காவல் நிலையத்தில் தனது மகன் வெளியே இருக்க உள்ளே கிடுக்குப்பிடி விசாரணையில் இருக்கிறார் பார்த்திபன். இவரிடம் டி.சி மற்றும் ஏசி விசாரணை செய்கிறார்கள். அதில் டி.சி மிகவும் நேர்மையானவர். மனிதாபிமானம் மிக்கவர். ஏசி சற்று முன்கோபக்காரர். இவர்கள் பார்த்திபனை மிகவும் தீவிரமாக விசாரணை செய்கின்றனர்.
இந்த விசாரணையில் பல கொலைகளை பார்த்திபன் செய்திருக்கிறார் என்பது தெரியவருகிறது. இந்த கொலைகளை ஏன் செய்தார்? எப்படி செய்தார்? என்று சொல்வது படத்தின் மீதிக்கதை.
படத்தில் நிறைய கதாபாத்திரங்கள். அவர்கள் அனைவரும் படத்தில் முக்கிய கதாபாத்திரங்கள். ஆனால் அவர்களுக்கும் சேர்த்து பார்த்திபனே நடித்து இருக்கிறார். கேமரா பார்த்திபனை மட்டும் காட்டுகிறது. ஆனால் இவர் மூலமாகவே அனைத்து கதாபாத்திரங்களும் நம் கண்முன் வந்து நிற்கிறது.
எதற்காக பார்க்க வேண்டும் என்று சிந்தித்து திரையரங்குக்கு போகாமல், இந்தப்படத்தில் என்னதான் செய்திருக்கிறார் பார்த்திபன் என்று பொறுமையாக படத்தினை பார்த்தால் படம் உங்களை கவரும்.
பல கேள்விகளை நம் முன் எழுப்பி அதற்கு காட்சிகள் மூலம் தெளிவான விளக்கங்களை கொடுத்திருக்கிறார். கேமரா பார்த்திபனின் எண்ணத்தை மிக தெளிவாய் திரைக்கு கொண்டு வந்திருக்கிறது. கதை ஆசிரியர், இயக்குனர், நடிகர் என அனைத்திலும் வெற்றி பெற்றிருக்கிறார். பார்த்திபன் தயாரிப்பாளராக வெற்றி பெறுவது சினிமா ரசிகர்களிடம் உள்ளது.
பார்த்திபனுக்கு அடுத்து நம்மை ஆச்சர்யப்படுத்துபவர் ரசூல் பூக்குட்டி. துல்லியமான ஒலிகளின் மூலம் பார்த்திபனை சுற்றி இருக்கும் சூழ்நிலையை அழகாக உணர்த்துகிறார். ராம்ஜியின் ஒளிப்பதிவும் அபார உழைப்பு. சுதர்சனின் படத்தொகுப்பில் கச்சிதம் தெரிகிறது. சந்தோஷ் நாராயணன், சத்யாவின் பின்னணி இசையும் படத்துக்கு பலம். இளையராஜாவின் பாடல்களை காட்சிகளின் பின்னணியில் சரியாக பயன்படுத்தியதில் பார்த்திபனின் புத்திசாலித்தனம் தெரிகிறது. காட்சிகளில் இடம்பெறும் சின்ன சின்ன பொருட்களுக்கு கூட கதையோடு தொடர்பு இருக்கிறது.