விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகள் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 23-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நாங்குநேரி மற்றும் புதுச்சேரியின் காமராஜர் நகர் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவது என்றும், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டியிடுவது என்றும் திமுக கூட்டணியில் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் விருப்பமனு பெறப்பட்டது
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடவேண்டும் என்று முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகனும், எம்.பி.யுமான கவுதம் சிகாமணி விருப்ப மனு தாக்கல் செய்தார். விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக பொருளாளர் புகழேந்தி, மாவட்ட இலக்கிய அணி தலைவர் ராஜாராமன், விக்கிரவாண்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெய ரவிதுரை, முகையூர் முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.ஜி.சம்பத் உள்பட 22 பேர் விருப்ப மனு கொடுத்தனர்
இந்நிலையில் தற்போது விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரை தேர்வு செய்வதற்கான நேர்காணல் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. விருப்ப மனு தாக்கல் செய்த புகழேந்தி, ரவி துறை உள்பட 12 பேரிடம் நேர்காணல் நடைபெற்றது.. சம்மந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள் மற்றும் எம்.பிக்கள் திமுக நேர்காணலில் கலந்து கொண்டனர்.
நேர்காணலில் திமுக இளைஞர் அணி செயலாளர் உதய நிதி ஸ்டாலின் கலந்து கொள்ளவில்லை.
விக்கிரவாண்டி திமுக வேட்பாளராக விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக பொருளாளர் புகழேந்தி அறிவிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.