சன் பிக்சர்ஸில் மூன்று தினங்களுக்கு முன்பு நடந்த ஒரு அதிரடி சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதன் தலைமை செயல் அதிகாரியாக இருந்த செம்பியனின் ராஜினாமாவை ஏற்க மறுத்த கலாநிதி மாறன் அவர் அனுப்பிய ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளாததோடு அக்கடிதத்தைக் கிழித்துப்போட்டதாகவும் நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து அதன் தலைமை செயல் அதிகாரியாகக் கொடிகட்டிப்பறந்தவர் சாக்ஸ் என்று அழைக்கப்படும் சரத் சக்ஸேனா. பின்னர் ஏற்பட்ட சில நெருக்கடிகளால் அவர் சன் டிவி.யிலிருந்து வெளியேற அதன் பின்னர் அப்பொறுப்புக்கு வந்தவர் செம்பியன். இவர் மறைந்த பிரபல தயாரிப்பாளர் கோவை செழியனின் மகன் ஆவார். சன் பிக்சர்ஸ் உரிமையாளர் கலாநிதி மாறனின் அன்புக்குப் பாத்திரமாக இருந்த செம்பியன் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு, அதாவது அந்நிறுவனம் தயாரித்து வந்த சிவகார்த்திகேயனின் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’படப்பிடிப்பு முடிந்த தினத்தன்று தனது பதவியை ராஜினாமா செய்ததாகத் தெரிகிறது.
துவக்கத்தில் அக்கடிதம் கலாநிதி மாறனின் துணைவியார் காவேரி கலாநிதி கைக்குச் செல்லவே அவரது ராஜினாமா ஏற்கப்பட்டு. அவருக்குப் பதிலாக சாந்தி என்பவர் அப்பதவியில் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கலாநிதி மாறனின் மனைவி காவேரியின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் என்றும் சொல்லப்பட்டது. இந்நிலையில் இன்று காலை வெளியான ஒரு செய்தியின் நிலவரப்படி செம்பியனின் ராஜினாமா குறித்துக் கேட்டு அதிர்ச்சி அடைந்த கலாநிதி மாறன் அக்கடிதத்தைக் கிழித்துப்போட்டுவிட்டு, செம்பியனே அப்பதவியில் தொடர்ந்து நீடிக்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது. அப்பதவியில் நீடிக்கப்போவது செம்பியனா, அல்லது புதியவர் சாந்தியா என்பது குறித்து சன் பிக்சர்ஸ் தரப்பினரே குழப்பத்தில் உள்ளனர்.