பிகில் பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசியதற்கு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி ஆதரவு தெரிவித்துள்ளார்.
பிகில் பட நிகழ்சியில், யார் யாரை எங்கெங்கு வைக்க வேண்டுமோ அவரவர்களை அங்கங்கு உட்கார வைக்க வேண்டும் என விஜய் பேசியது அதிமுகவினரை ஆத்திரப்படுத்தியது. இதனையடுத்து உயர்கல்வித்துறை சார்பாக விழா நடந்த சாய்ராம் கல்லூரிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அத்தோடு அதிமுக அமைச்சர்களும் விஜயின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அதிமுகவினரை கண்டித்தும், விஜயை ஆதரித்தும் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ’’நடிகர் விஜய் அரசியல் பேசியதற்காக கல்லூரி நிர்வாகம் அச்சுறுத்தலுக்கு ஆளாகி இருக்கிறது. பிகில் திரைப்பட நிகழ்ச்சி நடத்தியதற்காக கல்லூரிக்கு தரப்பட்ட நோட்டீஸை உயர்கல்வித்துறை திரும்பப்பெற வேண்டும். நடிகர் விஜய் பொதுவாக பேசியதை அதிமுகவினருக்கு எதிராக பேசியதாக அமைச்சர் ஜெயக்குமார் தவறாக புரிந்து கொண்டுள்ளார். அதிமுகவினரும் தவறாக புரிந்து கொண்டுள்ளனர்.
சென்னை சட்டக்கல்லூரி வளாகத்தில் காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர், கருணாநிதி ஆகியோர் பேசியுள்ளனர். அனைவருக்கும் பொதுவானவர் விஜய். அரசியல் கட்சி சார்பில்லாதவர். லட்சக்கணக்காண இளைஞர்களால் ஈர்க்கப்பட்டு இளைஞர்களால் போற்றப்படும் இளம் கலைஞன் விஜய். கல்லூரிக்கு தரப்பட்ட நோட்டீஸை திரும்பப்பெறாவிட்டால் ஆட்சியாளர்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்’’ என எச்சரித்துள்ளார்.