சென்னை நுங்கம்பாக்கத்தில் வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 24 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மிதமானது முதல் மிக கன மழை பதிவாகியுள்ளது. இன்று, காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி ஆகிய 15 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும்.
நாளை மதுரை, தேனி உட்பட 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நடப்பு பருவத்தில் 15 விழுக்காடு கூடுதல் மழைப் பொழிவை தமிழகம் பெற்றுள்ளது.
அதிவேக காற்று வீச வாய்ப்பு இருப்பதால் குமரி கடல் பகுதி, மாலத்தீவு மற்றும் தென் தமிழக கரையோர பகுதிகளுக்கு இன்றும் நாளையும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என கூறினார்.