தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் முக்கிய பதவியை குறி வைத்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள மிக முக்கியமான மற்றும் பணம் கொழிக்கும் சங்கங்களில் பிரதானமான ஒன்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம். நூற்றாண்டுகள் பழமையான இந்த சங்கத்தின் மூலமாகத்தான் இந்திய அணிக்கு வீரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். தமிழகத்தில் இருந்து ஒரு வீரர் இந்திய அணிக்கு விளையாட வேண்டும் என்றால் அதற்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் அனுமதி அவசியம். அதோடு மட்டும் அல்லாமல் ஐபிஎல் அணியில் விளையாட வேண்டும் என்றாலும் கூட தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் ஒப்புதல் இல்லாமல் முடியாது.
மேலும் தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் வீரர்களை தேர்வு செய்வதும் இந்த சங்கம் தான். கோடிக்கணக்கில் பணம் புழங்கும் இந்த சங்கத்திற்கான நிர்வாகிகளை தேர்வு செய்ய நாளை மறுநாள் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கடந்த ஞாயிறு அன்று சென்னையில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் செயற்குழு நடைபெற்றது.
இந்த செயற்குழுவில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான தேர்வு நடைபெற்றது. இதில் பிசிசிஐ சீனிவாசனின் மகள் ரூபா குருநாத் தலைவர் பதவிக்கு போட்டியிடுவது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அவரை எதிர்த்து போட்டியிட யாரும் முன்வரவில்லை. இதனால் அவர் போட்டியின்றி தலைவராவது உறுதியாகியுள்ளது. அதே சமயம் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடு ஆயத்தமாகி வருபவர் அசோக் சிகாமணி.
இவர் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் ஆவார். ஏற்கனவே முதல் மகனை எம்பியாக்கிய பொன்முடியும் கூட இன்னொரு மகனை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் துணைத் தலைவராக்கிவிட முயற்சி மேற்கொண்டு வருகிறார். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் அசைக்க முடியாத சக்தியாக விளங்கும் சீனிவாசன், திமுகவிற்கு மிகவும் நெருக்கமானவர்.
அந்த பழக்கத்தின் அடிப்படையில் தனது மகனை எப்படியும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் நிர்வாகியாக்க பொன்முடி முயன்று வருவதாக சொல்கிறார்கள். ஆனால் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் முழுக்க முழுக்க ஒரு சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கும் என்பதால் எப்படி பொன்முடியின் மகன் பொறுப்புக்கு வருகிறார் என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.