நாட்டின் முக்கிய பருவ மழையாக கருதப்படும், தென்மேற்கு பருவமழை, ஜூனில் துவங்கியது. நான்கு மாதங்களாக நீடித்து, நல்ல மழை பொழிவை தந்தது. வட மாநிலங்களில், ஓராண்டுக்கு தேவையான தண்ணீரை தந்துள்ளது. நாளை (அக்., 10) முதல், இப்பருவ மழை விடைபெறத் துவங்கும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது: வட மாநிலங்களில் இருந்து, பருவ காற்றின் வேகம் படிப்படியாக குறையும். ஒரு வாரத்துக்குள், தென் மாநிலங்களில், மேற்கில் இருந்து வீசும் காற்று குறைந்து விடும். இதையடுத்து, வரும், 20க்குள், வடகிழக்கு பருவ காற்று துவங்கும். இன்றைய வானிலையை பொறுத்தவரை, தமிழகத்தில் பல பகுதிகளில், வெயிலுடன் கூடிய வறண்ட வானிலை காணப்படும்.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்களில், சில இடங்களில் கன மழை பெய்யும். மற்ற இடங்களில், வெப்ப சலன மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்சமாக, நேற்று (அக்., 10) கிருஷ்ணகிரி மாவட்டம், நெடுங்கல்லில், 10 செ.மீ., மழை பெய்துள்ளது. இவ்வாறு, வானிலை மையம் கூறியுள்ளது.