ஐஎன்எக்ஸ் வழக்கில் அமலாக்கப்பிரிவில் சரணடைய தயாராக இருப்பதாக சிதம்பரம் தாக்கல் செய்த மனுவின் மீது உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கடந்த மாதம் 21-ம் தேதி சிபிஐ அமைப்பால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குகர் முன் நடந்து வருகிறது. 15 நாட்களாக சிபிஐ காவலில் ப.சிதம்பரம் இருந்து வந்தார். செப்டம்பர் 5-ம் தேதி அவர் மீண்டும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்பொழுது, அமலாக்கத்துறையிடம் விசாரணைக்கு அனுப்ப வேண்டும் என சிதம்பரம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் ப.சிதம்பரத்தை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து ப.சிதம்பரம் டெல்லியில் உள்ள திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக கடந்த 5-ம் தேதி நடந்த விசாரணையின்போது, அமலாக்கத்துறையிடம் சரண் அடைய தயாராக உள்ளதாக சிதம்பரம் தரப்பில், மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு குறித்து செப்டம்பர் 12-ம் தேதிக்குள் பதில் அளிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த மனு நீதிபதி அஜய் குமார் குகர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார்.
சிதம்பரத்தை தற்பொழுது காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியமில்லை.ஆனால் தேவைப்படும் பொழுது கட்டாயம் சிதம்பரத்தை கைதுசெய்து விசாரிப்போம். ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் தொடர்பாக சிபிஐ தொடர்ந்த ஊழல் வழக்கில் சிதம்பரம் ஏற்கெனவே நீதிமன்ற காவலில் உள்ளார். எனவே அவர் சாட்சிகளை சீர்குலைக்க வாய்ப்பில்லை எனக் கூறினார். ஐ என் எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் 6 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது அவர்களிடம் விசாரணை நிறைவு செய்த பிறகு, சிதம்பரத்தை காவலில் வைத்து விசாரிக்க கோருவோம். என தெரிவித்தார்.
அப்போது சிதம்பரம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபில் கூறுகையில் :- இந்த வழக்கில் சிதம்பரத்தை கஷ்டப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் அமலாக்கப்பிரிவு செயல்படுகிறது. இந்த வழக்கில் எப்போது வேண்டுமானாலும் சரணடைய சிதம்பரம் தயாராக இருக்கிறார். ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர் நீதிமன்றத்தில் சரணடைய உரிமை உண்டு. தொடர்பாக உச்சநீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளை அளித்துள்ளது என வாதங்களை முன் வைத்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி; ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சட்டவிரோத பணபரிமாற்றம் தொடர்பான வழக்கு முக்கியமானது தான். ஆனால் அதற்கு உரிய நேரம் அவசியம் என நீதிபதி கூறினார்.