சீன அதிபரின் வருகையொட்டி அக்டோபர் 11,12ஆம் தேதிகளில் சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நகரின் முக்கிய சாலைகளில் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜி ஜின்-பிங்கும் அக்டோபர் 11-13ஆம் தேதிகளில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்கள். இதற்காக 11ம் தேதி சீன அதிபர் ஜி ஜின்-பிங்கும், பிரதமர் மோடியும் சென்னைக்கு வருகிறார்கள். இதன் காரணமாக சென்னை தொடங்கி மாமல்லபுரம் வரை பாதுகாப்பு ஏற்பாடுகள் வலுப்படுத்தப்பட்டுள்ளது. மொத்த மாமல்லபுரத்தின் சாலைகளும் புதிதாக போடப்பட்டு வேகமாக சீரமைக்கப்பட்டு வருகிறது.
தங்குபவர்களின் விவரம்
அத்துடன் மாமல்லபுரத்தின் முக்கிய சாலைகள் அனைத்தும் சிசிடிவி கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள், ரிசார்ட்டுகளில் தங்குபவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுவருகிறது.
சென்னையில் பாதுகாப்பு
மாமல்லபுரத்தில் இப்படி என்றால் சென்னையிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகப்பெரிய அளவில் செய்யப்பட்டுள்ளது. சீன அதிபர் ஜி ஜின்-பிங் சென்னை வரும் நேரம் எந்த விமானமும் பறக்க கூடாது என்று தடைவிதிக்கப்பட்டுள்ளது.
கனர வாகனங்கள் செல்ல தடை
இது ஒருபுறம் எனில் சீன அதிபரின் வருகையையொட்டி வரும் 11,12ஆம் தேதிகளில் சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி சாலை, அண்ணா சாலை,, படேல் சாலை, ராஜீவ் காந்தி சாலை மற்றும் இசிஆர் சாலைகளில் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
வாகனங்கள் வரக்கூடாது
சீன அதிபர் வருகையையொட்டி . அக்டோபர் 11இல் பகல் 12.30 மணி முதல் 2 மணி வரை பெருங்களத்தூரில் இருந்து ஜிஎஸ்டி சாலைக்கு வாகனங்கள் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பெருங்களத்தூரில் இருந்து நகருக்குள் வரும் வாகனங்கள் மதுரவாயல் புறவழிச்சாலை வழியாக திருப்பிவிடப்படும்.ராஜீவ் காந்தி சாலை,கிழக்கு கடற்கரை சாலை ஆகிய சாலைகளில் உள்ள வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் முன்னேற்பாடுகள் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
100 அடி சாலை
சீன அதிபர் வருகையையொட்டி சென்னையில் தாம்பரம், குரோம்பேட்டை பகுதிகளிலிருந்து வரும் வாகனங்கள் பல்லாவரம் ரேடியல் சாலையை பயன்படுத்தலாம். பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை 100 அடி சாலை வழியாக வாகனங்கள் திருப்பிவிடப்படும்.