மயிலாடுதுறைக்கு ஒரு திருமண நிகழ்ச்சிக்காக வந்த பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கேந்திரிய வித்யாலயாவில் 6-ம் வகுப்பு வினாத்தாளில் ஜாதிப்பிரச்சினை குறித்து இருப்பதாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தவறான தகவலை பரப்பி வருகிறார். இணைய தளம் வாயிலாக தி.மு.க.வினரை கொண்டு இதுபோல் தகவல்களை பரப்பி வருவது கண்டிக்கத்தக்கது என கூறினார்.
இந்தியாவில் பொருளாதார பாதிப்பு என்பது நேருவின் காலத்தில் இருந்தே இருந்து வருகிறது. ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கையை அடுத்து கருப்பு பணம் உள்பட வெளியில் இருந்த பணம் அனைத்தும் வங்கிகளுக்கு வந்து விட்டது. அதைக் கொண்டு தான் சாலைகள் மேம்பாடு, வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
தற்போது எந்த பொருளாதார பாதிப்பும் இந்தியாவில் ஏற்படவில்லை. பொருளாதார முன்னேற்றத்தை நோக்கி தான் இந்தியாவை பிரதமர் மோடி கொண்டு செல்கிறார். எதிர்க்கட்சியினர் இதை தவறான நோக்கத்துடன் விமர்சிப்பதோடு பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர்.
விவசாயிகளின் வங்கி நகைக் கடன்கள் வழங்குவது ரத்து செய்யப்படும் என்று ஒரு தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. ஆனால் அது பொய் என தெரிவித்த எச்.ராஜா, இது போன்ற பொய்யான தகவல்களை விவசாயிகள் நம்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டார்