பிரபல தெலுங்கு சினிமா காமெடியனும் ஒன்றிரண்டு தமிழ்ப்படங்களிலும் நடித்தவரான வேணு மாதவ் இன்று மதியம் 12.20 மணியளவில் தனியார் மருத்துவமனை ஒன்றில் காலமானார். சில வருடங்களாக கல்லீரல் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்த அவருக்கு வயது 39.
மிமிக்ரி கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய வேணு மாதவ், கடந்த 1996-ம் ஆண்டு ‘சம்பிரதாயம்’ என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் . இவர் இதுவரை200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தெலுங்கு மட்டுமின்றி தமிழிலும் ‘என்னவளே’, ‘காதல் சுகமானது’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் சிரஞ்சீவி துவங்கி பிரபல நடிகர்கள் அத்தனை பேர் படங்களிலும் வேணு நடித்துள்ளார்.
வேணு மாதவ் கடந்த வாரம் தான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய அறிவுறுத்தப்பட்டது, ஆனால் அடுத்த சில நாட்களில் அவரது உடல்நிலை மோசமடைந்தது.
இவரது திடீர் மறைவால் அதிர்ச்சி அடைந்த ஆந்திரத் திரையுலகத்தினர் ‘வி மிஸ் யு வேணுமாதவ்’என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கி அவருக்கு தங்களது இறுதி மரியாதைகளைச் செலுத்தி வருகின்றனர்.ஆந்திராவின் நல்கொண்டா மாவட்டத்தின் கோடாட்டில் பிறந்த வேணு மாதவ் தெலுங்கானாவின் சூர்யாபேட்டை மாவட்டத்தில் வசித்து வந்தார். சமீபத்திய ஆண்டுகளில் தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்தார்.