அதிமுகவில் 16 மாவட்டச் செயலாளர்கள் அடையாளம் கண்டு களை எடுக்கப்பட உள்ளதாக அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
நாடாளுமன்ற தேர்தல் தோல்வியை கூட எடப்பாடியால் ஜீரனித்துக் கொள்ள முடிந்தது. ஆனால் இடைத்தேர்தல் தோல்வியை அவரால் ஏற்கவே முடியவில்லை என்கிறார்கள். ஏனென்றால் எடப்பாடி பழனிசாமி இடைத்தேர்தல் விவகாரங்களை கவனிக்க தனிப்பிரிவையே நடத்தி வந்தார்.
அவர்கள் ஒவ்வொரு தொகுதிக்கும் தேவையானவற்றை கச்சிதமாக செய்து கொடுத்தனர். அப்படி இருந்தும் 13 தொகுதிகளில் தோல்வி என்பதை எடப்பாடியால் ஏற்க முடியவில்லை. இதற்கு காரணம் அந்தந்த தொகுதிகளுக்கு பொறுப்பாளர்களாக இருந்த கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் தான் என்பதில் எடப்பாடி உறுதியாக இருக்கிறார். இதேபோல் சில மாவட்டச் செயலாளர்கள் கட்சிக்கு மாதம் மாதம் கொடுக்க வேண்டிய விஷயத்தை சரியாக கொடுப்பதில்லை என்று நீண்ட நாட்களாக புகார் உள்ளது.
விரைவில் பொதுக்குழு கூட உள்ள நிலையில் அது முடிந்த பிறகு மாவட்டச் செயலாளர்கள் சுமார் 16 பேருக்கு கல்தா கொடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதே போல் திமுக மற்றும் தினகரன் கட்சியில் இருந்து சிலரை தூக்கி வந்து அதிமுகவில் பதவி கொடுக்கவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. எல்லாம் சரியாக அமைந்தால் தீபாவளிக்கு பிறகு அதிமுகவில் ஒரு மிகப்பெரிய நிர்வாகிகள் மாற்றம் நடைபெறும் என்பதில் சந்தேகம் இல்லை.